இந்தியாவும் பட்டம் பறக்க விடுதலும் - ஒரு வரலாற்றுப் பார்வை

  • Sakthi Sekar
  • மனன் கபூர்
    தமிழில்: ரா. சக்தி சேகர்
Kite

பட்டம் பறக்க விடுதல் என்பது ஒரு பொதுவான ஒத்த நிகழ்வாகி விட்டது, அது மகர சங்கராந்தியாகட்டும்(தமிழகத்தில் பொங்கல் பண்டிகை) அல்லது இந்தியச் சுதந்திர தினமாகட்டும். வரலாற்று அடிப்படையிலோ அல்லது எழுத்துப்பூர்வமாகவோ இந்த பண்டிகைகளுக்கும் பட்டம் விடுதலுக்குமான எந்த தொடர்பும் இல்லையெனினும், இது ஒரு நீண்டநாள் வழக்கமாகவே இருந்து வருகிறது. இந்த கட்டுரையின் வாயிலாக, இந்தியத் துணைக்கண்டத்தில் பட்டத்தின் வரலாற்றையும், ஒரு சீன கண்டுபிடிப்பு எவ்வாறு நாடு முழுவதும் பல்வேறு விழாக்களில் முக்கிய பங்கானது என்பது பற்றியும் நாம் தெரிந்துகொள்ளலாம்.

நம்மில் பலருக்கும் வான் நோக்கி உயர்கின்ற அல்லது பறக்கின்ற துடிப்பான பட்டங்களைப் பார்த்து மகிழ்ந்த அனுபவம் இருந்திருக்கும். வசந்தகாலங்கள் வருகின்ற போது, நமது வானம் பெரும்பாலும் பல வண்ணமயமான, பற்பல வடிவங்கள் மற்றும் அளவிலான பட்டங்களால் நிரம்பியுள்ளதைப் பார்த்திருக்க முடியும். சமயங்களில் ஆபத்தான பாதைகளையும் பொருட்படுத்தாமல் நூலறுந்த பட்டங்களின் பின் துரத்திக்கொண்டு ஓடுபவர்களையும் பார்த்திருப்போம். மிகவும் புகழ்பெற்ற பொழுதுபோக்காகவும், விளையாட்டாகவும் திகழ்ந்த இந்த பட்டம் விடுதல் காலப்போக்கில் அதன் புகழை / பிரபலத்தை இழக்கத் தொடங்கியது. ஆனாலும் இன்றும் அது மகர சங்கராந்தி, பைசாகி, சுதந்திரதினம் போன்ற பண்டிகை நாட்களில் பெரியவர்களும் சிறுவர்களும் உற்சாகத்துடனும் ஆர்வத்துடனும் தொடர்ந்து ஈடுபடும் ஒன்றாக இருந்து வருகிறது.

பட்டம் ஒரு எளிய கட்டமைப்பை உடையதென்றாலும், இந்தியத் துணைக்கண்டத்தில் அதன் வரலாறு பல முடிச்சுக்களைக் கொண்டது. இன்றளவும் அதன் தோற்றம் சர்ச்சைக்குரிய ஒன்றாகவே உள்ளது. மெலனேசியா, மைக்ரோனேசியா மற்றும் பாலினீசியாவில் பட்டங்கள் தோன்றியிருக்கலாம் என சில வரலாற்று ஆய்வுகள் கூறினாலும் இவை சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டதாகவே பரவலாக நம்பப்படுகிறது. கிமு 206ம் ஆண்டில் பட்டம் விடுதலைப்பற்றிய ஆரம்பக்காலத்தில் எழுதப்பட்ட குறிப்புகளில், லியு பாங்கின் இராணுவத்தைப் பயமுறுத்த ஹூயின் சாங் ஒரு பட்டத்தைப் பறக்க விட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. பல்வேறு ஆதாரங்களின்படி கிமு 169ம் ஆண்டுகளில் ஹான் வம்ச ஆட்சியில் பட்டம் பறக்கவிடும் வழக்கம் இருந்ததாகத் தெரிகிறது மற்றும் ஹான் சின் என்ற சீன தளபதி முற்றுகையிடப்பட்ட நகரத்தின் மேல் ஒரு பட்டத்தைப் பறக்கவிட்டு தன் இராணுவம் நகரின் சுற்றுச்சுவரைக் கடப்பதுக்குத் தேவைப்படும் சுரங்கப்பாதையின் தூரத்தைக் கணக்கிட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. காலப்போக்கில் பிற கலாச்சாரங்களுடனும், பண்டங்களுடனும் ஏற்பட்ட தொடர்பின் வழியாகப் பட்டங்கள் இந்தியத் துணைக்கண்டத்தை வந்தடைந்தன.

Kite

பட்டங்கள் கிழக்கிலிருந்து பட்டுப்பாதையின் வழியாக வந்த புத்த மிஷனரிகளின் மூலமே இந்தியா வந்ததாக நம்பப்படுகிறது. அதனைத் தொடர்ந்து அவை அரேபியா மற்றும் ஐரோப்பா தொலைதூர நாடுகளையும் சென்றடைந்தன. பண்டைய இந்திய இலக்கியங்களில் பட்டம் பற்றிய குறிப்புகளை 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மராட்டியத் துறவியும் கவிஞருமான நமதேவாவின் கவிதைகளில் காணமுடிகிறது. அவரின் கதை மற்றும் கவிதைகளில் பட்டம், குடி (Gudi) என்ற பெயரில் அழைக்கப்பட்டதோடு அவை காகிதத்தில் இருந்து செய்யப்பட்டன என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மராட்டியக் கவிஞர்களான தசோபந்த் மற்றும் ஏகநாதா ஆகியோரது பாடல்கள் / கவிதைகளில் பட்டங்களை பற்றி எழுதப்பட்ட குறிப்புகள் உள்ளன, இரண்டிலும் அவை வாவடி என்ற பெயரில் அழைக்கப்பட்டுள்ளது. மேற்கு இந்தியாவின் கவிஞர்களோடு, அவாத் (Awadh) பிராந்தியத்தைச் சேர்ந்த இந்தி கவிஞர் பிஹாரியின் சத்சாயிலும் பட்டங்களைப் பற்றிய குறிப்புகள் உள்ளன.

17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கவிஞர் துளசிதாஸ், தன் காவிய கவிதையான ராம்சரத்ரமணத்தில் பட்டங்களைப் பற்றிக் குறிப்பிட்டதோடு, இந்திரலோகத்திற்குப் பறந்து சென்ற ராமரின் பட்டத்தை அனுமன் எவ்வாறு மீட்டு வந்தான் என்பது பற்றிய குறிப்பையும் எழுதியுள்ளார். தன் கவிதையில் அவர் அதனை சாக் (Chagg) என்று அழைக்கிறார். மேற்கு இந்தியாவில் ஒரு வித்தியாசமான சுதந்திரம் - பட்டம் பறக்க விடுதல் ( A Different Freedom - Kite Flying in West India) என்ற நூலின் ஆசிரியர் நிகிதா தேசாயின் கூற்றுப்படி, ராமாயணம் மற்றும் வேதங்களிலும் பட்டங்களைப் பற்றிய குறிப்புகள் உள்ளன.

Kite

முகலாயர்களின் காலத்தில் பட்டம் பறக்கவிடுதல் என்பது ஒரு விளையாட்டாக மாற்றமடைந்தது, முதலில் பிரபுக்களுக்கிடையேயும் பின் அனைவரிடத்திலும். பிரபலமடைந்து கொண்டே சென்றதால் அவற்றின் வடிவமைப்பும் சிறந்த காற்றியத்துக்கு தக்கவாறு மேம்படுத்தப்பட்டது. அக்காலகட்டத்தைச் சேர்ந்த முகலாய ஓவியங்களும் சிறிய மாதிரிகளும் ஆண் பெண் என இருபாலரும் பட்டம் பறக்க விடுவதைக் காட்டுகின்றன. 1812 ஆம் ஆண்டில் அலகாபாத்தில் மூன்று வருட நாடுகடத்தலுக்குப் பின் ஜஹாங்கிர் டெல்லிக்குத் திரும்பிய போது அவரது தாயார் அவருக்கு ஒரு சடாரை (Chaadar) வழங்கினார், அந்த நிகழ்வைக் கொண்டாடுவதற்காக நகர மக்கள் அனைவரும் பட்டங்களைப் பறக்கவிட்டனர். இன்றளவும் இது ஃபூல் வலோன் கி சேர் என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. மவுலானா அபுல் ஹலீம் ஷரரின் மொழிபெயர்க்கப்பட்ட படைப்பான லக்னோ: ஒரு கிழக்கத்தியக் கலாச்சாரத்தின் இறுதிக்கட்டம் என்ற நூலில் 18 ஆம் நூற்றாண்டில் மன்னர் முதலாம் ஷா ஆலமின் ஆட்சிக்காலத்தில் பட்டங்களின் மீதான ஆர்வம் வளர்ந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். அவரது குறிப்புகளின்படி சீன விளக்குகளை ஒத்த துக்கல்கள் (Tukkals) 18 ஆம் நூற்றாண்டில் சண்டை பட்டங்களாக விரும்பப்பட்டதென்றும், படாங் (Patang) என்ற சொல் சிறந்த துக்கல்களை குறிக்கப் பயன்பட்டதென்றும் தெரிய வருகிறது.

முகலாயப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகும் பட்டம் விடும் பராம்பரியமானது தொடர்ந்தது. பிறகு அது மகர சங்கராந்தி, உத்ராயண் மற்றும் பஞ்சாப் பிராந்தியத்தில் பசந்த் பஞ்சாமி, பைசாகி போன்ற பண்டிகைகளின் போது நடைபெறும் நிகழ்வாகிப்போனது. இன்றைய நவீன பட்டம் இந்தியா காலனித்துவ ஆட்சியின் கீழ் இருந்த போது உருவானது, மேலும் அவற்றின் வடிவம், உருவம் மற்றும் வடிவமைப்பில் மேம்படுத்தப்பட்டது. சைமன் ஆணையம் அமல்படுத்தப்பட்ட போது, இந்தியத் துணைக்கண்டத்தைச் சேர்ந்தவர்கள் ‘சைமனே, திரும்பி போ’ என்ற வாசகங்களால் பொறிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான பட்டங்களைப் பறக்கவிட்டு தங்களது எதிர்ப்பை பதிவு செய்ததாக சில குறிப்புகள் தெரிவிக்கின்றன. பறக்கும் பட்டங்களின் சுதந்திரமே இந்தியச் சுதந்திரதின விழாவின் போது பட்டம் பறக்க விடும் பராம்பரியத்தின் ஆரம்பமாக இருந்திருக்க வேண்டும். இன்றளவும் ஆகஸ்ட் 15ஆம் தேதியன்று, ஷாஜகானாபாத் அல்லது பழைய டெல்லியின் மேற்கூரைகள், பட்டங்களை உற்சாகமாகப் பறக்கவிடும் குழந்தைகள் மற்றும் பெரியவர்களால் நிரம்பியிருக்கும்.

இந்தியாவின் மேற்கு பகுதியின் கூரைகளிலிருந்து ‘கை போ சே’ (குஜராத்தி மொழியில் நான் பட்டத்தை வெட்டினேன்) ஒலித்துக்கொண்டிருக்கிறது. குஜராத் மாநிலம் பட்டம் பறக்கவிடுதலில் நீண்டகால தொடர்புடையது, மேலும் பானு ஷாவால் கருத்துருவாக்கம் செய்யப்பட்டதும் வரலாற்றுப் புகழ்பெற்ற பட்டங்களின் புதையலுமான படாங் அருங்காட்சியகம் இங்குதான் அமைந்துள்ளது. லண்டனில் உள்ள விக்டோரியா மற்றும் ஆல்பர்ட் அருங்காட்சியகங்களிலிருந்து அவர் சேகரித்த பட்டங்கள் மற்றும் ஓவியங்களுடன் 33 சட்டங்கள்(Panel) இந்த அருங்காட்சியகத்தில் உள்ளன. உலகில் உள்ள இவ்வகையிலான வெகுசில அருங்காட்சியகங்களில் இதுவும் ஒன்றாகும். குஜராத் அரசாங்கம் 1989 ஆம் ஆண்டில் சர்வதேச பட்டம் பறக்க விழாவினை தொடங்கியது, இந்நிகழ்விற்கு உலகெங்கும் உள்ள பட்டம் பறக்க விடும் ஆர்வலர்கள் பட்டங்களைப் பறக்க விடுவதற்காகவும் நீலநிற வானப் பின்னணியில் பறக்கும் நூற்றுக்கணக்கான சிறிய வண்ணமயமான புள்ளிகளைக் காண்பதற்காகவும் வரவேற்கப்படுகிறார்கள்.

  • History
  • கலாச்சாரம்
Sakthi Sekar

மொழிபெயர்ப்பு

ரா. சக்தி சேகர்

To be updated.

Sahapedia Logo

SAHAPEDIA

Sahapedia is an open encyclopedic resource on the arts, cultures and histories of India. This article is a translated version of the original article "A History of Kite Flying in India" by Manan Kapoor.