வாய்னிக் கையெழுத்துப்பிரதியின் (Voynich manuscript) மர்மம்

  • Mohan Prabhaharan
  • ஜில்லியின் ஃபோலி
    தமிழில்: மோகன் பிரபாகரன்

வாய்னிக் கையெழுத்துப்பிரதி (Voynich manuscript) - சுமார் 600 ஆண்டுகளாக ஆய்வாளர்கள், அறிவியல் விஞ்ஞானிகள், குறியியல்/ தொல்லியல் நிபுணர்கள், இயற்பியலாளர்கள், கணிப்பொறி வல்லுநர்கள் என பலதரப்பட்ட அறிஞர்களையும் திணறடித்துக்கொண்டிருக்கும் ஒரு புத்தகம். 240 பக்கங்கள் கொண்ட வரையறுக்க முடியாத மொழியில் எழுதப்பட்ட, புரியாத தாவரங்கள், நிர்வாணப் பெண்கள், வானியல் குறியீடுகள் என பலவகையாக படங்களைக் கொண்ட ஒரு புத்தகத்தின் பெயரே, வாய்னிக் கையெழுத்துப் பிரதி என்று அழைக்கப்படுகிறது. எந்த வகைப்பாட்டுக்குள்ளும், புரிதலுக்குள்ளும் அடங்காத ஒரு புத்தகமாக இன்று வரை விளங்கி வருவதே அந்தப் புத்தகத்தின் புதிர்.

Voynich

ஆண்டாண்டுகளாக அறிஞர்கள் பலர் கூடி ஆராய்ச்சி செய்து அந்தப் புத்தகத்தின் புதிர்த்தன்மையை அவிழ்க்க முயற்சி செய்து வருகின்றனர். ஆனாலும், இதுவரை தீர்க்கமான முடிவு எட்டப்படவில்லை. கடந்த கோடை காலத்தின் இறுதியில், கலிபோர்னியாவின் ஃபுட்ஹில் கல்லூரியின் மானுடவியல் பேராசிரியர் ஒருவர் இந்த வாய்னிக் பிரதி, கொச்சையான லத்தீன் பேச்சுவழக்கில், ரோமன் சுருக்கெழுத்து முறையைக் கொண்டு எழுதி இருப்பதாக அறிவித்தார். அதே நேரம் இந்த ஆண்டின் தொடக்கத்தில், பிரிஸ்டால் பல்கலைக்கழகத்தின் கல்வியியலாளர் ஜெரார்டு ஷெசயர்(Gerard Cheshire) ஆய்வுப் புத்தகம் ஒன்றில், இந்தப் புத்தகம் “proto-Romance” எனப்படும் மொழிக் கலவையால் எழுதப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார்.

இப்படி வாய்னிக் பிரதி குறித்து அறிவிக்கப்படும் ஒவ்வொரு கூற்றும், பிற ஆய்வாளர்கள், பத்திரிகைகள், வாய்னிக் ஆதரவாளர்களால் முற்றிலுமாக நிராகரிக்கப்பட்டோ, புறக்கணிக்கப்பட்டோ புறந்தள்ளப்பட்டுள்ளன. இதுகுறித்து எழுந்த எதிர்ப்பை அடுத்து, ஷெசயரின் ஆய்வை பிரசுரித்த பல்கலைக்கழகம் தனது ஆய்வுப் புத்தகத்தைத் திரும்பப்பெற்றது.

இயற்பியலாளர் ஆண்ட்ரியாஸ் ஷின்னர்(Andreas Schinner) இதுகுறித்து கூறுகையில், ஒவ்வொரு ஆய்வறிஞரின் வாழ்க்கையிலும், வாய்னிக் பிரதியை படிப்பது ‘தூய்மையான விஷம்’ போன்ற குணமுடையது என்று குறிப்பிட்டார். அதற்குக் காரணம், அந்தப் பிரதியை நாம் படிக்கும்போது, எளிதில் அபத்தமான புரிதல்களைக் கொண்டு தவறு செய்ய வாய்ப்புள்ளது என்பதே ஆகும்.

பல பத்தாண்டுகளுக்கு முன்பே வாய்னிக் பிரதியைக் கொண்டு புள்ளியியல் பகுப்பாய்வை மேற்கொண்ட ஷின்னர் இதை, மிகப்பெரிய காடு என்கிற புரிதலில் விவரித்து இருந்தார். இதுகுறித்து அவர் எழுதி இருந்த ஒரு இ-மெயிலில், உண்மையில் பரந்து விரிந்திருக்கும் காடுகளைப் போலவே, இந்தப் புத்தகமும் எந்த ஒரு பலவீனமான தன்மையை கண்களுக்கு காட்டவில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.

இத்தனை நூறு ஆண்டுகளைக் கடந்த பின்னரும், இந்தப் புத்தகம் யாரால், எப்போது, எப்படி, எதற்காக, எந்த மொழியில் எழுதப்பட்டது என்பதை யாராலும் அறியமுடியவில்லை. இந்த வாய்னிக் பிரதி மீது நடத்தப்பட்ட தடவியல் ஆய்வில், இந்தப் புத்தகம் 15ம் நூற்றாண்டைச் சேர்ந்த அரிதான கையெழுத்துப் பிரதி என்பது மட்டுமே இப்போது வரை கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. அப்படியும், அதற்கான பொருளும், ஆதாரமும் நிச்சயமற்றவை என்றே கருதப்படுகிறது. காரணம், அந்த காலகட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மற்ற பொருட்களுக்கும் இந்த புத்தகத்தில் தென்படும் குறிப்புகளுக்கும் எந்த ஒற்றுமையும் இல்லை.

நிலைமை எப்படி இருக்க.. எதற்காக அறிஞர்களும், ஆராய்ச்சியாளர்களும் இந்தப் புதிரை கண்டுபிடிக்க காலம் காலமாக ஏன் முயற்சி செய்கிறார்கள் ? அதற்கு ஒரு காரணம் உண்டு, தங்களது திறமையை உலகுக்கு எடுத்துக்காட்டவும், சிலருக்கு AI உள்ளிட்ட கணிப்பொறி அறிவியலின் பாய்ச்சலை நிரூபிக்கவும் வழி ஏற்படுத்திக்கொடுத்துள்ளது. புதிரை விரும்பும் ஒருசிலருக்கு இது மயிர்கூச்செறியும் அனுபவத்தை ஏற்படுத்தித் தரவும் தவறவில்லை.

Voynich Manuscript
விளக்கத்தைத் தவிர்க்கும் படங்களுடன், இன்னும் அறியப்படாத மொழியில் எழுதப்பட்ட இந்த 15ம் நூற்றாண்டு புத்தகம் ஆராய்ச்சியாளர்களை இன்றளவும் தொடர்ந்து குழப்பி வருகிறது. Visual: Wikimedia/Public Domain

இந்தக் கையெழுத்துப் பிரதியை முதன் முதலில் வாங்கியவர் வில்பர்டு வாய்னிக் (Wilfrid Voynich) எனும் புத்தக ஆர்வலர், இதை 1912ம் ஆண்டு போலாந்து நாட்டின் அரிய புத்தக சேகரிப்பாளர் ஒருவரிடம் இருந்து வாங்கினார். அதற்குக் காரணம் சேர்த்து எழுதப்பட்ட கையெழுத்துடன், செரிவான படங்களைக் கொண்டிருந்ததே வாய்னிக் இதை நோக்கி ஈர்க்கப்பட காரணமாக அமைந்தது.

இதை வாங்கிய பிறகு, இதில் என்ன எழுதப்பட்டிருக்கிறது என்பதைக் கண்டுபிடிக்கவே வாய்னிக் தனது வாழ்நாளை செலவிட்டார். ஆனால், அதற்கு முன்பாகவே வாய்னிக் இறந்துவிட்டாலும் இன்றளவும் இந்தப் புத்தகம் தலைப்புச் செய்திகளில் இடம்பெறும் புதிராகவே தொடர்கிறது. மொழியியல், தாவரவியல், Machine Learning (பொறி கற்றல்) உள்ளிட்ட பல துறை அறிஞர்களுக்கும் சவாலாகவே இருக்கிறது. தற்போது இந்த வாய்னிக் கையெழுத்துப்பிரதி யேல் (Yale) பல்கலைக்கழகத்தின் Beinecke நூலகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இந்தப் புத்தகத்தின் புதிர்த்தன்மையை உலக அளவில் பரபரப்பாக பேசப்படுவதற்கு முன்பு, மனிதவியல் ஆய்வறிஞர்களே இது குறித்து அதிகம் ஈர்க்கப்பட்டனர். ஆனால், தற்போது பாரபட்சமில்லாமல் அனைத்து துறை அறிஞர்களையும் ஈர்த்து வருகிறது. 1921ம் ஆண்டு, குறியாக்கவியல் (cryptography) மீது ஆர்வம் கொண்ட பென்சில்வேனியா பல்கலைக்கழத்தின் வில்லியம் நியூபோல்டு (William Newbold) என்கிற தத்துவவியல் அறிஞர், இந்தப் புத்தகம் குறித்து கூறுகையில், அறிவியல் பிரியர் ஒருவரின் அறிவியல் புனைக்கதையே இந்தப் புத்தகம் என்று குறிப்பிட்டிருந்தார். இந்தப் புத்தகத்தின் குறிப்பிடப்பட்டு இருக்கும் ஒவ்வொரு எழுத்தும், நுணுக்கமாக வரையப்பட்ட சின்னங்களே, அவற்றை சரியான உருப்பெருக்கம் (magnification) செய்து படிக்கும்போது, தெளிவாகப் படிக்க முடியும் என்று அறிவித்தார். அவரது குறிப்பின்படி நுண்ணோக்கிகள்(microscope) பல நூற்றாண்டுகளுக்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது என்கிற பொருளைக் கொடுத்தது. நியூபோல்டு மரணத்தை அடுத்து ஜான் மேன்லி (John Manly) என்கிற அமெரிக்க இலக்கியப் பேராசிரியரும், குறியீட்டு ஆர்வலரும், நியூபோல்டின் தத்துவம் தவறானது என்றும், தன்னிச்சையானதும், அறிவியல்பூர்வமாக தவறானதும் என்றும் எடுத்துரைத்தார். நவீன சைபர்- குறியீட்டு வல்லுநர்களான வில்லியம் மற்றும் எலிசபெத் ப்ரேட்மேன்(William and Elizebeth Friedman) இருவரும் இந்த புத்தகத்தின் புதிர்த்தன்மையை அவிழ்க்க முயற்சி செய்தனர். இவர்கள் இரண்டு உலகப் போர்களிலும் பங்குபெற்று சங்கேத பாஷைகள் மற்றும் குறியீடுகளை கண்டுபிடிக்கும் பணியை மேற்கொண்டனர். இதற்காக பல்வேறு பயிற்சிகளை மேற்கொண்டிருந்தாலும் அவர்களால் வாய்னிக் பிரதியின் புதிரை மட்டும் கண்டுபிடிக்க முடியவில்லை.

முதலாம் உலகப்போரின்போது, வில்லியம் மற்றும் எலிசபெத் ப்ரேட்மேன் இருவரும் கணிதப்புதிர்களை கைகளாலேயே மேற்கொண்டனர். ஆனால், இரண்டாம் உலகப்போரின்போது, IBM நிறுவனத்தின் பன்ச்-கார்டு tabulating கருவிகள் கணக்குகளை வேகமாகவும், துல்லியமாகவும் கணிக்க உதவின. 1950ம் ஆண்டு, உருவாக்கப்பட்ட தேசிய பாதுகாப்பு முகமையில் ( National Security Agency) பணியில் இருந்தபோது வில்லியம் மற்றும் மற்ற புதிர் ஆய்வாளர்கள் இடைக்கால கையெழுத்துப்பிரதிகளின் எழுத்துகளைக் கண்டுபிடிப்பதிலும் தங்களை ஈடுபடுத்திக்கொண்டனர். (தேசிய பாதுகாப்பு முகமையில் இப்போதும் ஒரு பிரதி பாதுகாக்கப்பட்டு வருகிறது). வாய்னிக் பிரதி வகைப்படுத்தப்படாததால், பனிப்போர் காலத்தின் ஆய்வாளர்கள் சோவியத் குறியீடுகளைப் பயன்படுத்தாமல், தங்களது சகாக்களுக்கு குறியீடுகளை அனுப்ப இந்த பகுப்பாய்வு முறையை பயன்படுத்தி இருக்கலாம்.

ஆனால், தற்போது வாய்னிக் பிரதி குறித்த ஆய்வில் ஈடுபடுபவர்களுக்கு கடந்த நூற்றாண்டைப் போல் இல்லாமல், கணிணி மற்றும் பல்வேறு கருவிகள் உதவுகின்றன. 1990களில் இருந்து வாய்னிக் பிரதி குறித்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் லிஸா ஃபேகின் டேவிஸ்(Lisa Fagin Davis), எனும் இடைக்கால ஆய்வறிஞர் இதுகுறித்து கூறுகையில், கணிணித்துறையின் அதிநவீன தொழில்நுட்ப வளர்ச்சி வாய்னிக் பிரதி குறித்து சொல்லப்பட்ட ஆய்வுத்தரவுகளின் உண்மைத் தன்மையைக் கண்டறிய உதவியது. இது முன்கூட்டியே சொல்லப்பட்டவற்றை அறிவியல் தரவுகளோடு பகுப்பாய்வு செய்ய உதவியது என்று குறிப்பிட்டுள்ளார்.

சில ஆய்வறிஞர்களுக்கு மர்மமான இந்த ஓவியங்கள் குறித்த தீர்வுப் பார்வை இருந்தது. தாவரவியல் அறிஞர் ஆர்தர் டக்கர்( Arthur Tucker) 2013ம் ஆண்டு வெளியிட்ட குறிப்பில், வாய்னிக் பிரதியில் குறிப்பிடப்பட்டுள்ள தாவர வகைகள் 16ம் நூற்றாண்டில் அமெரிக்காவைப் பூர்வீகமாகக் கொண்டிருந்தன என்று குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்தான அவரது இ-மெயிலில், வித்தியாசமான தனது கணிணியல்லாத கணக்கீடும், தாவரவியல் ஓவியங்களை பகுப்பாய்வு செய்ததும், பல தரவு குறித்தான அறிஞர்களை கோபம் கொள்ளச்செய்தது. அதனால், அவரது முறைகளை தவறானது என்று சொல்லி ஒதுக்கிவைத்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

கணிணித்துறையின் வளர்ச்சி தற்போதைய ஆய்வில் மிகப்பெரிய பங்கு வகிக்கிறது. அதிலும் குறிப்பாக மொழியியல் ஆய்வில், அதில் digital transcriptions முறையில், பிரதிகளை உள்ளிட்டு புதிய வழிகுறைகளைக் கொண்டு புதிரை உடைத்து அதன் பொருளைக் கண்டுபிடிக்க வழிவகை செய்கிறது. இதுகுறித்து ஷின்னர்(Schinner) கூறுகையில், ’மற்ற விஞ்ஞானிகள் இதில் ஈடுபட்டிருந்ததே, என்னுடைய ஆர்வத்திற்குக் காரணம். என்னால், இதைவிட சிறப்பாக இதில் செயல்பட முடியுமா என்பதை அறிந்து கொள்ளவே நான் இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

2007ம் ஆண்டு, இவர் கணிதத்துறையின் Random Walk Mapping எனும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, வேறு வேறு வரிகளில் இருக்கும் எழுத்துகளை அடையாளப்படுத்தி இந்த வாய்னிக் பிரதி எழுத்துகளைக் கண்டறிய முடியும் என்று கண்டறிந்தார். இதற்கு ஒரு தனி மொழி இல்லை ஆனால், வடிவம் உள்ளது என்று அவர் நம்பினார். அதே நேரம் 2019ம் ஆண்டு அவர் வெளியிட்ட இரண்டாவது ஆய்வு அறிக்கையில், முன்னரே கூறியிருந்த முறையைப் பயன்படுத்தி எழுத்துகளை அடையாளப்படுத்துவதற்கான வழிமுறைகளை அவர் பட்டியலிட்டிருந்தார். மேலும், இடைக்கால எழுத்தர் ஒருவர் மற்றவர்களை ஏமாற்ற இந்த முறையைப் பின்பற்றி இருக்கலாம் என்கிற பார்வையையும் அவர் முன்வைத்தார். மேலும், இந்தக் கையெழுத்துப்பிரதி எந்தவித அர்த்தமற்றதாகவும் இருக்க வாய்ப்புள்ளதையும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால், சமீபத்திய ஆய்வு முடிவுகள் ஷின்னர் முன்மொழிந்த தத்துவத்திற்கு மாறான முடிவுகளைக் கொண்டுள்ளன. 2013ம் ஆண்டு, பிரேசில் மற்றும் ஜெர்மனியில் இயங்கி வந்த புள்ளியியல் ஆய்வு முடிவுகளே இதற்கு சான்று. அதில், வாய்னிக் கையெழுத்துப் பிரதி ஒரு குறிப்பிட்ட மொழியில் எழுதப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளது. அல்பெர்ட்டா பல்கலைக்கழகத்தின் க்ரேக் கொண்டார்க்( Greg Kondrak) மற்றும் பிராட்லி ஹவுர்(Bradley Hauer) 2016ம் ஆண்டு ஒரு Machine Learning (பொறி கற்றல்) வழிமுறையை கண்டறிந்தனர். அதில், ஒரு குறிப்பிட்ட வார்த்தைக்கு 380 விதமான மொழியாக்கங்களை கண்டுபிடிக்கும்படியாக அமைந்திருந்தது.

அதே நேரம் துருக்கியைச் சேர்ந்த பொறியாளர் மற்றும் அவரது மகனும், வாய்னிக் கையெழுத்துப்பிரதியின் எழுத்துகள் இடைக்கால துருக்கி மொழியின் ஒலிப்படியெடுத்தல் (phonetic transcription) முறையில் இருப்பதாக கண்டறிந்தனர். புள்ளியியல் துறையில் சமீபத்தில் சமர்பிக்கப்பட்ட ஆய்வு ஒன்றில், எழுத்துகளின் காட்சியியல் பகுப்பாய்வு (visual analysis) கையெழுத்துப்பிரதியில் எழுதப்பட்டிருக்கும் எழுத்துகளுக்கு ஒத்து அமைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு இருக்கும் அனைவரும் தாங்கள் இந்த புதிரை அவிழ்க்க வேண்டும், தனது திறமையை நிரூபிக்க வேண்டும் என்றே உழைக்கிறார்கள். ஆனால், இதில் ஒரு தவறு உள்ளது. ஆராய்ச்சியாளர்கள் அனைவருமே திறமையானவர்கள்தாம். ஆனால், இதில் இருக்ககூடிய எழுத்துகளை, ஓவியங்களை அறிந்துகொள்வதில் மட்டுமல்ல; இந்த புத்தகத்தின் பிணைப்பு, மை, கையெழுத்து என அனைத்தியும் அவர்கள் அறிந்து கொள்ள முயற்சி எடுக்க வேண்டும். அதற்கு மிகப்பெரிய குழு ஒன்று ஒருங்கிணைந்து இயங்க வேண்டும் என்று ஆய்வறிஞர் லிஸா தெரிவித்துள்ளார்.

ஷெசயரின்(Cheshire’s) மொழியியல் பகுப்பாய்வு முறையை அறிவார்ந்த பதிப்பிடுதலின் வரைமுறையாக லிஸா குறிப்பிடுகிறார். அவரது ஆய்வறிக்கை சக ஆய்வறிஞர்களால் மதிப்பிடப்பட்டு இருந்தாலும், நல்ல விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும், மிக முக்கியமான ஆய்வறிக்கையில் இடம் பெற்றிருந்தாலும் அது சரியான முறையாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை. 600 ஆண்டுகளுக்கும் மேலான ஒரு கையெழுத்துப்பிரதி ஆராயப்படும்போது இது போன்ற நிகழ்வுகள் நேரலாம். ஆனால், ஷெசயர் இன்னும் தனது ஆய்வு முடிவுகள் சரியானதே என்று நம்பிக்கையோடு ஆய்வைத் தொடர்கிறார் என்று குறிப்பிட்டுள்ளார்.

வாய்னிக் பிரதி குறித்தான ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் மற்ற ஆராய்ச்சியாளர்கள், தங்களை மேம்படுத்திக்கொள்ள இது ஒரு நல்ல தருணம் என்றே கருதுகிறார்கள். கடந்த ஐந்து ஆண்டுகளில், கணிணி முறை மொழியியல், இயற்பியல், குறியாக்கவியல் என பல ஆய்வு பத்திரிகைகள், வாய்னிக் பிரதி குறித்து பல்வேறு கட்டுரைகளை வெளியிட்டுள்ளன. இதில் ஒரு சில கட்டுரைகள் தவறு என நிரூபிக்கப்பட்டு இருந்தாலும், பல கட்டுரைகள் இந்த வாய்னிக் பிரதி புதிர் குறித்த தீர்வை எட்ட பல்வேறு கோணங்களை இந்த உலகிற்கு அளித்துள்ளன.

Artificial intelligence (செயற்கை நுண்ணறிவு) வழிகாட்டு முறைகள், பயிற்சி மற்றும் சோதனைகளுக்காக பல்வேறு விதமான தரவுக்குறிப்புகளை கோருகின்றன. அவற்றைப் பயன்படுத்தியே இயற்பியல் மற்றும் பிற ஆய்வாளர்கள் வாய்னிக் பிரதியின் புதிரை பகுப்பாய்வு செய்ய முடியும்.

2013ம் ஆண்டு, பிரேசிலில் இருந்து வெளியான இயற்பியல் ஆய்வு முடிவு ஒன்றில், வாய்னிக் கையெழுத்துப்பிரதியில் இருக்கூடிய எழுத்துகளை புள்ளியியல் இயற்பியல் முறைகளைக் கொண்டு ஆய்வு செய்ததில் இவை அனைத்தும் தோராயமாக உருவாக்கப்படவில்லை என்றும், இவற்றிற்கு ஒரு வரிசை உள்ளது என்றும் முன்வைக்கப்பட்டது. அதேநேரம் கொண்ட்ரேக் மற்றும் ஹூவர் (Kondrak and Hauer) Machine Learning (பொறி கற்றல்) ஆய்வு முடிவுகளிலும், இவை ஹூப்ரூ மொழியின் எழுத்துருவைக் கொண்டுள்ளதா? என்றும் ஆராயப்பட்டது. ஆனால், இவை அனைத்துமே வாய்னிக் பிரதி குறித்த எந்தவித இறுதியான கூற்றுக்கும் வழியிடவில்லை. அனைத்தும் இப்போதும் ஆராய்ச்சியில் உள்ளது.

Michael Voynich
கையெழுத்துப் பிரதியின் புதிர் குறித்த ஆராய்ச்சியில் வில்பர்டு வாய்னிக்

”இந்த புதிருக்காக விடையை கண்டுபிடிப்பது எப்படி என்கிற முறை எது என அறிவதே மிகவும் கடினம் என்று ஷின்னர் குறிப்பிட்டுள்ளார். “இதுகுறித்த ஆராய்ச்சி எதை நோக்கி இட்டுச் செல்லும்” என்பதை ஒருபோதும் சொல்லமுடியாது என்று கொண்டேர்க் தனது புத்தகத்தில் எழுதியுள்ளார்.

எதுஎப்படியோ, இறுதி வரையிலும் இந்த வாய்னிக் பிரதி யாராலும் அவிழ்க்க முடியாத மர்ம முடிச்சாகவே இருக்கிறது. சிகாகோ பல்கலைக்கழகத்தின் வரலாற்று அறிவியல் அறிஞரான ராபர்ட் ரிச்சர்ட்ஸ் (Robert Richards), இந்த codex முறையை அறிவியல் முன்மாதிரிகளை பயிற்றுவிக்கப் பயன்படுத்துகிறார்.

இந்த வாய்னிக் பிரதியை 2016ம் ஆண்டு வெளியான ஏலியன்கள் பூமிக்கு வருவதை கருத்தாகக் கொண்ட திரைப்படமான Arrival திரைப்படத்துடன் ஒப்பிடுகிறார் ரிச்சர்ட்ஸ். “இது உண்மையிலேயே எதாவது மொழியால் எழுதப்பட்டதா அல்லது மொழியியல் முன்மாதிரியா?” என்று கேள்வி எழுப்புகிறார். மேலும், முதலில் அதை கண்டுகொண்டால்தான் இதை நம் மொழியில் மொழியாக்கம் செய்ய முடியுமா என்பதையே அறிய இயலும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இறுதியில், யாருக்குத் தெரியும்.. இது இடைக்கால மனிதர்கள் நம்மைக் குழப்புவதற்காக எழுதிவைத்த அர்த்தமற்ற நகைச்சுவையாகக் கூட இருக்கலாம் என்றும் அழுத்தமாகப் பதிவு செய்துள்ளார்.

ஜில்லியின் ஃபோலி(Jillian Foley), சிகாகோ பல்கலைக்கழகத்தின் வரலாற்று குறியாக்கவியல் மற்றும் கணிப்பொறியியல் மாணவி.

  • அறிவியல்
  • News
Mohan Prabhaharan

மொழிபெயர்ப்பு

மோகன் பிரபாகரன்

To be updated.

Undark Logo

UNDARK

Undark is a non-profit, editorially independent digital magazine exploring the intersection of science and society. This article is a translated version of the original article "The Strange Quest to Crack the Voynich Code" by Jillian Foley.