நேபாள ராணுவ வீரரின் டைரி

  • Gopi
  • நேபாளி டைம்ஸ்
    தமிழில்: வி கோபி மாவடிராஜா
Nepali Soldiers

முதலாம் உலகப் போரின் போது பிரான்ஸில் பதுங்குக்குழியில் இருக்கும் கூர்க்காக்கள். 1914-1918 இடைபட்ட வருடங்களில் நேசப் படைகளுக்காக போரிட்ட நேபாளிய வீரர்களில் 20,000க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். புகைப்படம்: இம்பேரியல் போர் அருங்காட்சியகம், நேபாளி டைம்ஸ்

புலனாய்வு பத்திரிக்கையாளர் ஸ்ரீ பக்த கனால் எழுதிய இக்கட்டுரை முதலில் நேபாளி டைம்ஸ் பத்திரிக்கையில் வெளியானது. இதன் திருத்தப்பட்ட வடிவம் உள்ளடக்க பகிர்வு ஒப்பந்தத்தின் கீழ் குளோபல் வாய்ஸில் மறு பிரசுரமாகிறது. நேபாளிய கூர்க்கா வீரர்களின் தைரியத்தையும் தியாகத்தையும் பற்றி நிறைய புத்தகங்கள் எழுதப்பட்டுள்ளன. அபாயங்களுக்கும் கஷ்டங்களுக்கும் இடையே அவர்களின் கீழ்படிதலையும் சந்தோஷத்தையும் அதிகாரிகள் புகழ்ந்தனர். போர்க்களத்தில் இருந்த நேபாளிய வீரர்கள் குறித்த உலகத்தின் பார்வை இப்படித்தான் இருந்தது: மூர்க்கமாக இருந்தாலும் எப்போதும் சிரித்தபடி இருந்தனர்.

ஆனால், இரண்டு உலகப் போர்களில் பங்கெடுத்த கூர்க்கா வீரர்களின் கடிதங்களையும் டைரி குறிப்புகளையும் ஆராய்ந்த வரலாற்றாய்வாளர்களின் பார்வையோ வேறு விதமாக உள்ளது. ஃப்ளாண்டர்ஸ் வயல்வெளிகளில் உள்ள பதுங்குக் குழிகளிலோ அல்லது கலிப்பொலியில் உள்ள பாறைகளுக்கு கீழேயோ, நேபாளியர்கள் வீட்டை விட்டு பிரிந்து வந்த கவலையிலும், பயத்திலும், குளிரிலும் பரிதாப நிலையில் இருந்தனர். வீட்டிற்கு அனுப்பப்பட்ட பல கடிதங்கள் ராணுவத்தால் தணிக்கை செய்யப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டன. தற்போது, 1914-ம் ஆண்டு முதலாம் உலகப் போரின் போது வடக்கு பிரான்ஸில் உள்ள லா பாஸீயில் நடைபெற்ற சண்டையில் பிரிட்டிஷ் படையில் இருந்த கூர்க்கா சார்ஜெண்ட் எழுதிய டைரியை ஜெர்மன் அதிகாரி ஒருவர் மீட்டெடுத்துள்ளார். இது கூர்க்கா கதையில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர்களின் பாரம்பர்ய துணிச்சலை உறுதிப்படுத்தும் அதே சமயத்தில் அவர்களின் இயல்பான மனித பக்கத்தையும் இது தெரியப்படுத்தியுள்ளது.

Nepali Soldiers
1916-ம் ஆண்டு மன்ஸ்டரில் உள்ள ஜெர்மானிய போர்க் கைதிகள் முகாமில் இருக்கும் இரண்டு பெயர் தெரியாத கூர்க்காக்கள். நன்றி: சர் குர்கி & கோ, நேபாளி டைம்ஸ்

Nepali Soldiers

ஜெர்மன் முகாமில் இருக்கும் கூர்க்கா போர்க் கைதிகள். சிலரது குரல்கள் பாடல்களாகவும் கதைகளாகவும் பதிவு செய்யப்பட்டு ஹம்போல்ட் அருங்காட்சியக ஆவண காப்பகத்தில் உள்ளது. நன்றி: சர் குக்ரி & கோ, நேபாளி டைம்ஸ் பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்சு படைகளுக்கு எதிராக நடைபெற்ற மூர்க்கமான சண்டைக்குப் பிறகு, குர்ஹெஸ்சிசீ ஜாகர் பட்டாலியன் என்.11-ல் இருக்கும் லெஃப்டினண்ட் அலெக்சாண்டர் ஃபீபர், டிசம்பர் 20, 1914 அன்று லா பாஸீயில் நேபாளிய வீரரின் டைரியை கண்டெடுத்தார். லெஃப்டினண்ட் ஃபீபரின் கொள்ளுப் பேரன் பிலிப் க்ராஸ் ஆவணங்களையும் கத்தியையும் (Khukri) கண்டெடுத்தார். தனது கொள்ளு தாத்தாவின் டைரியை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் முயற்சியில் அவர் இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் கூர்க்கா சார்ஜெண்டின் டைரியை ஆங்கிலத்திலும் ஜெர்மனியிலும் மொழிபெயர்க்கும் முயற்சியிலும் இறங்கியுள்ளார்.

Nepali Soldiers
லா பாஸீயில் போர் தொடங்குவதற்கு முன்னர் “இந்திய படைப்பிரிவைச்” சேர்ந்த கூர்க்காக்களோடு இருக்கும் பிரிட்டிஷ் ராணுவ அதிகாரிகள், நேபாளி டைம்ஸ்

Nepali Soldier

லெஃப்டினண்ட் அலெக்சாண்டர் ஃபீபர், ஜெர்மன் அதிகாரியான இவர்தான் கூர்க்கா வீரரின் டைரியை கண்டுபிடித்தார். சமீபத்தில் இவருடைய கொள்ளுப்பேரன் பிலிப் க்ராஸ் இதை மீட்டெடுத்தார். நேபாளி டைம்ஸ் இறந்த ரானுவ வீரர்களின் உடலில் நேசப் படைகள் குறித்த உளவுத்தகவல்கள் ஏதாவது இருக்கிறதா என தேடுவதே லெஃப்டினண்ட் ஃபீபரின் பணி. இப்படித்தான் அவருக்கு டைரியும், புகைப்படங்களும், கத்தியும் (Khukri) கிடைத்திருக்கக் கூடும். பெயர் தெரியாத நேபாள வீரர் எழுதிய டைரியின் முதல் பக்கத்தில் கவிதை வரிகள் வரிசையாக உள்ளன. இது போரில் கொல்லப்பட்ட அல்லது கைதியாக பிடித்துச் செல்லப்பட்ட எழுத்தாளருடைய இளம் நண்பர்களின் பெயர்கள், அவர்கள் சகித்துக்கொண்ட கஷ்டங்கள் ஆகியவற்றைப் பட்டியலிடுகிறது. கையெழுத்துப்பாணி, மொழியறிவு மற்றும் வரிசையாக கவிதை எழுதியதை வைத்துப் பார்க்கும் போது இந்த வீரர் கிராம பூசாரியிடம் இருந்து கற்றுக்கொண்டுள்ளார் என தெரிய வருகிறது. ஏனென்றால் அன்றைய நாட்களில் நேபாளில் அவர் மட்டுமே படித்த நபராக இருந்தார்.

Nepali Diary
பெயர் தெரியாத நேபாள வீரருடைய டைரியின் பக்கங்களில் கவிதை வசனங்களும், சிறைக் கைதியாகப் பிடித்துச் செல்லப்பட்டவர்களுடைய பெயர் பட்டியலையும் கொண்டுள்ளது. நன்றி: பிலிப் க்ராஸ், நேபாளி டைம்ஸ்

மொழிபெயர்க்கப்பட்ட வரிகள், இதோ:

பரிதாபத்துக்குரியவர்களே, அவர்களின் இளமை எதிரிகளின் கைகளால் பிடுங்கப்படுகின்றன ராணுவம் மீதான காதலை நேபாளத்திலேயே விட்டுவிடுங்கள்

சுபேதர் பீம்சி பண்டாரி (21) ஹர்கே தபா ஜஸ்ராஜா தர்மா காத்ரி கமாண்டர் பாசிதான் நைன்சிங் காத்ரி ஸ்வரூப் குன்வார் ப்ரதிமான் தபா

Nepali Diary

நேபாளிய வீரரின் டைரியில் உள்ள பெயர்கள் லெஃப்டினண்ட் அலெக்சாண்டர் ஃபீபரின் டைரியிலும் அதே வரிசையில் உள்ளது. கூர்க்கா அதிகாரி டைரியின் மொழிபெயர்ப்பாக கூட அது இருக்கலாம். நன்றி: பிலிப் க்ராஸ், நேபாளி டைம்ஸ் நேபாளிய வீரருடைய டைரியின் இரண்டாவது பக்கத்தில் கூர்க்காக்களின் பெயர்கள் உள்ளது. இதில் ஆச்சர்யம் என்னவென்றால், இதேப் பெயர்கள் லெஃப்டினண்ட் ஃபீபரின் டைரியிலும் அதே வரிசையில் உள்ளது (இடது). சிறைக்கைதியாக பிடித்துச் செல்லப்பட்ட கூர்க்காகளின் பெயர்களை அவர் வரிசையாகப் பட்டியலிட்டு வைத்துள்ளார் (இடது). பெயர் தெரியாத வீரர் நேபாளத்தில் எழுதிய பெயர்களின் முறையும் ஜெர்மன் உச்சரிப்பும் சற்று ஒத்திருக்கிறது. உதாரணமாக, குருங் என்ற வார்த்தையை गुरुं (குருன்) என எழுதுவது. தனது டைரியில் லெஃப்டினண்ட் ஃபீபர் எழுதிய குறிப்பைக் கீழே காணலாம்:

கூர்க்கா சார்ஜெண்ட் மேஜரிடம் கண்டெடுக்கப்பட்டது. நோட்டீஸின் முதல் பக்கத்தின் உள்ளடக்கம்: இந்தப் பிரிவில் (பட்டாலியன்) வீரர்கள் அன்போடும், தோழமையோடும் கணிவோடும் நடத்தப்பட்டார்கள். ஒவ்வொரு நபரும் சட்டத்திற்கு உட்பட்டு அவரவர் சமய விதிமுறையைப் பின்பற்றி, தங்களது சம்பளத்தைப் பெற்றனர் (சந்தோஷமாக). கட்டளையிடும் அதிகாரியின் உத்தரவுகள் துல்லியமாகவும் உடனடியாகவும் மேற்கொள்ளப்பட வேண்டும். நோட்டீஸ் எண். 2-ல் உள்ள உள்ளடக்கம் இதோ. கூர்க்காக்களின் பெயர்கள்:

  • துபாராவ் குருன்
  • சந்திராபிர் தபா
  • அகால்பிர் குருன்
  • மன்பகதூர் குருன்
  • அமர்சிங் குருன்
  • உதர்சிங் கார்தி
  • இமான்சிங் குருன்
  • மன்பிர் தபா
  • சாபிலால் ரானா
  • அகத்பிர் தபா
  • நார்பகதூர் தபா

இதிலுள்ள சில பெயர்களை விசாரித்தப் போது, சந்திரபிர் தபா துப்பாக்கிச் சுடும் வீரராக இரண்டாம் மன்னர் ஏழாம் எட்வர்டிற்குச் சொந்தமான கூர்க்கா துப்பாக்கிப் படையில் (சிர்மூர் துப்பாக்கிப்படை) இருந்துள்ளார் என பிரிட்டிஷ் ராணுவ ஆவணங்கள் தெரிவிக்கிறது. முதலாம் மன்னர் ஐந்தாம் ஜார்ஜிற்கு சொந்தமான கூர்க்கா துப்பாக்கிப் படையில் (மலாயன் ரெஜிமண்ட்) சார்ஜெண்டாக இருந்துள்ளார் மன்பிர் தபா; இவரது பணி எண் 1896. டிசம்பர் 20, 1914-ல் லா பாஸீயில் நடந்த சண்டையில் இவர் கொல்லப்பட்டார். மன்பீரின் தந்தை பெயர் பரசுராம் தபா என்றும் அவர் மேற்கு நேபாளின் தோஹதி கிராமத்தில் வாழ்ந்து வந்தார் என்றும் நாங்கள் தெரிந்து கொண்டோம்.

லெஃப்டினண்ட் ஃபீபருடைய டைரியின் பட்டியலில் இல்லாத மற்ற கூர்க்கா வீரர்கள் போர்க்களத்தில் கொல்லப்பட்டோ அல்லது சிறைக் கைதியாகவோ பிடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என லா பாஸீ ஆவணங்கள் மூலம் தெரிய வருகிறது.

Nepali Weapon
லெஃப்டினண்ட் அலெக்சாண்டர் ஃபீபரின் முயற்சியின் விளைவாக கிடைத்ததே இந்தக் கத்தி (Khukri). டைரி எழுதிய கூர்க்கா வீரரிடம் இருந்தே இதை எடுத்திருக்கலாம். புகைப்படம்: பிலிப் க்ராஸ், நேபாளி டைம்ஸ்

107 வருடங்களுக்கு முன்பு கையால் எழுதப்பட்ட நேபாளிய வீரனின் டைரியில் போர் குறித்தும் நேபாள வீரர்கள் குறித்தும் நிறைய சொல்லப்பட்டுள்ளது. தங்கள் பிரிவிலும் மற்றப் பிரிவிலும் உள்ள சக நேபாள வீரர்கள் குறித்தும், இறந்தவர்கள் மற்றும் கைதியாகப் பிடித்துச் செல்லப்பட்டவர்களின் பெயர்களையும் இதில் எழுதியுள்ளனர். இக்கவிதையில் உள்ள பெயர்கள் போர்க்களத்தில் கொல்லப்பட்டவர்களுடையதாக இருக்கலாம். ஆனால் நமக்கு இதுகுறித்து தெளிவாக தெரியவில்லை. மற்றொன்று, லெஃப்டினண்ட் ஃபீபரின் பட்டியலில் அதேப் பெயர்கள் ஜெர்மன் மொழியில் உள்ளது. இது டிசம்பர் 20 அன்று சிறைக்கைதியாகப் பிடித்துச் செல்லப்பட்டவர்களுடைய பெயர்களாக இருக்கலாம்.

ஆனால் இங்குதான் ஒரு புதிர் முளைக்கிறது. நேபாளிய வீரரின் டைரியில் இருந்த இறந்த வீரர்களின் பட்டியல், எப்படி அதே வரிசையில் சிறைக்கைதி பட்டியலாக ஜெர்மன் லெஃப்டினண்ட் ஃபீபரின் டைரியில் வந்தது? நேபாளிய வீரரின் டைரியை லெஃப்டினண்ட் ஃபீபர் மொழிபெயர்த்தாரா அல்லது அவரது சொந்த அறிவுறுத்தல்களா என்பது தெளிவாக தெரியவில்லை. ஜெர்மானிய அதிகாரியின் டைரி ஏறக்குறைய ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு அவரது கொள்ளுப் பேரனால் கண்டெடுக்கப்பட்டது. அந்தக் கூர்க்காவின் பெயர் என்ன என்றோ, நேபாளில் அவர் எங்கிருந்து வந்தார் என்றோ, அவருக்கு என்ன ஆனது என்றோ நமக்கு எதுவும் தெரியவில்லை.

France Map
பிரான்சில் உள்ள லா பாஸீயின் தற்கால வரைபடம். 1914-ம் ஆண்டு இது ஜெர்மானியர்களால் கைப்பற்றப்பட்டது, நேபாளி டைம்ஸ்

பிரான்ஸ் மற்றும் பெல்ஜியத்தில் கைதான பல கூர்க்காக்கள் ஜெர்மனியில் உள்ள போர்க்கைதிகள் முகாம்களுக்கு அனுப்பப்பட்டனர். அங்கு சில கைதிகளின் குரல்களும் பாடல்களும் அப்போதுதான் பயன்பாட்டிற்கு வந்திருந்த ஆரம்பகால ஒலிப்பதிவு இயந்திரத்தில் பதிவு செய்யப்பட்டு பாதுகாக்கப்பட்டன.

பெர்லினிலிருந்து 40கிமீ தொலைவிலுள்ள உன்சோர்ஃஃபில் இருக்கும் ஹல்ப்மோண்ட்லேகர் போர்க் கைதி முகாமில், 1914-1918 இடைபட்ட வருடங்களில் பதிவு செய்யப்பட்ட சில சாட்சியங்களை நேபாள மொழியிலிருந்து ஜெர்மனுக்கு மொழிபெயர்த்துள்ளார் வியன்னா பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் நேபாளப் பேராசிரியர் அலகா ஆத்ரேயா சுதல்.

நேபாள நாட்டுப்புற கதைகள், பாடல்கள், கவிதை மற்றும் நாட்டுப்புற விடுகதைகள் என 100-க்கும் மேற்பட்ட பதிவுகள் விலை மதிக்க முடியாத மொழியியல் மற்றும் கலாச்சார மதிப்பைக் கொண்டவை. ஏனென்றால், இவை நூற்றாண்டுகளுக்கு முன்பே ஒலிப்பதிவாக பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இப்பதிவுகள் தற்போது பெர்லினில் உள்ள ஹம்போல்ட் பல்கலைக்கழக ஆவண காப்பகத்தில் உள்ளது.

  • History
  • News
Gopi

மொழிபெயர்ப்பு

வி கோபி மாவடிராஜா

முழுநேர மொழிபெயர்ப்பாளர் மற்றும் சுதந்திர ஊடகவியலாளர். கதைகளிலும் விளையாட்டு இதழியலிலும் ஆர்வம் கொண்டவர்.

Global Voices Logo

GLOBAL VOICES

Global Voices is an international, multilingual, primarily volunteer community of writers, translators, academics, and human rights activists. This article is a translated version of the original article "Diary of a Nepali soldier in France" by Nepali Times.