காலம் கடந்தும் நிற்கும் ரூபிக்ஸ் கியூப்
கண்டுபிடிக்கப்பட்டு கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் ஆனபின்பும்கூட இன்னும் உலக அளவில் பிரபலமானதாகவே இருக்கிறது ரூபிக்ஸ் கியூப். அதன் ரகசியம் என்ன?
1974 இளவேனிற்காலம் (Spring) - தன் மாணவர்களுக்கு முப்பரிமாண இயக்கத்தை (three-dimensional movement) விளக்குவதற்கான மாதிரியை உருவாக்கவேண்டுமென்பதில் மிகவும் தீர்க்கமானார் எர்னோ ரூபிக் (Ernő Rubik) எனும் ஹங்கேரியைச் சேர்ந்த இளம் கட்டிட வடிவமைப்பாளர். பல மாதங்கள் வேலை செய்து “Bűvös kocka” அல்லது மேஜிக் கியூப் என்று அழைக்கப்பட்ட ஒன்றை அவர் உருவாக்குகிறார். பேப்பர் மற்றும் மரத்தால் ஆன அந்தப் பொருள், ரப்பர் பேண்ட்கள், பசை மற்றும் பேப்பர் கிளிப்களால் (Paper Clip) பிணைக்கப்பட்டிருந்தது.
பின்னாளில் ரூபிக்ஸ் கியூப் (Rubik’s Cube) என்று அழைக்கப்பட்ட இந்தக் கண்டுபிடிப்பு, மிகவும் பிரபலமான புதிர் விளையாட்டுப் பொருளாக மாறியது. 2018-ம் ஆண்டு வரை சுமார் 35 கோடி கியூப்கள் விற்கப்பட்டிருக்கின்றன! பல கலை படைப்புகளுக்கும், திரைப்படங்களுக்கும் இது உத்வேகமாக அமைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல், இந்தப் புதிரை அதிவிரைவில் முடிக்க இளைஞர்கள் அணிவகுத்து போட்டி போடும் 'ஸ்பீட்கியூபிங்' (speedcubing) எனப்படும் மிகவும் பிரபலமான விளையாட்டுக்கும் காரணமாக அமைந்தது.
ஆனால் ஆரம்பத்தில், இந்த கியூபின் வெற்றியால் ரூபிக்கைவிட வேறு யாரும் அதிகம் அதிர்ச்சியடையவில்லை. அதை “Cubed: The Puzzle of Us All” எனும் தன் புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார் அவர். அண்டார்க் (Undark) பத்திரைக்குக் கொடுத்த பேட்டியில், "இந்த கியூப் ஏற்படுத்தியதைவிட அதன் தாக்கம் ஏற்படுத்தியிருக்கும் ஆச்சர்யம்தான் பெரிதானது" என்று கூறியிருக்கிறார். அது பிரபலமானதைப் பற்றியும், அது ஏன் மக்களுக்குப் பிடிக்கிறது என்பதைப் பற்றியும்தான் அந்தப் புத்தகம் என்றும் கூறினார்.
முதலில் பார்க்கும்போது, வேறு வேறு நிறங்களாலான, அவ்வளவாக ஏமாற்றாத, எளிதான சதுரங்களால் ஒவ்வொரு பக்கமும் உருவாக்கப்படிருப்பது போலத்தான் தெரிந்தது. ஆரம்பத்தில் ஒவ்வொரு பக்கமும் சிகப்பு, பச்சை, மஞ்சள், ஆரஞ்ச், நீலம் அல்லது வெள்ளை என்ற ஒரு குறிப்பிட்ட வண்ணம் கொண்டிருந்தது. அதில் இருக்கும் சவாலே, அதிலிருக்கும் எண்ணற்ற வேரியேஷன்கள்தான் (variations). அந்தப் புதிரை முடிக்க 43 குவின்டில்லியனுக்கும் (quintillion) மேலான வேரியேஷன்கள் இருக்கின்றன.
இந்த கியூபில் பிரசித்தி பெறுவதற்கு, அடுத்தடுத்து செய்யவேண்டிய ஒரு சீரான இயக்கத்தைக் கற்றுக்கொள்ளவேண்டும். பல முன்னணி புத்தகங்கள், ஆன்லைன் பயிற்சிகள் மூலம் அதைக் கற்றுக்கொள்ள முடியும். 3x3x3 வடிவத்திலிருந்து 4x4x4, 5x5x5 வடிவங்களுக்கு இந்த கியூப் அடைந்திருக்கும் பரிணாமம், குரூப் தியரியின் (group theory) கடினமான கோட்பாடுகளை அறிந்துகொள்ள உதவிகரமாக இருக்கிறது.
இந்த கியூப், அறிவியல், கனிதம், பொறியியல் பின்னணியில் இருப்பவர்களைத்தான் கவரும் என்று ரூபிக் ஆரம்பத்தில் நினைத்திருக்கிறார். ஆனால், யாருக்கெல்லாம் இந்த கியூப் பிடிக்காது என்று அவர் நினைத்தாரோ, அவர்கள் மத்தியிலும் அது பிரபலமடைந்தது தனக்கு அதிர்ச்சியளித்ததாகவும் தன் புத்தகத்தில் அவர் எழுதியிருக்கிறார்.
மார்ச் 1981-ல் வெளியான Scientific American பத்திரிகையின் அட்டைப் படத்தில் இடம்பெற்றது இந்த கியூப். “Gödel, Escher, Bach” (1979) புத்தகத்தை எழுதியவரும் புலிட்சர் பரிசு வென்றவருமான விஞ்ஞானி டக்ளஸ் ஹாஃப்ஸ்டேடர் (Douglas Hofstadter), "கனிதம் பயிற்றுவிக்கக் கண்டுபிடிக்கப்பட்ட அற்புதமான பொருள்களில் இதுவும் ஒன்று"என அந்தப் பத்திரிகையில் எழுதியிருந்தார்.
தொலைபேசி வாயிலாக எடுக்கப்பட்ட ஒரு பேட்டியில், இந்த கியூப் ஒரு 'முரண்' என்று கூறியிருக்கிறார் ஹாஃப்ஸ்டேடர். காரணம், அது குரூப் தியரியையோ, பொருட்களின் சமச்சீர்நிலையையோ (Symmetry of Objects) பயிற்றுவிக்கப் பயன்படுகிறது! "ஏதாவதொரு பக்கத்தை சுழற்றுவது (வலதுபுறம் 90 டிகிரியிலோ, இடதுபுறம் 90 டிகிரியிலோ அல்லது 180 டிகிரியிலோ) ஒரு குழுவாக திரும்பும். அடுத்தடுத்து தனியாக செய்யப்படும் சுழற்சிகளும் அப்படியானதே" என்று அதன்பின்னர் இ-மெயில் வாயிலாக தெரிவித்திருக்கிறார் அவர்.
தற்போது 76 வயதாகும் ரூபிக், புடாபெஸ்ட் மலையிலிருக்கும் தன் வீட்டின் முற்றத்தில் கியூபோடு அமர்ந்து விளையாடிக்கொண்டு, தன் கண்டுபிடிப்பையும் தற்செயலாகக் கிடைத்த வெற்றியைப் பற்றியும் பேசினார். (தான் புதிதாக ஒன்றைக் கண்டுபிடித்ததாகக் (Inventtion) கூறாமல், ஏற்கெனவே இருந்த ஒரு பொருளை கண்டறிந்ததாகவே (Discovery) கூறுகிறார் அவர்).
கியூபை உருவாக்கியபிறகு அவருக்கு இன்னொரு சவால் காத்திருந்ததாகக் கூறுகிறார் : கியூபின் புதிரை எப்படித் தீர்ப்பது! ஆரம்பத்தில், எவ்வளவு வேகமாக அதைத் தீர்க்கமுடியும் என்றெல்லாம் அவர் யோசிக்கவில்லை. அதைத் தீர்க்க முடியுமா என்பதே பெரிய கேள்வியாக இருந்தது. தான் கண்டுபிடித்த அந்தப் புதிரை அவிழ்ப்பதற்கு அவருக்கே ஒரு முழு மாதம் ஆகியிருக்கிறது. "எங்கே தொடங்கினோம் என்று புரிந்துகொள்வதோ, இலக்கை நோக்கிச் செல்வதோ மிகவும் கடினமாக இருந்தது. குரூப்பிங் (grouping), ஆர்டரிங் (ordering) போன்ற முறைகள் கொண்டு அதை தீர்த்தால் மட்டுமே உண்டு" என்று கூறினார். "அதுமட்டுமல்லாமல், நான்தான் அதை முதலில் முயற்சி செய்தவன் என்பதால், எனக்கு வேறு எந்த முன் அனுபவமும் இல்லை" என்றும் கூறினார்.
நிழலிருந்து தோன்றிய ஒரு துறவியின் விளைவே இந்த கியூப்கள் என்று விவரிக்கிறார் ரூபிக். தன்னை ஒரு திடமான உள்ளணர்வு கொண்ட சிந்தனையாளராக அவர் அடையாளப்படுத்திக்கொள்கிறார் அவர். அதேசமயம், அவரது கண்டுபிடிப்பைப் போல், அவரும் வகைப்படுத்துதலைப் பொய்யாக்குகிறார். பேராசிரியர், கட்டிடவடிவமைப்பாளர், வடிவமைப்பாளர், இதழாசிரியர் வரிசையில் இப்போது எழுத்தாளர் என்பதும் அவருடைய வேலைகளில் இணைந்துள்ளது. சொந்தமாகக் கற்பித்துக்கொள்ளும் தன் திறனை நினைத்துப் பெருமைகொள்ளும் ரூபிக், அதிகாரத்தில் இருப்பவர்கள், அறிவை வழங்குவதற்கான நல்ல இடத்தில் இருக்கிறார்கள் என்று கடுமையாகச் சுட்டிக்காட்டினார்.
1975-ம் ஆண்டு ஹங்கேரி காப்புரிமை கழகத்துக்கு அவர் அனுப்பிய விண்ணப்பத்தில், இந்த கியூபை 'இடம்சார்ந்த தர்க்கரீதியலான பொம்மை' (spatial logic toy) என்று அவர் குறிப்பிட்டார். அந்தக் காலகட்டத்தில், கம்யூனிஸ்ட் ஆதிக்கத்தின் இரும்புத் திரைக்குப் பின்னால் இருந்த ஒரு கிழக்கு அரசாகவே ஹங்கேரி இருந்துவந்தது. அதனால், விளையாட்டுப் பொருள்கள் உற்பத்தியில் ஹங்கேரிக்கு எந்தத் தொடர்பும் இல்லாமல் இருந்தது என்று எழுதியிருக்கிறார் ரூபிக்.
அன்றைய காலகட்டத்தில், புதிர்கள் பொம்மைச் சந்தையில் மிகச் சிறிய அங்கமே வகித்தன. நினைவுப் பரிசுகளோ, சிறப்புப் பரிசுகளோ விற்கும் கடைகளில்தான் அவற்றைப் பார்க்க முடியும். ஒரு புதிரை விளையாட்டுப் பொருளாகப் பாவிப்பதே புதிதாக இருந்தது. 1977-ம் ஆண்டு ஹங்கேரியின் பொம்மை கடைகளில் விற்கப்படத்தொடங்கிய கியூப்கள், அதன்பிறகு சர்வதேச பொம்மைத் திருவிழாக்களில் இடம்பெற்றது. 1979 நியூரெம்பர்க் பொம்மைத் திருவிழாவில், சந்தைப்படுத்துபவரான டாம் கிரமர் என்பவர் இந்த கியூபைப் பார்த்தார். அந்த ஐடியாவை அமெரிக்காவின் ஐடியல் பொம்மை நிறுவனத்துக்காக வாங்கினார். 1980-களில் அமெரிக்காவின் தொலைக்காட்சி விளம்பரங்களில் இடம்பெறத் தொடங்கியது. 1983 "ரூபிக், தி அமேசிங் கியூப்" (Rubik, the Amazing Cube) என்ற அனிமேஷன் தொடர் வெளியாகி, கியூபை இன்னும் பிரபலப்படுத்தியது.
இந்த கியூபின் வெற்றி குறுகிய காலமே நீடித்தது. 'இது கடந்த காலமாக மாறிவிட்டது' என்று 1982-ம் ஆண்டு அறிவித்தது நியூ யார்க் டைம்ஸ் பத்திரிகை. அதன் மீதான ஆர்வம் குறைந்துவிட்டதாகவும், காலத்தின் எதிர்பார்ப்புக்கு முன்னால் அதனால் தாக்குப்பிடிக்க முடியாது என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. "இந்த கியூப் முடிவற்ற ஒன்று. அதீத அற்புதமான படைப்பு. அதனால், விரைவில் அதன் மீதான ஆர்வத்தை மக்கள் இழந்துவிடுவார்கள்" என்று கூறினார் ஹாஃப்ஸ்டேடர். அதன் மீதான ஆர்வம் ஒருகட்டத்தில் குறைந்திருந்தாலும் இப்போது அது திரும்பிக்கொண்டிருக்கிறது. அதை 'தி ஸ்பீட் கியூபர்ஸ்' (The Speed Cubers) என்ற தன் ஆணவப் படத்தில் சொல்லியிருக்கிறார் சூ கிம் (Sue Kim).
கியூப் விளையாடும் ஒரு தாயான கிம், கியூப் போட்டிகளுக்குத் தன் மகன்களை ஒவ்வொரு இடத்துக்கும் அழைத்துச் சென்றார். உலக அளவில் இந்த விளையாட்டு அடைந்திருக்கும் புகழ் அவரைக் கவர்ந்தது. கியூபை கற்றுக்கொள்ளவும், அதில் தங்களை மேம்படுத்திக்கொள்ளவும் சிறுவர்கள் கட்டுரைகளை, யூடியூப் பயிற்சிகளைப் பயன்படுத்துவதையும் ஆன்லைன் சமூகங்கள் உருவாக்குவதையும் ஆவணப்படுத்தியிருக்கிறார் கிம். "டிஜிட்டல் உலகோடு தொடர்புபடுத்திக்கொள்ள முடிவதால், இந்த நவீன உலகிலும் அது முக்கிய அங்கம் வகிக்கிறது என்று நினைக்கிறேன்" என்று வீடியோ சேட்டிங் (video chat) மூலம் கூறினார்.
கியூபை வேகமாகத் தீர்ப்பவர்களைப் பற்றி அறிந்த ஹாஃப்ஸ்டேடர், இவ்வளவு காலம் தாக்குப்பிடித்ததற்கு அது தகுதியானது என்று ஏற்றுக்கொள்கிறார். "அது முற்றிலும் தகுதியானதே" என்றார் அவர். "இதுவொரு அற்புதமான விஷயம். அழகான கண்டுபிடிப்பு, அற்புதமான கண்டுபிடிப்பு, ஆழமான கண்டுபிடிப்பு" என்று கூறினார் அவர்.
கனித தர்க்கங்களுக்கும் தீர்வுகளுக்கும் இது பயன்படுத்தப்பட்டாலும், அதைத் தீர்ப்பதற்கு இருக்கும் எண்ணற்ற முறைகளே அது பிரபலமாவதற்குக் காரணமாக அமைந்திருக்கிறது. "அது கியூபின் மிகவும் மிகவும் மர்மமான தகுதி" என்று எழுதிய ரூபிக், "அதன் முடிவு புதிய தொடக்கமாக மாறுகிறது" என்று கூறுகிறார்.
மொழிபெயர்ப்பு
மு.பிரதீப் கிருஷ்ணா
பத்திரிகையாளர். வர்ணனையாளர். விளையாட்டைப் பேசுவதும் எழுதுவதுமே பொழுதுபோக்கு, தொழில், வாழ்க்கை!
UNDARK
Undark is a non-profit, editorially independent digital magazine exploring the intersection of science and society. This article is a translated version of the original article "The Unlikely Endurance of the Rubik’s Cube" by Hope Reese.