இந்தியாவில் உருவப்படக் கலை (Portraiture) எப்படி வளர்ச்சி கண்டது

  • Gopi
  • சததீப் மைத்ரா
    தமிழில்: வி கோபி மாவடிராஜா

குகை ஓவியங்கள் மற்றும் சுவரோயிங்கள் முதல் புகைப்படத்திலிருந்து வரையப்பட்ட ஓவியங்கள் வரை, கடந்த 30,000 வருடங்களில் உருவப்படங்கள் இந்தியாவில் பெருமளவு மாற்றம் அடைந்துள்ளது. துணைக்கண்டத்தில் உருவான உருவப்பட பாரம்பர்யத்தின் மாற்றங்கள் மற்றும் செல்வாக்கை அடையாளப்படுத்துகிறது Sahapedia.org மற்றும் DAG. (புகைப்பட உதவி: DAG)

இந்தியாவில் உருவப்படங்களின் வளர்ச்சிக்கு பிரிட்டிஷ் காலனியாதிக்கம் பெருமளவு காரணம் என நமக்கு தெரிந்திருந்தாலும், நம்மைச் சுற்றியுள்ள உலகத்தை நாமே ஆவணப்படுத்தும் வழக்கம் மனித சமுதாயத்தின் ஆரம்ப காலம்தொட்டே இருக்கிறது. 30,000 வருடங்களுக்கு முன்பு, பிம்பெத்கா (மத்திய பிரதேசம்) குகையில் வாழ்ந்த மனிதர்கள் தங்கள் கொண்டாட்டங்களையும், தங்களை வேட்டையாடிகளாகவும் கிராமவாசிகளாகவும் குகைச் சுவரில் படங்களாக வரைந்து வைத்தனர். 4500 வருடங்களுக்கு முன்பு பார்த்தோம் என்றால், சிந்து சமவெளி நாகரீகத்திலிருந்து நடனமாடும் பெண் மற்றும் மன்னரின் சிற்பங்கள் நமக்கு கிடைத்தது. இதில் முந்தையது ‘முதல் சிவப்பு கம்பள போஸாக’ (நிற்கும் விதம்) குறிப்பிடப்படுகிறது, பிந்தையது நமக்கு தெரிந்த முதல் மார்பளவு சிலையாக இருக்கலாம்.

உருவப்படங்களை உருவாக்கும் பாரம்பர்யம் துணைக்கண்டத்தில் தொடர்ச்சியான வழக்கமாக இருந்து வருகிறது. இங்கு தெய்வமும் மனிதனும் இணைந்திருப்பதை அடிக்கடி பார்க்கலாம். உதாரணமாக, அஜந்தா குகைகளின் சுவர்கள் மற்றும் மேற்கூரைகளில் புத்தர், போதிசத்வா மற்றும் மனிதர்களின் படங்கள் இருக்கிறது. இந்துக் கோயிலின் முகப்புகளில் பல புடைப்புச் சிற்பங்கள் அலங்கரிக்கின்றன. கடவுளின் சிற்பங்கள் உயரமான இடத்திலும் மனிதர்களுடையது தாழ்வான இடங்களிலும் இருப்பதைக் காணலாம். அப்படியே பதினாறாம் நூற்றாண்டிற்கு வந்தோம் என்றால், உருவப்படக் கலை சிறிய பாரம்பர்ய வடிவமாக முகாலாய ராஜ்ஜியத்தில் செழிக்கத் தொடங்கியது. அக்பரின் அமைச்சரவையில் கோவர்த்தனும் பசவனும் பிரபல கலைஞர்களாக இருந்தார்கள். பசவனின் மகனான மனோகர் தாஸ், ஜஹாங்கீர் கீழ் பணியாற்றினார்.

பிரிட்டிஷ் ஆட்சியில் இந்தியக் கலை முக்கியத் திருப்பத்தைக் கண்டது. 1857 எழுச்சி தோல்வி அடைந்ததை அடுத்து, பல கலைப் பள்ளிகள் நிறுவப்பட்டன. மெட்ராஸ் (தற்போது சென்னை), கல்கத்தா (தற்போது கொல்கத்தா), பம்பாய் (தற்போது மும்பை) மற்றும் பரோடா (தற்போது வதோதரா)-வில் உள்ள இந்தக் கலைப் பள்ளிகள், உள்ளூர் நிலப்பரப்பு மற்றும் மக்கள்தொகையை ஆவணப்படுத்தும் பணியில் ஈடுபட வைபதற்காக உள்ளூர் மக்களுக்கு ஐரோப்பிய இயல்புவாதத்தைக் (naturalism) கற்றுக்கொடுத்தனர். நாளடைவில் இந்தப் பள்ளிகள் தங்கள் கவனம் முழுவதையும் நுண்கலையில் (fine arts) செலுத்த ஆரம்பித்தன. ஒவ்வொரு பள்ளியும் தங்களுக்கென்று தனித்துவமான பாணியை வளர்த்துக் கொண்டன.

Portrait of Bonsha Gopal Nandi
பெஞ்சமின் ஹட்ஸன் வரைந்த போன்ஷா கோபால் நந்தியின் (தலைப்பிடாத) உருவப்படம் (நன்றி: DAG via Sahapedia.org)

Portrait of King Edward - VII
ஜே. பார்டன் வரைந்த ஏழாம் எட்வர்ட் மன்னரின் (தலைப்பிடாத) உருவப்படம் (நன்றி: DAG via Sahapedia.org)

பிரிட்டிஷ் ஆக்ரமிப்பு காரணமாக ஐரோப்பிய கலைஞர்களான ஜே. பார்டன் மற்றும் பெஞ்சமின் ஹட்ஸன் இங்கு வருகை தர ஆரம்பித்தனர். மற்றொரு புறம், இந்தக் கலைஞர்கள் உள்ளூர் மன்னர்களையும் ஆங்கில அதிகாரிகளையும், பிரிட்டிஷ் மன்னர்களையும் உருவப்படமாக வரைந்தார்கள். அதே சமயத்தில், எஃப்.பி. சோல்வின்ஸ், ஜேம்ஸ் வேல்ஸ், தாமஸ் மற்றும் வில்லியம் டேனியல் போன்ற கலைஞர்கள் தங்கள் நாட்டு மக்களுக்காக நிலப்பரப்பு மற்றும் இனவரைவியலை ஆவணப்படுத்தும் முயற்சியில் இருந்தனர்.

Portrait of European Boy
ராஜா ரவிவர்மா வரைந்த ஐரோப்பிய சிறுவனின் உருவப்படம் (நன்றி: DAG via Sahapedia.org)

19-ம் நூற்றாண்டு உருவப்படங்களில் ஐரோப்பிய இயல்புவாதத்தின் பிரபலம் அதிகரிக்க தொடங்கியதன் காரணமாக இதற்கு முன்பு இருந்த உள்நாட்டு கலை வீழ்ச்சியடைய தொடங்கியது. இதன் விளைவாக, ராஜா ரவி வர்மா (தைல ஓவியங்கள், குறிப்பாக இவர் வரைந்த இந்துக் கடவுள் ஓவியங்களுக்காக பெரிதும் அறியப்படுபவர்) போன்ற உள்ளூர் கலைஞர்கள் ஐரோப்பிய நுட்பங்களை பயன்படுத்த தொடங்கினர்.

Self Portrait of Dhurandhar
எம்.வி. துரந்தர் வரைந்த சுய உருவப்படம் (நன்றி: DAG via Sahapedia.org)

நான்கு முக்கிய கலைப் பள்ளிகளில்/ மையங்களில், ரவி வர்மா பணிபுரிந்த பாம்பேயில் உள்ள சர் ஜே.ஜே. கலைப் பள்ளி மிகுந்த பிரபலமடைந்தது. அதற்கு காரணம் அந்தச் சமயத்தில் அவர் லோனாவாலாவில் அச்சகம் நடத்தி வந்தார். இதனால் அவரது படைப்புகள் பரவலாக மக்களிடம் சென்றடைந்தன. இதேப் பள்ளியிலிருந்து வந்த எம்.வி. துரந்தர், ஜே.டி. கோண்டேல்கர், எஸ். எல். ஹதங்கர், பி.டி. ரெட்டி, அபலால் ரஹிமான், என்.ஆர். சர்தேசி மற்றும் எம்.ஃப். பிதாவாலா போன்றோர் உருவப்படக் கலையில் வித்தகர்களாக இருந்தனர். இவர்களில், இந்த தலைமுறையின் மிக முக்கியமான கலைஞராக துரந்தர் கருதப்படுகிறார். இவருடைய படைப்பில் ரவி வர்மாவின் தாக்கத்தை நேரடியாகப் பார்க்கலாம். மேலும், செல்வச் செழிப்புமிக்க பார்ஸி குடும்பங்களைச் சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்களை உருவப்படமாக வரைந்து புகழடைந்தார் பிதாவாலா.

Portrait of Parsi Lady
எம்.ஃப். பிதாவாலா வரைந்த பார்ஸி பெண்ணின் (தலைப்பிடப்படாத) உருவப்படம் (நன்றி: DAG via Sahapedia.org)

புகைப்படத்தை வரைதல்

1839-ல் நவீன புகைப்படக்கலையின் வருகை உருவப்பட தொழிலுக்கு நேரடி சவாலாக அமைந்தது. இதற்கு பிரெஞ்சுக்காரரான லூயிஸ் டாக்ரிக்குதான் நன்றி சொல்ல வேண்டும். பாதரச ஆவி முறையில் புகைப்படம் எடுக்கும் முறை (daguerreotype) இந்தியாவில் உடனடியாக அறிமுகமானது. இதன் காரணமாக உருவப்படத்தை வரையும் வலி மிகுந்த நடைமுறைக்கு மாற்றாக விலை குறைவான மற்றும் விரைவானதாக இது அமைந்தது. சமரச முயற்சியாக, போட்டோ ஸ்டூடியோக்களும் கலைஞர்களோடு சேர்ந்து பணியாற்ற தொடங்கினர். அவர்கள் கருப்பு-வெள்ளை புகைப்படத்தை வண்ணம் கொடுத்தோ அல்லது புகைப்படத்திலிருந்து உருவப்படங்களையோ வரைந்தனர்.

Nawab Ahamad Ali Khan
புகைப்படத்தின் அடிப்படையில் பெயர் தெரியாத கலைஞர் வரைந்த மலெர்கோட்லாவின் நவாப் அஹமது அலி கான் ஓவியம் (நன்றி: DAG via Sahapedia.org)

உதாரணமாக, மலெர்கோட்லாவின் நவாப் அஹமது அலி கானின் (c. 1930) உருவப்படம் புகழ்பெற்ற போர்னே & ஷெப்பர் ஸ்டூடியோவால் புகைப்படத்திலிருந்து ஓவியமாக வரையப்பட்டது. இதில் ஆச்சர்யமூட்டும் விஷயம் என்னவென்றால், இந்த நகலெடுப்பு ஓவியம் அசலான கலைஞரின் பெயரில் அல்லாமல் ஸ்டூடியோவின் பெயரில் கையெழுத்திடப்பட்டுள்ளது. 108 x 60 இன்ச், 200 கிலோ எடையுடன் மிகப்பெரிய சட்டகமாக இருக்கும் இந்த ஓவியம், புகைப்பட ஸ்டூடியோக்களும் ஓவியர்களும் இணைந்து பணியாற்றியதற்கு சிறந்த உதாரணமாக திகழ்கிறது. இதே பாணியின் மற்ற உதாரணங்களாக குவாலியர் மகாராஜா ராவ் சிந்தியாவின் (1916-61) புகைப்படங்களைக் கூறலாம். இது கருப்பு-வெள்ளைப் புகைப்படமாகவும் கையால் நீர்வண்ணம் தீட்டப்பட்ட ஒன்றுமாக இரண்டு படங்கள் இருக்கிறது.

Maharaja Jiwaji Rao Scindia
குவாலியரின் மகாராஜா ஜிவாஜி ராவ் சிந்தியாவின் ஒரே புகைப்படத்தின் இரண்டு வெவ்வேறு பதிப்புகள், இரண்டில் பிந்தையது கையால் வண்ணம் தீட்டப்பட்டது. (நன்றி: DAG via Sahapedia.org)

இரண்டு உலகப் போர்களால் உண்டான தாக்குதல், இந்திய விடுதலைக்கான போராட்டம் மற்றும் நவீன கலை நடைமுறைகளில் உண்டான வளர்ச்சி ஆகியவை கலையில் ‘கல்விப்புல யதார்த்த’ தேவையை செல்லாதவை ஆக்கியது. உருவப்படங்கள் ஸ்டைலிஷாக (பகட்டாக) மாறின. இதை பரிதோஷ் சென்னின் சுய உருவப்படத்திலும் (1948 தேதியிட்ட) சுதிர் ரஞ்சன் காஸ்கிரின் தலைப்பிடாத உருவப்படத்திலும் (c. 1950) பார்க்கலாம். மிக முக்கிய உதரணமாக, 1943-44ம் ஆண்டில் வங்காளத்தில் பஞ்சம் உச்சத்தில் இருந்த சமயத்தில் கிசோரி ராய் வரைந்த கலையும் பஞ்சமும் (c. 1944) என்ற சுய உருவப்படத்தைக் கூறலாம்.

Untitled Paintings
சுதிர் கஸ்திகர் வரைந்த தலைப்பிடப்படாத ஓவியங்கள் (நன்றி: DAG via Sahapedia.org)

Kisory Roy
கிசோரி ராயின் கலை மற்றும் பஞ்சம், கலைஞரின் பின்னால் பேய் முகபாவத்தோடு இருக்கும் பெண் (நன்றி: DAG via Sahapedia.org )

சுதந்திரத்திற்குப் பிறகு, இந்தியக் கலையின் மையம் கொஞ்சம் கொஞ்சமாக காலனிய தலைநகரமான கல்கத்தாவிலிருந்து புதியதும் பெருநகரமுமான பாம்பேக்கு இடம்பெயர்ந்தது. சுதந்திரத்திற்கான போராட்டம், இரண்டு உலகப் போர்கள், புதிதாக உருவான தேசத்தின் பொருளாதார மற்றும் அரசியல் போராட்டங்கள் ஆகியவை மக்களிடத்தில் வேதனையை உருவாக்கியது. இதற்கு எதிர்வினையாக கலைஞர்களும் தங்கள் கலையில் அதிக வெளிப்படத்தன்மையை புகுத்தினர்.

பாம்பே முற்போக்கு கலைஞர்களின் ஐரோப்பியமயமாக்கப்பட்ட பண்பியல் வெளிப்பாட்டியமே (Europeanised abstractionism) இந்தியக் கலை என சர்வதேச சந்தையில் அடையாளம் காணப்பட்டது. அதே சமயத்தில் கே.சி.எஸ். பணிக்கர் தலைமையில் மெட்ராஸ் பள்ளியின் பயிற்றுனர்கள் மறைபொருள் (esoteric) சித்தாந்தங்களில் உள்ள தாந்த்ரீக தத்துவங்களை ஆழமாக தேட ஆராம்பித்தனர். பிகாஷ் பட்டாசார்ஜி போன்ற கலைஞர்கள் தொடர்ந்து தங்கள் கலையில் குறிப்பிட்ட இயல்புவாத கூறுகளை பயன்பாடுத்தினாலும், அப்போதே இதுபோன்ற உருவப்படங்கள் வரலாற்றின் குறுகிய வரையறைக்குள் அனுப்பப்பட்டன. அதிகாரப்பூர்வமாக அனுமதியளிக்கப்பட்ட பிரதம மந்திரிகள் மற்றும் ஜனாதிபதியின் படங்களுக்கு மட்டுமே உண்மையான மதிப்பு கிடைத்தன.

  • History
  • Media
Gopi

மொழிபெயர்ப்பு

வி கோபி மாவடிராஜா

முழுநேர மொழிபெயர்ப்பாளர் மற்றும் சுதந்திர ஊடகவியலாளர். கதைகளிலும் விளையாட்டு இதழியலிலும் ஆர்வம் கொண்டவர்.

Sahapedia Logo

SAHAPEDIA

Sahapedia is an open encyclopedic resource on the arts, cultures and histories of India. This article is a translated version of the original article "How the Art of Portraiture Developed in India" by Shatadeep Maitra.