ஓசனிச்சிட்டுகளின் (Hummingbirds) எடை அறிவது எப்படி?

  • Pradeep
  • லோரி ஸ்மித் & சாரா ஹல்லகர்
    தமிழில்: மு.பிரதீப் கிருஷ்ணா
Bird Weight
ஸ்மித்சோனியன் தேசிய மிருகக்காட்சி சாலை மற்றும் பாதுகாக்கும் உயிரியல் நிறுவனம்

ஸ்பாட்டைப் (Spot) பார்க்கவும்...

ரூபியைப் (Ruby) போல் ரத்தச் சிவப்பு நிறத்தில் கழுத்தைக் கொண்ட ஸ்பாட் (Spot) எனும் இந்த ஓசனிச்சிட்டு (hummingbird), வாஷிங்டன் டி.சி-யில் இருக்கும் ஸ்மித்சோனியன் தேசிய மிருகக்காட்சி சாலையில் வாழ்கிறது. ஆனால், அதன் கதை கொஞ்சம் பக்கத்தில் இருக்கும் விர்ஜீனியாவில் இருந்து தொடங்குகிறது. ஓசனிச்சிட்டுகள், சிறு பட்டாணியின் அளவே இருக்கும் சிறு முட்டையிலிருந்து குஞ்சு பொறிக்கும். ஸ்பாட், இளம் குஞ்சாக இருக்கும்போது, நீச்சல்குளத்தில் விழுந்து கிட்டத்தட்ட மூழ்கிவிட்டது.

அதிர்ஷ்டவசமாக, அன்று விதி அதன் பக்கம் இருந்தது. தண்ணீரிலிருந்து காப்பாற்றப்பட்டு அருகில் இருக்கும் பறவைகள் மறுவாழ்வு மையத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டது ஸ்பாட். கீழே விழுந்ததால் ஏற்பட்ட காயங்களின் காரணமாக, அதை காட்டில் விடுவது சாத்தியமில்லாமல் போனது. மறுவாழ்வு மைய அதிகாரி, பறவைகள் சரணாலய பராமரிப்பாளர் சாரா ஹல்லகரைத் தொடர்புகொண்டு, மிருகக்காட்சி சாலையில் வைத்து ஸ்பாட்டை பாதுகாக்க முடியுமா என்று கேட்டார். தேவையான அனுமதி கிடைத்ததும், மிருகக்காட்சி சாலை குழு, நவம்பர் 2016 ஸ்பாட்டை வரவேற்றது.

உடல்நிலை தேறி வாழ்ந்துகொண்டிருக்கும் ஸ்பாட்டுக்கு இப்போது 5 வயது ஆகிறது. மிகச் சிறிய பறவையாக இருந்தாலும், அற்புதமான குணங்கள் கொண்டிருக்கிறது ஸ்பாட். மிகவும் அமைதியான ஸ்பாட், ஆர்வமுள்ள பறவையும்கூட. யு.வி.பி (UVB) விளக்கின்கீழ் நின்று வெளிச்சத்தையும் சூட்டையும் அனுபவிப்பதை எப்போதும் விரும்பும். தன்னைப் பார்த்துக்கொள்பவர்களை நன்றாக உணர்ந்துகொள்ளும் ஸ்பாட், அதன் வாழ்விடத்தில் புதிதாக சேர்க்கப்படும் ஒவ்வொரு பொருளோடும் எளிதில் ஒட்டிக்கொள்கிறது.

அது காட்டிய ஆர்வம், ஸ்கேல் டிரெய்னிங் (Scale-training) எனப்படும் பயிற்சிக்கு அதை வித்திட்டது. எங்களின் வலுவூட்டல் பயிற்சியில் பங்கேற்கும் பெரும்பாலான பறவைகள், காப்பாளரின் கோலுக்கு அடிபணிந்து தராசில் ஆடாமல் அசையாமல் நிற்கும். அதிலிருந்து, எடை கூடியிருக்கிறதா, குறைந்திருக்கிறதா, இல்லை அப்படியே இருக்கிறதா என பறவைகளின் எடை அளவெடுக்கப்படும். தேவைப்பட்டால், பறவைகளின் ஆரோக்கியத்தைப் பேண மிருகக்காட்சி சாலையின் ஊட்டச்சத்து நிபுணரான எரின் கெண்ட்ரிக் ஆலோசனை பெற்று, அவற்றின் உணவு முறையை மாற்றலாம்.

இடம்பெயரும் பறவை இனங்களின் எடைகளை கணக்கிடுவது மிகவும் முக்கியம். ஏனெனில், இடம்பெயரும் காலகட்டத்திலும் இனப்பெருக்க காலகட்டத்திலும் பறவைகளின் எடையில் மாற்றம் ஏற்படும். ரூபியின் நிற கழுத்தைக் கொண்ட ஸ்பாட், வட அமெரிக்காவில், மிசிஸிப்பி ஆற்றின் கிழக்கே இளவேனிற்காலத்திலும் (Spring) கோடை காலத்திலும் இனப்பெருக்கம் செய்யும். அதன்பிறகு, மெக்சிகோ வளைகுடாவின் வழியே இடைவிடாமல் பறந்து மத்திய அமெரிக்காவில் இருக்கும் தங்களின் பனிக்கால தங்குமிடத்தை அடையும்.

பறவைகளின் எடையை கண்டறிவதற்கு அதீத பொறுமையும் தொழில்நுட்பத்தின் உதவியும் தேவைப்படும். பறவைகளின் வாழ்விடத்தில் வைக்கப்பட்டிருக்கும் எடை பார்க்கும் கருவிகளின் மேல் அவற்றின் உணவின் ஒரு பகுதி வைக்கப்படும். அதன்பிறகு அவை அங்கு வந்து அமர்வதும், உணவை உண்டுவிட்டுப் பறந்து செல்வதும் கேமராவால் கண்கானிக்கப்படும். பெரும்பாலான பறவைகள் கேமராவைக் கண்டுகொள்ளாது. ஆனால், கேமரா மீது ஆக்ரோஷமாகப் பாய்ந்து தாக்கத் தொடங்கியது ஸ்பாட். அதன் வாழ்விடத்தில் கேமரா இருப்பது அதற்குப் பிடிக்கவில்லை என்பது புரிந்தது. அதனால், அதன் எடையை அளப்பதற்கு வேறு எதாவது வழியைக் கண்டுபிடிக்கவேண்டியிருந்தது.

நல்லவேளையாக பாதுகாவளர்களிடத்தில் ஸ்பாட் அமைதியாக இருந்தது. பல ஆண்டுகளாக அதைப் பார்த்துக்கொண்டிருப்பதால், சர்க்கரைத் தண்ணீர் துணைகொண்டு அதோடு நெருங்க முடியும் என்று நாங்கள் அறிந்திருந்தோம். ஓசனிச்சிட்டுகள், காட்டில் சிறு பூச்சிகளை (ஒலுங்கு [gnats], செடிப்பேன் [aphids] போன்றவை), சிலந்திகளை, பூவிலிருக்கும் தேனை சாப்பிடும். மிருகக்காட்சி சாலையில், அனைத்து ஊட்டச்சத்துகளும் நிறைந்த பூவின் தேன் (nectar), பழுப்பு நிற (brown) தேனூட்டியில் (nectar feeder) ஸ்பாட்டுக்குக் கொடுக்கப்படும். குறிப்பாக ஓசனிச்சிட்டுகளுக்கும், பூவின் தேனை உண்டு வாழும் மற்ற பறவைகளுக்காகவும் திட்டமிடப்பட்ட உணவு இது.

ஸ்பாட்டின் வழக்கமான உணவிலிருந்து வேறுபடுத்திக் காட்டுவதற்காக, சர்க்கரை நீரை நிறமற்ற தேனூட்டியில் கொடுப்போம். இந்த விசேஷ தேனூட்டியைப் பார்த்ததும், தனக்குப் பிடித்தமான விருந்து தரப்படுகிறது என்பதை ஸ்பாட் புரிந்துகொள்ளும்.

எடை பார்க்கும் எந்திரத்தின் மேலேயிருக்கும் டி-ஸ்டாண்டில் (T-stand) ஸ்பாட்டின் சர்க்கரைத் தண்ணீர் வைக்கப்படும். அது தன் இடத்தில் அமர்ந்ததும் சிறகடிக்காமல் இருக்க, சரியான தூரத்தில் ஒரு கம்பியும் கட்டப்பட்டிருக்கும். பொதுவாக, முன்னும் பின்னும் பறப்பதற்காகவும், வட்டமிடுவதற்காகவும், ஓசனிச்சிட்டுகள் தொடர்ந்து சிறகடித்துக்கொண்டே இருக்கும். ஓசனிச்சிட்டுகள் பூவிலிருந்து தேனுறிஞ்சுவதைப் பார்த்திருந்தீர்களேயானால், அவற்றின் நீண்ட நாக்கு தேனை உறிஞ்சுவதற்கான சரியான இடைவெளி விட்டு வட்டமிட்டுக்கொண்டிருப்பதை அறிவீர்கள்.

ஸ்பாட்டை கீழிறங்க வைப்பதும், ஆடாமல் அமரவைப்பதும் சரியான எடையை அளப்பதற்கு மிகவும் முக்கியம். இப்போது, மாதாமாதம் அதன் எடையை அளவிட முடிகிறது. கடைசியாக எடை பார்த்தபோது ஸ்பாட்டின் எடை 3.6 கிராம். அமெரிக்காவின் 5 சென்ட் காசைவிடை (Nickel) 1.4 கிராம் குறைவு!

இனிமையான, அனைவரிடமும் பழகும் தன்மை கொண்ட ஸ்பாட், ஓசனிச்சிட்டுகளுக்கு மிகச் சிறந்த தூதர்! தற்போது பறவைகளின் வாழ்விடத்தில் மறுசீரமைப்பின் இறுதி கட்டம் நடந்துவருவதால், பார்வையாளர்களின் பார்வையில் படாமல் வாழ்ந்துவருகிறது ஸ்பாட். ஆனால், 2022 பனிக்காலத்தில் பறவைகளுக்குத் தோதான காப்பித்தோட்ட பறவைகள் கூண்டில் (Coffee Farm aviary) ஸ்பாட்டை பார்வையாளர்கள் பார்க்கமுடியும்.

Coffee Farm Aviary
பறவைகளின் இருப்பிடத்திலிருக்கும் மூன்றாவது ஏவியரிக்குள் நுழைந்தால் (aviary) பாடல் பறவைகள் (songbirds) கனோபி (canopy) மரங்களுக்கு இடையே தாவிக்கொண்டிருந்தன. அந்த ஏவியரி, பாரம்பரியமான காப்பித்தோட்டத்தைப் போல் காப்பி செடிகளுக்கு மேலே இந்தக் கனோபி மரங்கள் நடப்பட்டிருக்கின்றன. (ஸ்மித்சோனியன் தேசிய மிருகக்காட்சி சாலை மற்றும் பாதுகாக்கும் உயிரியல் நிறுவனம்)

தற்போது, ஸ்பாட் மட்டும்தான் இங்கிருக்கும் ரத்தச் சிவப்பு நிறத்தில் கழுத்தைக் கொண்ட ஒரே ஓசனிச்சிட்டு. ஆனால், அது இனியும் தனியாகப் பறக்கப்போவது இல்லை. ஒரு பெண் ஓசனிச்சிட்டை இங்கு கொண்டுவரத் திட்டமிட்டுக்கொண்டிருக்கிறோம். பார்வையாளர்களால் அந்த இரண்டையும் வேறுபடுத்திப் பார்க்க முடியும். ஏனெனில், ஆண் பறவைகள் மட்டுமே ரத்தச் சிவப்பு நிறத்தில் தொண்டை கொண்டிருக்கும். அதனால்தான் அந்த இனத்திற்கும் அந்தப் பெயர் வந்தது. பெண் ஓசனிச்சிட்டுகளின் தொண்டை திட்டுத் திட்டான வெள்ளை நிறத்தில் காட்சியளிக்கும்.

நான் ஓசனிச்சிட்டுகளுக்கு உதவவேண்டுமெனில் என்ன செய்யவேண்டும்?

இயற்கையைப் பாதுகாக்கும் சர்வதேச அமைப்பு, ரத்தச் சிவப்பு நிற தொண்டை கொண்ட ஓசனிச்சிட்டுகள் அதிக ஆபத்தில்லாத இனம் என்றே பட்டியலிட்டிருக்கிறது. இருந்தாலும், சில எளிதான நடைமுறைகள் மூலம் அவற்றுக்கும் இன்னபிற இடம்பெயரும் பறவைகளுக்கும் பெரிய அளவில் உதவ முடியும்.

உங்களிடம் தோட்டமோ, பால்கனியோ இருந்தால், ரத்தச்சிவப்பு நிற தொண்டை கொண்ட ஓசனிச்சிட்டுகள் உண்ணும் உள்ளூர் செடிகளான டிரம்பட் ஹனிசக்கிள் (trumpet honeysuckle), ஸ்கார்லட் பீபாம் (scarlet beebalm), வைல்ட் பெர்கமாட் (wild bergamot) போன்றவற்றை வளர்க்கலாம். அமெரிக்காவின் வன சேவை அமைப்பின் வலைதளத்தில், அவற்றுக்குப் பிடித்தமான பறவைகள் பற்றித் தெரிந்துகொள்ளலாம்.

ஓசனிச்சிட்டுகளைக் கவர்வதற்கு இன்னொருவழி, சர்க்கரைத் தண்ணீர் ஊட்டிகள். ஓசனிச்சிட்டுகளின் தேன் செய்முறையை வைத்து சர்க்கரைத் தண்ணீரை நீங்களே உருவாக்கலாம். அந்த தேனூட்டிகளில் தேனோ, விதைகளோ இருந்தாலும் இல்லாவிட்டாலும் அதை அடிக்கடி சுத்தம் செய்ய மறந்துவிடாதீர்கள். அப்போதுதான் அந்தப் பறவைகளை நோய்வாய்ப்படாமல் காக்க முடியும்.

Humming Bird
ஒரு பெண் ஓசனிச்சிட்டு, பூவிலிருந்து தேன் உறிஞ்சுகிறது. (கிரெக் காஃப், ஸ்மித்சோனியன் தேசிய மிருகக்காட்சி சாலை மற்றும் பாதுகாக்கும் உயிரியல் நிறுவனம்)

அதுமட்டுமல்லாமல், உங்கள் வீட்டைச் சுற்றியிருக்கும் இடம் ஓசனிச்சிட்டுகளுக்குப் பாதுகாப்பான இடமாக இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். அந்தப் பறவைகள் உங்கள் ஜன்னல்களில் மோதாமல் இருக்க, கண்ணாடிகளில் ஸ்டிக்கர் ஒட்டலாம். சுற்றித்திரியும் செல்லப்பிராணிகளும், வீதியில் சுற்றும் பூனைகளும் நன்றாக சாப்பிட்டு வளர்ந்தாலும், அவை பறவைகளுக்கு எப்போதும் சிக்கல்தான். அமெரிக்காவில், ஒவ்வொரு வருடமும் 240 கோடி பறவைகள் பூனைகளால் கொல்லப்படுவதாக விஞ்ஞானிகள் கணக்கிட்டிருக்கிறார்கள். அதனால், உங்கள் பூனைகளை வீட்டுக்குள்ளேயே வைத்திருங்கள். உங்கள் சுற்றத்தாரையும் அப்படியே செய்யச் சொல்லுங்கள்.

கடைசியாக, பறவைகளின் வாழ்விடம் திறந்தவுடன், மிருகக்காட்சி சாலைக்குச் சென்று ஸ்பாட்டைப் பாருங்கள். அதேவேளை, ஸ்பாட்டின் கதையை உங்கள் குடும்பத்தோடும் நண்பர்களோடும் பகிர்ந்துகொள்வீர்கள் என்று நம்புகிறோம். இடம்பெயரும் பறவைகளைப் பற்றி மற்றவர்கள் புரிந்துகொள்ளவும், அவற்றையும் அவற்றின் வாழ்விடத்தையும் பாதுகாக்கவும் நம்மால் முடிந்த பங்களிப்பைச் செய்யம்முடியும்.

  • அறிவியல்
  • Technology
  • கல்வி
Pradeep

மொழிபெயர்ப்பு

மு.பிரதீப் கிருஷ்ணா

பத்திரிகையாளர். வர்ணனையாளர். விளையாட்டைப் பேசுவதும் எழுதுவதுமே பொழுதுபோக்கு, தொழில், வாழ்க்கை!

Smithsonian Logo

SMITHSONIAN MAGAZINE

Smithsonian magazine places a Smithsonian lens on the world, looking at the topics and subject matters researched, studied and exhibited by the Smithsonian Institution—science, history, art, popular culture and innovation—and chronicling them every day for our diverse readership. This article is a translated version of the original article "How Do You Weigh a Hummingbird?" by Lori Smith and Sara Hallager.