நாசாவும் சந்திரயானும் நிலவில் நீரைக் கண்டுபிடித்தது எப்படி!

  • Pradeep
  • ஜதன் மேதா
    தமிழில்: மு.பிரதீப் கிருஷ்ணா

விண்வெளியில் இருக்கும் வாழ்விடங்களுக்குத் தேவையான மின்சாரம் தயாரிக்கும் அளவுக்கு நீர் இருக்கிறதா? அதை சந்திரயான் கண்டறியும்.

பல ஆண்டுகள் உழைப்புக்குப் பிறகு, சந்திரயான் 1 மற்றும் நாசாவின் LCROSS செயற்கைக்கோள்கள் உதவியோடு, நிலவில் தண்ணீர் இருப்பதை 2009-ம் ஆண்டு விஞ்ஞானிகள் கண்டறிந்தார்கள். அடுத்த 10 ஆண்டுகளில், அங்குள்ள தண்ணீரின் தரத்தையும் அளவையும் பற்றிப் புரிந்துகொள்வதே அடுத்த கட்டப் பணியாக இருந்தது. அங்குதான் நாசாவின் LRO, இஸ்ரோவின் சந்திரயான் 2 விண்கலங்களின் அவசியம் ஏற்படுகிறது.

20-ம் நூற்றாண்டின் பெரும்பகுதி, நிலவின் மேற்பரப்பு முற்றிலும் வரண்டதாகத்தான் கருதப்பட்டது. அபோல்லோ மிஷன்கள் மூலம் நிலவிலிருந்து கொண்டுவரப்பட்ட 382 கிலோ மதிப்புள்ள பாறைகளும் மணலும் அதற்குச் சான்றாக இருந்தன. அந்த மாதிரிகளில் விஞ்ஞானிகள் தண்ணீரைக் கண்டிருந்தாலும், மாசுபட்டவை என்று கூறி அதைப் புறக்கணித்தனர். நிலவின் வளிமண்டலம் (atmosphere) மிகவும் மெல்லியது. அதனால், அதன் மேற்பரப்பில் இருக்கும் தண்ணீர் வளிமண்டலத்தின் வெற்றிடத்துக்கு நேரடியாக வெளிப்படுவதால் நீராவியாகிவிடுகிறது. நிலவின் குறைவான ஈர்ப்புவிசையால் அந்த நீராவி வேகமாக வளிமண்டலத்தில் கலந்துவிடுகிறது.

இருந்தாலும், பல கோடி ஆண்டுகளாக சூரிய ஒளி படாத சில பகுதிகளும் நிலவில் இருக்கின்றன. அந்தப் பகுதிகளில் தண்ணீர் இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றன. நிலவின் துருவங்களில், நாள் முழுவதும் அடிவானத்துக்கு மிகவும் அருகில்தான் சூரியன் இருக்கும். அதனால், ஒரு சிறு பாறையின் நிழல்கூட மிகவும் பெரிதாக விழும். அதேபோல், பெரும் பள்ளங்கள், அடுக்கடுக்கான முனைகள் கொண்டிருந்தால், பள்ளத்துக்குள் நுழையாத வகையில் சூரிய ஒளி 360 டிகிரியிலும் தடுக்கப்படும். அப்படியான பகுதிகள் மிகவும் இருட்டாக இருக்கும். அதனால் அவை நிரந்தரமான நிழல் பகுதி என்றோ, PSR என்றோ அழைக்கப்படுகின்றன.

Moon
நிலவின் தென் துருவத்திலிருக்கும் நிரந்தர நிழல் பகுதிகள் நீல வண்ணத்தில் காட்டப்பட்டிருக்கின்றன. படம்: நாசா LRO

தண்ணீர் எங்கிருந்து வந்திருக்கும்?

வால்நட்சத்திரங்களும் வான்கற்களும் தண்ணீர் கொண்டிருப்பதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர். சூரிய குடும்பம் உருவானதன் பிறகு, கோள்களையும், அதன் நிலவுகளையும் இவை அதிவேகத்தில் மோதிக்கொண்டேதான் இருக்கின்றன. அதனால்தான் நிலவில் மேற்பரப்பில் பள்ளங்கள் அதிகமாக இருக்கின்றன. இந்த வால்நட்சத்திரங்கள், வான்கற்களில் இருந்த தண்ணீர்தான் நிலவில் தேங்கியிருக்கவேண்டும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இந்தத் தண்ணீரின் ஒருபகுதி, நிரந்தர நிழல் பகுதியில் தேங்கியிருக்கலாம் என்றும், குளிர்சாதனப்பெட்டியில் சேமித்து வைக்கப்பட்டிருப்பதுபோல், அங்கு பலகோடி வருடங்களாக இந்தத் தண்ணீர் தேங்கியிருக்கலாம் என்றும் அவர்கள் கருதுகிறார்கள்.

1994-ம் ஆண்டு, நிலவைச் சுற்றும் கிளமன்டைன் (Clementine) விண்கலத்தை அனுப்பியது நாசா. அதன் ரேடார் (Bistatic Radar Experiment), வானொலி அலைகளை (Radio waves) நேரடியாக நிரந்தர நிழல் பகுதிக்குச் செலுத்தியது. நிரந்தர நிழல் பகுதியில் பட்டு எதிரொலித்த சிக்னல் (signal) பூமியில் இருந்த தரை நிலையங்களில் பெறப்பட்டது. அந்த சிக்னல்களின் தன்மை, தண்ணீர் மற்றும் பனியை ஒத்ததாக இருந்ததாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்தாலும், அவர்களால் 100 சதவிகிதம் உறுதியாகக் கூற முடியவில்லை.

நிரந்தர நிழல் பகுதிகளில் உறைந்த நிலையில் தண்ணீர் கிடைக்கிறதா என்பதை அறிந்துகொள்ள 1998-ம் ஆண்டு, லூனார் பிராஸ்பெக்டர் (Lunar Prospector) என்ற விண்கலத்தை அனுப்பியது நாசா. அதன் நியூட்ரான் ஸ்பெக்டிரோமீட்டர் (Neutron Spectrometer), நிலவின் மண்ணில் இருக்கும் நியூட்ரான்கள், ஹைட்ரஜன் (hydrogen) அனுவை ஒத்திருப்பதைக் கண்டுபிடித்தது. இந்த ஹைட்ரஜன் அனுக்கள் தண்ணீருடைய மூலக்கூறுகளின் அங்கமாக இருக்கக்கூடுமோ?

கிளமன்டைன் (Clementine) மற்றும் லூனார் பிராஸ்பெக்டர் (Lunar Prospector) ஆகியவை கொடுத்த தகவல்களை வைத்து நிலவில் தண்ணீர் இருக்கிறது என்று விஞ்ஞானிகள் மிகவும் நம்பினார்கள். ஆனால், அவர்கள் 100 சதவிகிதம் உறுதியாக இருக்கவேண்டுமே!

நிலவில் நீர் இருக்கிறது!

நிலவைச் சுற்றும் சந்திரயான் 1 விண்கலம் மூலம், 2008-ம் ஆண்டு தன் விண்வெளி ஆய்வுப் பயணத்தைத் தொடங்கியது இந்தியா. அதற்காக உலகின் பல்வேறு விஞ்ஞானிகளிடமிருந்தும் கருவிகளைக் கோரியது இஸ்ரோ. MiniSAR, M3 என இரண்டு கருவிகளை செய்துகொடுத்தது நாசா.

நிரந்தர நிழல் பகுதியிலிருந்து பிரதிபலித்ததால் பெறப்பட்ட சிக்னல்கள், துருவங்களிலிருக்கும் நாற்பதுக்கும் மேற்பட்ட பள்ளங்களிலிருந்த உறைந்த தண்ணீரிலிருந்து பெறப்பட்ட சிக்னல்களோடு ஒத்துப்போவதாக மினியேச்சர் சிந்தடிங் அபேர்சர் ரேடார் (Miniature Synthetic Aperture Radar or Mini-SAR) கண்டுபிடித்தது.

Kite
சந்திரயான் 1-ன் கருவி Mini-SAR, நிலவின் வடதுருவத்தில் கண்டுபிடித்த உறைந்த தண்ணீர் (பச்சை வட்டங்கள்) படம்: நாசா

அகச்சிவப்பு ஸ்பெக்டிரோமீட்டரான (Infra Red Spectrometer) மூன் மினரலாஜிகல் மேப்பர் (Moon Mineralogical Mapper - M3) ஒரு மிகப்பெரிய பங்களிப்பை செய்தது. அது நிரந்தர நிழல் பகுதிகளில் தண்ணீரை மட்டும் கண்டுபிடிக்கவில்லை. நிலவின் மேற்பரப்பு, அகச்சிவப்பு கதிர்களை உறிஞ்சிய தன்மையை வைத்து 'உறைந்த, திரவ, ஆவி' வடிவு என அனைத்து வடிவிலான நீரையும் வேறுபடுத்திக் காட்டியது. நிலவில், ஆதி காலத்திலிருந்து தண்ணீர் இருந்தது என்பதை உருதிபடுத்தியது M3.

Moon
நிலவின் தென் துருவத்திலும் (இடது) வடதுருவத்திலும் (வலது) இருக்கும் உறைந்த தண்ணீர். இதை இஸ்ரோவின் சந்திராயன் 1 விண்கலம் படம் பிடித்தது. படம் - நாசா

கோள்களின் மேற்பரப்பில் மோதி பரிசோதனை செய்யும் ஒரு கருவியையும் சுமந்து சென்றது சந்திரயான் 1 விண்கலம். நிலவின் தென்துருவத்தில் இருக்கும் ஒரு நிரந்த நிழல் பகுதியில் மோதியது அந்தக் கருவி. அது கீழே இறங்கும்போது, நிலவின் மெலிதான வளிமண்டலத்தில் தண்ணீரின் மூலக்கூறுகள் இருப்பதைக் கண்டறிந்தது அதன் மாஸ் ஸ்பெக்டிரோமீட்டர் (Mass Spectrometer).

இருந்தாலும், Mini-SAR மற்றும் M3 கருவிகள் நிலவில் நீர் இருப்பதைக் கண்டறிந்ததாக, நாசா வெளியிடும் வரை இஸ்ரோ எந்த முடிவுகளையும் வெளியடவில்லை. நாசா அறிவித்தபிறகு, தங்கள் கருவிகளே நிலவில் தண்ணீர் இருப்பதை முதலில் கண்டுபிடித்ததாகக் கூறியது இஸ்ரோ.

அவ்வளவு வறண்டதாக இல்லை!

இதுநாள்வரை, துருவங்கள் மட்டுமல்லாது நிலவின் மற்ற இடங்களிலும் தண்ணீர் இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதிவந்தனர். சூரியனிலிருந்து வெளிப்படும் புரோட்டான்கள் தொடர்ந்து நிலவில் மோத, அவை உறிஞ்சிக்கொள்ளப்பட்டன. நிலவின் மண்ணில் இருக்கும் ஆக்சிஜன், உறிஞ்சப்பட்ட ஹைட்ரஜனோடு சேர்ந்து தண்ணீரை உருவாக்கியிருக்கும் என்று நினைத்தார்கள் விஞ்ஞானிகள். அதனால், நிலவின் சுற்றுவட்டப்பாதையிலிருந்து தண்ணீரின் மூலக்கூறுகளைக் கண்டறியமுடியும் என்றும் நம்பினார்கள். அதேபோல், சிறிய விண்கற்கள் நிலவின் மேற்பரப்பில் மோதும்போது அங்கு தண்ணீர் விடுவிக்கப்படும். அல்லது உருவாகும்.

சனி (Saturn) கோளுக்குச் செல்லும் வழியில், 1999-ம் ஆண்டு நிலவைக் கடந்து சென்றது நாசா அணுப்பிய கசினி (Cassini) விண்கலம். நிலவின் பெரும்பாலான அட்சரேகைகளில் (latitudes), தண்ணீரைக் கொண்டிருக்கும் தாதுப் பொருள்கள் இருப்பதாக அதன் அகச்சிவப்பு ஸ்பெக்டிரோமீட்டர் (Infra Red Spectrometer) கண்டறிந்தது. துருவங்களில் தாதுப் பொருள்கள் அதிக அளவில் இருப்பதாகவும் அது கண்டறிந்தது.

Water - Hydroxyl
கசினியின் அகச்சிவப்பு ஸ்பெக்டிரோமீட்டர் (Infra Red Spectrometer) கண்டறிந்த, தண்ணீர் மற்றும் ஹைட்ராக்சைல் (hydroxyl) கொண்டிருக்கும் நிலவின் தாதுப் பொருள்கள். படம் - நாசா

மிகவும் வறண்டிருந்த அபோல்லோவின் மாதிரிகளுக்கு இது நேரெதிராக இருந்தது. அபோல்லோ தரையிறங்கிய பெரும்பாலான தளங்கள் பூமத்திய ரேகைக்கு (Equator) அருகில் இருந்தது காரணமாக இருக்கலாம். அதனால், அதீத தட்பவெட்ப நிலையில், தண்ணீர் ஆவியாகியிருக்கலாம். இருந்தாலும், சந்திரயான் 1 நிகழ்வு நடக்கும்வரை இந்த முடிவுகளை அவர்கள் வெளியிடவில்லை.

சந்திராயன் 1-ல் இருந்த ஐரோப்பிய விண்வெளி நிலையத்தின் SARA கருவி, நிலவின் மேற்பரப்பில் பட்டு பிரதிபலித்த புரோட்டன்களை அலசியது. கசினியைப்போல், தண்ணீர் அல்லது ஹைட்ராக்சைல் (hydroxyl) மூலக்கூறுகள் நிலவின் மண்ணில் இருப்பதாகக் கண்டறிந்தது. இந்தக் கண்டுபிடிப்பு, புதனில் (Mercury) தண்ணீரைக் கண்டுபிடிப்பதற்காக அதேபோன்ற இரண்டு கருவிகளை அனுப்பிய, ஐரோப்பிய விண்வெளி நிலையத்தின் பெபிகொலம்போ (BepiColombo) மிஷனுக்குப் பெரும் உதவியாக இருந்தது. சந்திரயானின் M3, நிலவின் ஒவ்வொரு பகுதியிலும் தண்ணீர் மற்றும் ஹைட்ராக்சைல் (hydroxyl) மூலக்கூறுகள் இருப்பதைக் கண்டறிந்தது.

இவையெல்லாம் குறிப்பிட்டது ஒரே விஷயத்தைத்தான் - கண்டுபிடிக்கப்பட்டவை தண்ணீரா அல்லது ஹைட்ராக்ஸில் (H2O vs OH) மூலக்கூறுகளா என்று உறுதியாகக் கூறமுடியவில்லை. நாசா மற்றும் ஜெர்மன் விண்வெளி மையம் சேர்ந்து உருவாக்கிய பறக்கக்கூடிய தொலைநோக்கியால் அவை இரண்டையும் வேறுபடுத்திக் காட்டமுடியும். H20 மூலக்கூறுகளைக் கொண்ட தண்ணீரே நிலவின் துருவம் அல்லாத பகுதிகளிலும் இருப்பதாக அது உறுதி செய்தது.

நிரந்தர நிழல் பகுதிகளில் இருந்த உறைந்த தண்ணீர், மண்ணில் இருந்த தண்ணீரின் மூலக்கூறுகள் அல்லாமல், தண்ணீருக்கான மூன்றாவது மூலப் பொருளை கண்டுபிடித்தது M3. மத்திய மலைகளில் முக்கிய அங்கமான பள்ளங்களுள் பெரிதான புல்லியால்டஸ் (Bullialdus) பள்ளத்தைப் படம் பிடித்தது M3. நிலவின் மேல் பகுதியை ஆழமாகத் தோண்டியதால் கிடைக்கும் பொருள்களை இந்த மலைகள் கொண்டிருந்தன.

Bullialdus
நிலவில் புல்லியால்டஸ் (Bullialdus) பள்ளம் இருக்கும் இடம். ஜூம் (zoom) செய்து பார்த்தால் மத்திய மலைப்பகுதி தெரியும் படம் - கிளிமா, கஹில், et al.

மத்திய மலைப்பகுதிகளில் தண்ணீரைக் கொண்டிருக்கும் தாதுப் பொருள்கள் இருப்பதைக் கண்டுபிடித்தது M3. ஆனால், அதைச் சுற்றியிருக்கும் பகுதிகளில் அதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. தண்ணீரின் இந்தத் தடயம், நிலவின் உள்பகுதி எப்படியிருக்கும் என்ற புரிதலை விஞ்ஞானிகளுக்குக் கொடுத்தது.

துருவங்கள் அல்லாத பகுதிகளில் இருக்கும் நிலவின் மண்ணில் தண்ணீர் இருக்கிறது என்பது இப்போது விஞ்ஞானிகளுக்குத் தெரிந்திருக்கிறது. இருந்தாலும், அது பூமியின் மிகவும் வறண்ட பாலைவனங்களில் இருக்கும் தண்ணீரை விடக் குறைவானதுதான். அதேசமயம், துருவங்களில் இருக்கும் நிரந்தர நிழல் பகுதிகளில் ஓரளவு அதிக தண்ணீர் இருக்கிறது.

LRO மற்றும் சந்திரயான் 2

2009-ம் ஆண்டு லூனார் ரீகனைசன்ஸ் ஆர்பிட்டரை (LRO) விண்ணில் செலுத்தியது நாசா. அதிலிருந்த ரேடார், புற ஊதாக் கதிர்களைக் கண்டறியும் கருவி (ultraviolet detector), நியூட்ரான் ஸ்பெக்டிரோமீட்டர் (neutron spectrometer) ஆகியவற்றின் துணைகொண்டு, துருவங்களில் உறைந்த தண்ணீர் இருப்பதையும் கண்டறிந்தது LRO. தற்போது, பத்தாவது ஆண்டாக நிலவை சுற்றிக்கொண்டிருக்கிறது LRO. மற்ற விண்கலங்களையெல்லாம் விட அதிக காலம் நிலவைச் சுற்றியிருக்கும் விண்கலம் இதுதான். எதிர்காலத்தில் நிலவில் ஆய்வுகள் மேற்கொள்வதற்கும், தங்குவதற்கான திட்டமிடலுக்கும் உதவும் வகையில் ஒரு விரிவான அட்லஸ் (atlas) உருவாக்கியுள்ளது LRO குழு.

சந்திரயான் 1 எடுத்துச் சென்றதைப்போல் நிலவின் மேற்பரப்பில் மோதி சோதனை செய்யும் LCROSS என்ற கருவியைச் சுமந்து சென்றது LRO. 2009-ம் ஆண்டு, அதன் மேல் பகுதி, நிலவின் தென்துருவத்திலுள்ள ஒரு நிரந்த நிழல் பகுதியில் மோதவைக்கப்பட்டது. அது மோதியதால் எழுந்த நிலவின் தூசிகளை ஆராய்ந்தது LCROSS-ன் மற்றொரு பகுதி. அதில் 155 கிலோ எடையுள்ள தண்ணீர் இருப்பதாகக் கண்டறியப்பட்டது.

Articles Nasa Lcross
2009-ம் ஆண்டு நிலவில் மோதுவதற்கு முன்பு, அந்தக் கருவியைக் கண்கானிக்கும் LCROSS - வரையப்பட்டது படம்: நாசா

Articles Nasa Lcross
வலது: நிலவில் மோதிய பிறகு எழுந்த தூசுகளை LCROSS எடுத்த படம். அவை தண்ணீரை உள்ளடக்கியுள்ளன. படம் - நாசா

இந்த முடிவுகளை வைத்து, நிரந்தர நிழல் பகுதிகளில் ஒட்டுமொத்தமாக அறுபதாயிரம் கோடி லிட்டருக்கும் மேல் தண்ணீர் இருக்கும் என்று மதிப்பிட்டிருக்கிறார்கள் விஞ்ஞானிகள். இது குறைந்தபட்சம், 2,40,000 ஒலிம்பிக் நீச்சல் குளங்களுக்கு இணையானது.

நிலவின் தண்ணீரைப் பற்றிய நமது அறிவை மேம்படுத்தும் நோக்கில், மேம்படுத்தப்பட்ட அகச்சிவப்பு ஸ்பெக்டிரோமீட்டர், DFSAR எனப்படும் மேம்படுத்தப்பட்ட ரேடார் உள்ளிட்ட கருவிகள் சந்திரயான் 2 விண்கலத்தில் இடம்பெற்றிருந்தன.

நிலவின் மண்ணில் இருக்கும் நீர் செறிவுகள் பற்றி அதிகபட்ச தெளிவுள்ள உலகளாவிய வரைபடம் ஒன்றை அந்த அகச்சிவப்பு ஸ்பெக்டிரோமீட்டர் உருவாக்கும். அதேபோல், தண்ணீர் கொண்டுள்ள தாதுக்குள் என்னவெல்லாம் இருக்கிறது என்பதையும் கண்டறியும். நிலவின் சுற்றுச்சூழலுக்கு ஏற்றவாரு நிலவின் மண் எப்படி மாற்றம் கொள்கிறது என்பதைக் கண்டறிவதுதான் சந்திரயான் 2 விண்கலத்தின் நீண்ட காலத் திட்டமாக இருந்தது.

நிரந்தர நிழல் பகுதிகளில் இருக்கும் உறைந்த நீர் இருக்கும் இடங்களைக் கண்டறிந்து வரைபடம் உருவாக்க DFSAR உதவும். இதுவரை பயன்படுத்தப்பட்ட கருவிகளைவிட இரண்டு மடங்கு அதிக ஆழமாகப் பயணிக்கக்கூடியது என்பதாலும், அதிக தெளிவு கொண்ட புகைப்படங்கள் எடுக்கும் என்பதாலும், இதுவரை யாரும் செய்திடாத, 'அந்த குளிர்ந்த பகுதிகளில் எவ்வளவு தண்ணீர்' இருக்கிறது என்ற கேள்விக்கான சரியான பதிலை DFSAR கொடுக்கும்.

அடுத்து என்ன?

எதிர்காலத்தில் நிலவில் வாழக்கூடிய உயிரிணங்கள் பயன்படுத்தும் வகையில், அங்கிருக்கும் தண்ணீரை நம்மால் கட்டுக்குள் வைத்திருக்கமுடியும் என்று சந்திர அறிவியல் மற்றும் ஆய்வு குழுக்கள் ஏற்றுக்கொண்டிருக்கின்றன. அங்கு வாழ்பவர்கள் உருவாக்கும் சூரிய சக்தியின் மூலம் அங்கிருக்கும் உறைந்த நீரை ஆக்சிஜனாகவும், ஹைட்ரஜனாகவும் பிரித்து ராக்கெட்டுக்கான எரிபொருளாகப் பயன்படுத்தமுடியும். அதனால், ஜெஃப் பீஸோஸுக்கு சொந்தமான விண்வெளிப்பயண நிறுவனமான புளூ ஆரிஜின் (Blue Origin), தங்களுடைய விண்கலத்தை நிலவுக்கு செலுத்துவதற்கு 10 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ஒப்பந்தம் செய்திருக்கிறது.

ஆனால், நிலவின் துருவங்களில் வாழ்வதைப் பற்றித் திட்டமிடுவதற்கு முன், இந்தப் பகுதிகளில் இருக்கும் உறைந்த தண்ணீரின் தன்மையை நாம் உணர்ந்துகொள்ளவேண்டும். LRO, சந்திரயான் இரண்டு விண்கலங்களும் இதற்கு உதவிகரமாக இருக்கும்.

சந்திரயான் 2, நிலவை அதன் சுற்றுவட்டப்பாதையில் 7 ஆண்டுகளுக்கு சுற்றிவரும் என்று கூறியிருக்கிறது இஸ்ரோ. நிலவின் மேற்பரப்பில் எங்கு எவ்வளவு தண்ணீர் இருக்கிறது என்பதைக் கண்டறிய இது போதுமானதாக இருக்கும் என்று கூறப்பட்டிருக்கிறது. இருந்தாலும், 2 ஆண்டுகள் வாழ்நாள் கொண்டது என்று கருதப்பட்ட சந்திரயான் 1, பத்தே மாதங்களில் செயலிழந்ததையும் நாம் மறந்துவிடக்கூடாது.

நிரந்தர நிழல் பகுதிகளை ஆய்வு செய்யும் மேற்பரப்பு மிஷன்கள், நாசா பயன்படுத்தவிருக்கும் வைப்பர் ரோவர் (VIPER rover) போன்றவைதான், நிலவில் சரியான வாழ்விடங்களைக் கண்டறிவதற்கான சரியான முன்னெடுப்புகள். உறைந்த நீரை ஆய்வு செய்யும் தொழில்நுட்பங்களை நாம் உருவாக்கிக்கொண்டே இருக்கும்பட்சத்தில், நிலவு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த சூரிய குடும்பத்திலும் நாம் ஆய்வுகள் மேற்கொள்ளலாம். நம் அண்டைய கோள் நிறைய நீர் கொண்டுள்ளதை நினைத்து நாம் சந்தோஷப்படவேண்டும். காலா காலத்துக்கும் பூமியின் புவியீர்ப்பிலிருந்தே அனைத்தையும் நாம் இழுத்துக்கொண்டிருக்க முடியாதே!

  • அறிவியல்
  • Technology
  • History
Pradeep

மொழிபெயர்ப்பு

மு.பிரதீப் கிருஷ்ணா

பத்திரிகையாளர். வர்ணனையாளர். விளையாட்டைப் பேசுவதும் எழுதுவதுமே பொழுதுபோக்கு, தொழில், வாழ்க்கை!

Jatan Image

JATAN MEHTA

Writes high-quality articles on space exploration and the Moon to spread the purpose and joy of it to everyone he can. He is a contributing editor for The Planetary Society, and his articles have been published on respected global publications. This article is a translated version of the original article "How NASA and Chandrayaan discovered water on the Moon" by him.

Jatan don’t display ads and keep all his work free for everyone. Your monthly support will keep him going, and one-time donations will make his day. To support Jatan "CLICK HERE".