பண்டைய ஐரோப்பிய வேட்டைக்காரர்கள் மனித எலும்புகளை ஆயுதங்களாகச் செதுக்கியுள்ளனர்

  • Sakthi Sekar
  • பிரிட்ஜெட் அலெக்ஸ்
    தமிழில்: சக்தி சேகர்

டச்சுக் கடற்கரைகளில் எடுக்கப்பட்ட பத்தாயிரம் ஆண்டுகள் பழமையான சிதலமாகிப் புதைந்து போன (washed up) கூர்மையான வளைவு முனைகள் (barbed points) கலாச்சாரக் காரணங்களுக்காகச் செய்யப்பட்டதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

Human Bone
2017 ஆம் ஆண்டு, வில்லி வான் விங்கர்டன் அவர்களால் கண்டறியப்பட்டு ஆய்வுக்குட்படுத்தப்பட்ட மனித எலும்பினாலான ஒரு பகுதி.

பனியுகம்(Ice age) குறைந்து வருவதனால் உருகும் பனிப்பாறைகள் ஒரு காலத்தில் பிரிட்டனையும் ஐரோப்பாவின் தலைநிலப்பரப்பையும்(Mainland) இணைத்திருந்த டோகர்லேண்டின் நிலப்பரப்பை மூழ்கடித்தன. இந்நிலத்தில் கடைசியாக வாழ்ந்தவர்களால் செய்யப்பட்ட தனித்துவமான ஆயுதங்களான ஒல்லியான இரம்பம் போன்ற பற்களையுடைய எலும்புப் பகுதிகள், எட்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக வட கடலின் அடிப்பகுதியில் தங்கியிருந்தன. இருபதாம் நூற்றாண்டின் பொறியியலாளர்கள், சேறுவாரும் இயந்திரங்களைக்(mechanical dredgers) கொண்டு கடற்பரப்பை வாரியெடுத்து விட்டு வண்டல்களைப் பயன்படுத்தி நெதர்லாந்தின் கரையைப் பலப்படுத்த தொடங்கினர். நடந்து கொண்டிருந்த பணிகள், கடலின் ஆழத்திலிருந்த கலைப்பொருட்கள்(artifacts) மற்றும் புதைபடிமங்களைத்(fossil) தற்செயலாக டச்சுக் கடற்கரைகளுக்குக் கொண்டுவந்தன.

புதைபடிம வேட்டை பொழுதுபோக்கு (Fossil-hunter hobbyists) ஆர்வலர்கள் திரளாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிதிலமடைந்த எலும்பு ஆயுதங்களைக் கண்டெடுத்துச் சேகரித்தனர், இவை இடைக்கற்காலத்தைச் சேர்ந்த கூர்மையான வளைவு முனைகள் எனத் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் அறியப்பட்டது. வட கடலில் மட்டுமல்லாது , எட்டாயிரம் முதல் பதினோராயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட ஐரோப்பாவில் விவசாயிகள் வருவதற்கு முன்பு கடைசியாக வசித்த மக்கள் பயன்படுத்திய இவ்வகையான ஆயுதங்கள் அயர்லாந்திலிருந்து ரஷ்யா வரையிலான தளங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இடைக்கற்கால மக்கள், இந்த கூர்மையான முனைப்பகுதிகளை நீண்ட தண்டுகளுடன் இணைத்துக் கட்டி தங்கள் வேட்டை மற்றும் மீன்பிடி வாழ்வாதாரங்களுக்கு முக்கியமான அம்புகள், ஈட்டிகள் மற்றும் மண்டா(harpoons) போன்ற ஆயுதங்களை உருவாக்கினர். ஐக்கியப் பேரரசு(United Kingdom) மற்றும் ஐரோப்பியக் கண்டத்தில் எடுக்கப்பட்ட கூர்மையான வளைவு முனைகளைப் போன்று முறையான தொல்பொருள் தளங்களில் முறையான தோண்டல்களிலிருந்து மீட்கப்படாததால், பெரும்பான்மையான அறிஞர்கள் டச்சுக் கடற்கரையிலிருந்து எடுக்கப்பட்டவற்றைப் புறக்கணித்தனர்.

தற்போது லெய்டன் பல்கலைக்கழக தொல்பொருள் ஆய்வாளர்கள் தலைமையிலான ஒரு குழு, சில உபயோகமற்ற ஆயுதங்களை ஆராய்ந்து, இவ்வகையான கூர்மையான வளைவு முனைகள் எந்த இனத்திலிருந்து உருவாக்கப்பட்டன என்பதைத் தீர்மானிக்க மூலக்கூறு அளவீடுகளைச் செய்துள்ளது. இவ்வகையான பகுப்பாய்வு எலும்பில் எஞ்சியிருக்கும் புரதங்களைச் சார்ந்திருக்கிறது, அதனால் விஞ்ஞானிகள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நீருக்கடியில் புதைபட்ட கலைப்பொருட்களுக்குக் கூட சாத்தியமா என முக்கியமாகச் சோதிக்க விரும்பினர். இந்த சோதனை முறை வேலை செய்ததோடு அதிர்ச்சியூட்டும் முடிவுகளையும் அளித்தது, ஏறக்குறைய பத்தாயிரம் ஆண்டுகள் பழமையான பகுதிகளில் பெரும்பான்மையானவை சிவப்பு மான் எலும்பினால் செய்யப்பட்டிருந்தாலும் , இரண்டு மனித எலும்புக்கூடுகளிலிருந்தும் வடிவமைக்கப்பட்டவை.

“இந்தத் துறையில் ஒரு நிபுணர் என்ற முறையில், நான் அதை எதிர்பார்க்கவில்லை. இது மிகவும் அருமையானது” என்று நியூகேஸில் பல்கலைக்கழக தொல்பொருள் ஆராய்ச்சியாளர் பெஞ்சமின் எலியட் கூறுகிறார், அவர் இக்குறிப்பிட்ட ஆராய்ச்சியில் ஈடுபடவில்லை. இதற்கு முன்னெப்போதும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால், பண்டைய ஐரோப்பியர்கள் கவனமாக மனித எலும்புகளைக் கொடிய ஆயுதங்களாக வடிவமைத்தார்கள் என்பதற்கான தெளிவான ஆதாரங்களைக் கண்டுபிடிக்க முடிந்ததில்லை.

இடைக்கற்கால மக்கள் தங்களின் ஆயுதங்களுக்கு ஏன் சிவப்பு மான் மற்றும் மனித எலும்புக்கூடுகளைப் பயன்படுத்தினர் என ஆய்வு செய்த விஞ்ஞானிகள் குழப்பமடைந்தனர். இந்த ஆய்வுத்திட்டத்தில் பணியாற்றிய ஜெர்மனியின் லீப்ஜிக் நகரிலுள்ள மேக்ஸ் பிளாங்க் நிறுவனத்தைச் சேர்ந்த மானுடவியலாளர் வர்ஜினி சினெட் மத்தியோட் கூறியது, “இந்தப் பகுதிகளில்(points) என்ன நடக்கிறது?”. “இதற்கு என்ன அர்த்தம்?”.

மான் கொம்பு(antler) போன்ற பிற மூலப்பொருட்கள் இன்னும் எளிதாகக் கிடைக்கக்கூடியதாகவும் நீடித்திருக்கக்கூடியதாகவும் இருந்திருக்கும் என்பதால், நடைமுறை அல்லது பொருளாதார கவலைகள் சாத்தியமற்ற விளக்கங்களாகத் தோன்றின. மாறாக, பண்டைய வேட்டைக்காரர்கள் இந்த குறிப்பிட்ட எலும்புகளை அவர்களின் சமூக அல்லது ஆன்மீக நம்பிக்கை தொடர்பான குறியீட்டுக் காரணங்களுக்காகத் தேர்ந்தெடுத்ததாக ஆராய்ச்சியாளர்கள் முடிவு செய்தனர்.

“இது ஒரு பொருளாதார முடிவு அல்ல” என்று தொல்பொருள் ஆய்வாளர் ஜோனஸ் டெக்கர் கூறுகிறார், வரவிருக்கும் ‘தொல்பொருள் அறிவியல் - அறிக்கைகள்’ இதழ் ஆய்வின் முதன்மை ஆசிரியர். உணவில் மீதமான விலங்குகளின் பாகங்களிலிருந்து வலுவான பாகங்களை விரைவாக உருவாக்குவதே பண்டைய வேட்டைக்காரர்களின் பொருளாதார நடவடிக்கையாக இருந்திருக்கும். அவ்வாறான நிலையில் மான்கொம்பு, காட்டுக்காளை, ஐரோப்பிய காட்டுமான் மற்றும் இதர மான் இனங்களின் எலும்புகளிலிருந்து தயாரிக்கப்பட்ட பாகங்களைக் கண்டுபிடிக்க வேண்டுமென ஆராய்ச்சியாளர்கள் எதிர்பார்க்கிறார்கள். இவ்வகையான படைப்புகள் இடைக்கற்காலத்தின் டோகர்லாண்டில் பரவியிருந்தன, நவீன தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களின் சோதனைகள் அவற்றின் எலும்புகள் சிறந்த ஏவுகணை போன்ற உந்திவீசப்படுகிற(projectile) ஆயுதங்களை உருவாக்கும் என்பதைக் காட்டுகின்றன.

நெதர்லாந்திலுள்ள லெய்டன் பல்கலைக்கழகத்தின் முதுநிலை மாணவர் டெக்கரின் கூற்றுப்படி, பெரும்பான்மையாக சிவப்புமான் மற்றும் மனித எலும்புகளின் பயன்பாட்டின் படி விஞ்ஞானிகள் கண்டறிந்த கூற்று என்னவென்றால் “ஏன் இவ்வகையினங்கள் முக்கியமாகப் பயன்படுத்தப்பட்டது என்பதற்குக் கண்டிப்பாக வேறு சில காரணங்கள் மற்றும் ஒரு கலாச்சார காரணம் இருந்திருக்க வேண்டும்”.

டோகர்லாண்ட் பற்றிய இந்தக் கூற்றிற்கு இட்டுச்செல்லும் திட்டவட்டமான உந்துதல்கள் மர்மமாகவே இருக்கின்றன. “நவீன எலும்பின் பண்புகளை ஒர் ஏவுகணை போன்ற உந்திவீசப்படுகிற புள்ளிகளாகக் காண நீங்கள் அளவிட முடியும்” என்று டெக்கர் கூறுகிறார். “ஒர் இடைக்கற்கால வேட்டைக்காரரின் தலையில் உள்ள எண்ணங்களை நீங்கள் அளவிட முடியாது”.

இருப்பினும், இடைக்கற்கால மக்கள் மனித எலும்புகளை இவ்விதமாக உபயோகப்படுத்தியதை அறிந்தது ஒரு பெரிய கண்டுபிடிப்பு. “மனித விஷயங்கள் முற்றிலுமான அதிர்ச்சி” என்கிறார் எலியட்.

Dekker
இப்படம், ஆய்வுக்குட்படுத்தப்பட்ட கூர்மையான வளைவுப் பகுதிகள், வட கடலில் அவை கண்டெடுக்கப்பட்ட கடற்கரை மற்றும் அங்கு தோராயமாக அகழ்வாராய்ச்சி செய்யப்பட்ட பகுதியினைக் காட்டுகிறது. (டெக்கர் குழுவினரின் மூல ஆய்வரிக்கையிலிருந்து)

அவரைப் பொறுத்தவரை, முந்தைய ஆராய்ச்சியாளர்கள் அயர்லாந்தில் கண்டெடுக்கப்பட்ட சில, குறிப்பாக நீண்ட கூர்மையான வளைவுப் பகுதிகள் மனித எலும்புகளைக் கொண்டிருந்தன என்ற கருத்தை முன்வைத்தனர். அந்த ஊகங்கள், மனிதனைத் தவிர வேறு பெரிய பாலூட்டியினங்கள் இவை உருவாக்கப்பட்ட காலகட்டத்தில் தீவினில் இல்லை என்ற கூற்றின் அடிப்படையிலானவை. ஆனால் சமீப காலம் வரை அந்தக் கூற்றுகளைச் சோதிக்க எந்த தொழில்நுட்பமும் இல்லை.

பொதுவாகத் தொல்பொருள் ஆய்வாளர்கள் ஒரு எலும்பை மேலோட்டமாக பார்த்து அதன் அளவு மற்றும் வரையறைகளை அடிப்படையாகக் கொண்டு, அது எந்த விலங்கின வகை மற்றும் உடற்பகுதியைச் சார்ந்தது என்று அறிந்து கொள்ளமுடியும். ஆனால் இந்தக் கூர்மையான வளைவுப் பகுதிகளுக்கு அது கிட்டதட்ட சாத்தியமற்றது, ஏனென்றால் அவ்வாறு அடையாளம் காணத் தேவையான அம்சங்கள் இவற்றின் உற்பத்தி, பயன்பாடு மற்றும் அடக்கம் ஆகியவற்றின் மூலம் சிதைந்து போயுள்ளன.

கடந்த தசாப்தத்தில் இந்த சிக்கலைத் தீர்க்கும் புதிய தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது. மாஸ் ஸ்பெக்ட்ரோமெட்ரி(mass spectrometry) அல்லது ZooMS மூலமான விலங்கியல் தொல்பொருள்(zooarchaeology) முறை, இது எலும்பின் முக்கிய புரதமான கொலாஜனின்(collagen) மூலக்கூறு கட்டுமானத் தொகுதிகளைக் கண்டறிகிறது. இந்தக் கொலாஜன் மூலக்கூறுகள் விலங்கினங்களுக்கிடையே சற்று வேறுபடுவதால் இவற்றை அளவிடுவது எலும்பின் இனத்தினைச் சுட்டிக்காட்டலாம், பார்வைக்குரிய அம்சங்களால்(visual features) அடையாளப்படுத்த முடியாத அளவுக்குச் சிதைந்த எலும்புக்கூட்டின் துண்டுகள் மற்றும் சிற்பக் கலைப்பொருட்களுக்கும் கூட இந்த முறையினைப் பயன்படுத்தலாம்.

ZooMS முறையின் போது, விஞ்ஞானிகள் கொலாஜின் மூலக்கூறுகளைப் பிரித்தெடுக்கத் தூளாக்கப்பட்ட எலும்பின் கீற்றினை வேதியியல் முறையில் கரைக்கின்றனர், பின் அவை அளவீட்டுக் கருவியின் வழி செலுத்தப்படுகின்றன. இம்முறையில் வெள்ளாடு மற்றும் செம்மறியாடு, எலி மற்றும் சுண்டெலி போன்ற ஒத்த தோற்றமுடைய உயிரினங்களின் எலும்புகளை வேறுபடுத்துவது எளிதானது என நிரூபிக்கப்பட்டுள்ளது. கற்காலத் தளங்களைப் பொறுத்தவரையில், விலங்குகளின் எலும்புக்குவியலிலிருந்து அரிதான நியாண்டர்தால், டெனிசோவன் மற்றும் ஹோமோசேபியன்ஸ் மாதிரிகளைக் கண்டுபிடிக்க ஆயிரக்கணக்கான தீக்குச்சி அளவிலான எலும்புத்துண்டுகளைக் கூர்ந்தாராய்வு(scan) செய்வதற்கு இந்த செயல்முறை பயன்படுத்தப்பட்டுள்ளது. 2009 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, உலகெங்கும் உள்ள ஏராளமான கற்காலம் முதல் தற்காலம் வரையிலான தளங்களின் மீதங்களின் மீது வெற்றிகரமாகப் பயன்படுத்தப்படுகிறது.

ஆனால் இந்த செயல்முறை இடைக்கற்கால டோகர்லேண்டின் பகுதிகளில் செயல்படுமா என்று விஞ்ஞானிகள் கேள்வியெழுப்பினர், ஏனெனில் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் கடலுக்கடியில் இருந்தது கொலாஜன் புரதங்களை அழித்திருக்கலாம். “இங்குள்ள சவால் என்னவென்றால், அவ்வளவு நீண்ட காலம் நீருக்கடியில் மூழ்கியிருந்த பொருட்களிலிருந்து கொலாஜனை பிரித்தெடுக்கவும் அவற்றின் இனங்களை அடையாளம் காணவும் முடியுமா” என்பதே என்கிறார், தனது ஆராய்ச்சியின் மூலம் ZooMS நெறிமுறைகளைப் புதுமைப்படுத்த முயன்று கொண்டிருக்கும் சினெட்-மத்தியோட்.

2018 ஆம் ஆண்டு டெக்கர், லெய்டன் பல்கலைக்கழக தொல்பொருளியியல் துறையில் தனது இளங்கலை ஆய்வறிக்கைக்கான ஒரு சிறிய திட்டத்தில் முயற்சிக்க முடிவு செய்தார். டெக்கர் சில சேகரிப்பாளர்களிடமிருந்து அவர்களின் கூர்மையான வளைவுப் பகுதிகளிலிருந்து சிறிய அளவிலான எலும்புத் துணுக்கினை பிரித்தெடுக்க அனுமதி பெற்றார். அவர் மாதிரிகளை ஜெர்மனியின் லீப்ஜிக்கில் உள்ள மேக்ஸ் பிளாங்க் நிறுவனத்திற்குக் கொண்டு வந்த பின்னர் ZooMS பகுப்பாய்வைச் செய்ய சினெட்-மத்தியோட்டுடன் இணைந்து பணியாற்றினார். கலைப்பொருட்களின் ரேடியோகார்பன் தேதிகள், க்ரோனிங்கன் பல்கலைக்கழக உடனுழைப்பாளர்களால்(collaborators) அளவிடப்பட்டு அவை இடைக்கற்காலத்தைச் சேர்ந்தவை என உறுதிசெய்யப்பட்டது.

ஐரோப்பிய முன்வரலாற்று அறிஞர்களைப் பொறுத்தவரை, புதிய முடிவுகள் ஆவலைக்கூட்டியதோடு குழப்பமானவையாகவும் இருந்தது மட்டுமின்றி பதில்களை விட அதிகமான கேள்விகளையே முன்வைத்தன. ஏனெனில் அந்த ஆய்வில் சிதிலமடைந்த பத்து பொருட்கள் மட்டுமே சோதனை செய்யப்பட்டதோடு விஞ்ஞானிகளுக்கு மக்கள் எத்தனை முறை மற்றும் எந்தச் சூழ்நிலையில் மனித எலும்புகளாலான ஆயுதம் ஏந்தினர் என்றும் தெரியவில்லை. “பகுப்பாய்வு செய்யப்பட்ட பத்தில், மனித எலும்பின் பாகங்களால் ஆன இரண்டு ஆயுதங்களை அங்கு அவர்கள் கண்டுபிடித்தது மிகவும் சுவாரஸ்யமானது” என்று ஆய்வில் ஈடுபடாத கோபன்ஹேகன் பல்கலைக்கழகத்தின் முதுகலை ஆய்வாளர் தீஸ் ஜெட்னர் ட்ரொல் ஜென்சன் கூறுகிறார். “ஆனால் அது மிக நன்றாக அவர்கள் வைக்கப்போரிலிருந்து ஊசியைக் கண்டுபிடித்ததாகவே இருக்கும்”.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஜென்சன் மற்றும் சகாக்கள் மிகப்பெரிய ZooMS ஆய்வினை வெளியிட்டனர், இது டென்மார்க் மற்றும் சுவீடனின் சதுப்புக்கரி் நிலங்களிலிருந்து(peat bogs) மீட்கப்பட்ட நூற்றியிருபது இடைக்கற்காலக் கூர்மையான வளைவுப் பகுதிகளின் விலங்கினங்களைத் தீர்மானித்தது. அவர்கள் சிவப்புமான், கடமான், எருதுகளின் எலும்புகள் மற்றும் சில பழுப்பு நிற கரடியின் எலும்புகளையும் கண்டுபிடித்தனர், ஆனால் ஒன்று கூட ஹோமோசேப்பியன்களிடமிருந்து இல்லை. மேலும் அவர்கள், இடைக்கற்கால கைவினைஞர்கள் தேவையான இயந்திர பண்புகளுடனே எலும்பு வகைகளைத் தேர்வு செய்ததாக முடிவு செய்தனர். வேட்டைக்காரர்கள் தங்களின் மூலப்பொருட்களைக் கலாச்சாரக் காரணங்களுக்காக அல்லாமல் நடைமுறைக் காரணங்களுக்காகவே தேர்ந்தெடுத்திருந்தனர்.

மாறுபட்ட ஆய்வு முடிவுகள், இடைக்கற்காலத்தில் டோகர்லாண்டுல் வசித்தவர்கள் மட்டுமே மனித எலும்புகளைக் கொடிய ஆயுதங்களாக மாற்றியிருப்பதற்கான வாய்ப்பினை எழுப்புகின்றன. “அங்கே விசித்திரமான மனிதர்கள், வித்தியாசமான செயல்களைச் செய்தவர்கள் இருந்திருக்கக் கூடும்” என்கிறார் ஜென்சன்.

அவரும் பிற அறிஞர்களும், அந்த கூர்மையான வளைவுப்பகுதிகளின் மீது செய்யப்படும் மேலதிக ZooMS ஆய்வுகள் இந்தக் கேள்விகளைத் தெளிவுபடுத்தும் என்று நம்புகிறார்கள். புதிய ஆய்வு குறைந்த எண்ணிக்கையிலான கலைப்பொருட்களையே பகுப்பாய்வு செய்திருந்தாலும், அது டச்சுக் கடற்கரையிலிருந்து கண்டெடுக்கப்பட்ட பொருட்களின் அறிவியல் மதிப்பினை காட்டியது.

“நாங்கள் பாதுகாப்பாக அகழ்வாராய்ச்சி செய்யப்பட்ட சூழ்களிலிருந்தே கலைப்பொருட்கள் வருவதையே என்றும் விரும்புகிறோம்” என்கிறார் எலியட். ஆனால் டோகர்லாண்ட் தளங்கள் வட கடலுக்கடியில் அமைந்துள்ளன, சூழலுக்கப்பாற்பட்ட கடற்கரைக் கண்டுபிடிப்புகள் விலைமதிப்பற்ற, அணுகக்கூடிய ஆதாரங்களை வழங்குகிறது. “நாங்கள் அவற்றைக் கீழானதாகக் கருதமுடியாது” , மேலும் “நாங்கள் மெய்யாக அவற்றைத் தழுவி, அந்தப் பொருட்களிலிருந்து எங்களால் இயன்றளவு தகவல்களையும் புரிதல்களையும் பெற முயற்சிக்க வேண்டும்” என்று அவர் கூறுகிறார்.

தினமும் அதிகளவிலான புதைபடிமங்கள் மற்றும் தொல்பொருட்கள் டச்சுக் கடற்கரைகளிலிருந்து வெளிப்படுகின்றன, இது தொல்பொருள் சேகரிப்பு பொழுதுபோக்காக கொண்டவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துகிறது. இந்தச் சமூகத்திற்கான முகப்புத்தக குழுவில் தற்சமயம் சுமார் அறநூறு(600) உறுப்பினர்கள் உள்ளனர் என்று அக்குழுவின் நிர்வகிப்பாளரான ரோட்டர்டாமைச் சேர்ந்த எர்வின் வான் டெர் லீ கூறுகிறார். மேலும் அவர் “போட்டியும் மிகப் பெரியது” என்று கூறினார்.

ஹேக்கில் (The Hague) உள்ள பல்கலைக்கழக மாணவரான ரிக் வான் பிராக்ட் கிட்டதட்ட தனது பத்தாண்டுக் கால தேடல்களிலிருந்து சுமார் பத்தாயிரம் பழங்காலப் பொருட்களைக் கண்டுபிடித்திருந்தார். வான் பிராக்ட் மற்றும் வான் டெர் லீ இருவரும் தங்களது தொல்பொருட்களை ZooMS ஆய்வுக்குட்படுத்தினர். வான் டெர் லீயின் தொல்பொருட்கள் முடிவுகளைத் தரத் தவறிய நிலையில், வான் பிராக்ட்டின் தொல்பொருட்கள் எட்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்த சிவப்பு மான் என அடையாளம் காணப்பட்டது. அவற்றில் இரண்டு மனித எலும்புகள் என்ற செய்தியால் இரு சேகரிப்பாளர்களும் ஈர்க்கப்பட்டனர்.

இவ்வகையான எலும்புப் பகுதிகளுக்கப்பால், சுறாப் பற்கள், நியாண்டர்தால்களால் செய்யப்பட்ட கற்கருவிகள், நீண்ட காலமாக அழிந்துவரும் உயிரினங்களின் புதைபடிமங்கள் மற்றும் பிற புதையல்கள் டச்சுக் கடற்கரையில் கரை ஒதுங்குகின்றன. இவற்றைக் கண்டறியப் பயிற்சி தேவைப்படுவதால் பெரும்பாலாகக் கடற்கரைக்கு வருபவர்களுக்கு அங்கே என்ன இருக்கிறதென்றே தெரிவதில்லை. கோடைக்காலத்தில், “கடற்கரையில் நிறைய மக்கள் இருக்கிறார்கள் மேலும் அவர்கள் எல்லாவற்றின் மீதும் ஏறிச் செல்கின்றனர்” என்கிறார் வான் பிராக்ட். “அவர்கள் அவற்றைக் காண்பதில்லை”.

  • History
  • அறிவியல்
Sakthi Sekar

மொழிபெயர்ப்பு

ரா. சக்தி சேகர்

To be updated.

Smithsonian Logo

SMITHSONIAN MAGAZINE

Smithsonian magazine places a Smithsonian lens on the world, looking at the topics and subject matters researched, studied and exhibited by the Smithsonian Institution—science, history, art, popular culture and innovation—and chronicling them every day for our diverse readership. This article is a translated version of the original article "Ancient European Hunters Carved Human Bones Into Weapons" by Bridget Alex.