பாரம்பரிய பொருட்கள் திருட்டு - இந்தியாவிற்குத் தொடரும் சவால்

  • Sakthi Sekar
  • சமயிதா பானர்ஜி
    தமிழில்: சக்தி சேகர்
UNESCO

உலகளாவிய தொல்பொருள் சந்தையில் இந்தியாவின் பழமையான, புராதன கலைப்பொருட்களுக்கான தேவையும், வியாபாரமும் அதிகரித்து வரும் நிலையில், இந்தியா அதனது தொல்பொருள் மற்றும் கலாச்சார, புராதன பொருட்களின் சட்டவிரோத ஏற்றுமதியைத் தடுக்கக் கடுமையான சட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆயினும் கொள்ளையடிப்பதற்கு வழிவகுக்கும் வறுமை மற்றும் இந்த வரலாற்று நினைவுச்சின்னங்களுக்குப் போதுமான பாதுகாப்பின்மை காரணமாக அந்தச் சட்டங்களைச் செயல்படுத்துவது ஒரு மிகப்பெரிய சவாலாகவே உள்ளது. - சமயிதா பானர்ஜி

இந்தியாவின் அசோகா பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சிப் பயிற்சியாளர், தொல்பொருள், பாரம்பரியம் மற்றும் அதன் பாதுகாப்பு ஆகியவற்றில் ஆர்வம் கொண்ட இவர், 2018 இல் சஹாபீடியா-யுனெஸ்கோ புத்தாய்வு மாணவர் நிலையைப் பெற்றவர்

கொல்கத்தாவிலிருந்து முப்பது கிலோமீட்டர் தொலைவில், மேற்கு வங்கத்தின் 24 பர்கானாஸ்-வடக்கு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமமான பெரச்சம்பாவின் அருகேயுள்ள இழுத்துச்செல்லப்பட்ட தளமானது, கிழக்கு இந்தியாவின் மிகமுக்கியமான ஆரம்பக்கால நகர்ப்புற கடலோர தளங்களில் ஒன்றாகும். இன்று, கி.மு இரண்டாம் நூற்றாண்டுக்கு முந்தைய இந்தத் தளத்தின் தொன்மையான அழகிற்கோ அல்லது பெருமிததிற்கோயான எந்தத் தடயமும் இல்லை. அலட்சியமான அமைப்பு, போதிய ஆராய்ச்சியின்மை மற்றும் மோசமான பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு வெளிப்படையான எடுத்துக்காட்டு, சந்திரகேதுகர் இந்தியாவின் தொல்பொருள் பாரம்பரியத்தைச் சீர்குலைக்கும் இன்றைய பிரச்சனைகளின் அடையாளமாகும். தளத்திலிருந்து கொள்ளையடிக்கப்பட்ட ஏராளமான கலைப்பொருட்கள் உலகளவில் சிதறியுள்ளன, தற்போது அவை உலகின் முதன்மையான சிறந்த அருங்காட்சியகங்கள் மற்றும் தனியார் சேகரிப்பில் வைக்கப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும் இந்த வளமான பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்கான வழிமுறைகளும் உள்ளன. பழங்கால மற்றும் கலை பொக்கிஷங்கள் சட்டம், 1972 (1976ல் திருத்தப்பட்டது) அனைத்து விதமான தொல்பொருட்களின் ஏற்றுமதியைத் தடை செய்வதுடன் தனிப்பட்ட உரிமைகளின் மீது கடுமையான கண்காணிப்பை விதித்துள்ளது. அனைத்து தொல்பொருட்கள் மற்றும் தளங்களுக்கு மாநில உரிமை வழங்கப்பட்டுள்ளது. அப்போதிலிருந்து, கொள்ளைபோன இந்தியத் தொல்பொருட்களை மீட்டெடுப்பதற்கான தீவிர முயற்சிகளும் நடக்கிறது. பழங்கால மற்றும் கலை பொக்கிஷங்கள் சட்டம் இயற்றப்பட்ட பிறகும், 1977 மற்றும் 1979 க்கு இடையில் சற்றேறக்குறைய 3,000 தொல்பொருள் திருட்டுக்கள் பதிவாகியுள்ளன. யுனெஸ்கோவின் மதிப்பீட்டின்படி, 1989 வரை 50,000 க்கும் மேற்பட்ட கலைப் பொருட்கள் இந்தியாவிலிருந்து கடத்தப்பட்டுள்ளன. ஆனால் அதிகாரிகள் ஒப்புக்கொண்டபடி ஒரு சரியான எண்ணிக்கை சாத்தியமற்றது.

கொள்ளைக்கு ஒரு நீண்ட வரலாறு உள்ளது

இந்தியாவில் பழங்காலக் கலைப்பொருட்கள் மற்றும் தொல்பொருட்கள் கொள்ளையடிப்பது என்பது ஒரு மிக நீண்ட நெடிய வரலாற்றைக் கொண்டது. இன்று கொள்ளை என்பது பொருளாதார ஆதாயத்திற்கான ஒரு செயலாக இருந்தாலும், இது ஒரு காலத்தில் சட்டப்பூர்வமான, முறையான செயலாக, பூர்வீக குடிகளின் மீதான வெற்றியின் விளைவாகத் துணைக்கண்டத்தின் காலனித்துவ ஆட்சியாளர்களால் மேற்கொள்ளப்பட்டது.

நாட்டின் கலாச்சாரப் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்கும், பண்டைய நினைவுச்சின்னங்களைப் பராமரிப்பதற்கும், தொல்பொருள் தளங்களின் ஆராய்ச்சி மற்றும் கண்காணிப்பிற்காக ‘இந்தியத் தொல்பொருள் ஆய்வு மையம்’(ASI), 1861ம் ஆண்டில் பிரிட்டிஷ் ஆட்சியின் போது நிறுவப்பட்டது. தற்போது இந்தியக் கலாச்சார அமைச்சகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

வரலாற்றுக்கு முந்தைய காலம் முதல் காலனித்துவக் காலம் வரையிலான வெவ்வேறு காலகட்டங்களைச் சார்ந்த 3,650 நினைவுச்சின்னங்களின் பாதுகாப்பு மற்றும் பத்திரப்படுத்தும் பொறுப்பினை ASI ஏற்றுள்ளது. வரலாற்று நினைவுச்சின்னங்கள் மற்றும் தளங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த போதுமான ஊழியர்கள் இல்லாததின் பொருட்டு, சட்டங்களை முறையாகவும், கடுமையாகவும் அமல்படுத்துவதில் உள்ள தொய்வு ஒரு முக்கியக் கவலையாக உள்ளது.

கோவில்கள் மற்றும் தொல்பொருள் தளங்களிலிருந்த இந்தியப் புதையல்களில், குறிப்பிடத்தக்க சில நாணமற்ற திருட்டுக்கள் நடந்துள்ளன. மத்திய பிரதேசத்திலுள்ள கஜுராஹோ கோவில்களிலிருந்து (950 மற்றும் 1050 க்கு இடையில் சந்தெள்ளா வம்சத்தால் கட்டப்பட்டது மற்றும் 1986 முதல் உலகப் பாரம்பரிய பட்டியலில் பொறிக்கப்பட்டுள்ளது) நூற்றுக்கும் மேற்பட்ட சிற்றின்பத்தைக் குறிக்கின்ற கற்சிற்பங்கள் திருடப்பட்டன. முக்கியமாகப் பாதுகாக்கப்பட வேண்டிய அருங்காட்சியகங்கள் கூடத் தப்பவில்லை. 1968 ஆம் ஆண்டில், புதுதில்லியில் உள்ள தேசிய அருங்காட்சியகத்திலிருந்து 125 பழங்கால நகைகள் மற்றும் 32 அரிய தங்க நாணயங்கள் காணாமல் போயின.

தற்செயலாகக் கண்டெடுக்கப்படுபவை

பெரும்பான்மையாகக் கடத்தப்பட்ட கலைப் பொருட்கள் மேற்கில் விற்கப்படுவதோடு, அங்குள்ள அருங்காட்சியகங்களை வந்தடைகின்றன. விமான நிலையங்களிலுள்ள கடுமையான சோதனைகளின் காரணமாக, பெரும்பாலும் இந்தப் பொருட்கள் போலியான ஆவணங்களுடன் கடல் வழியாகவே அனுப்பப்படுகின்றன.

பெரும்பான்மையான இவ்வகைத் தளங்கள் உள்ளூர் தொல்பொருள் ஆர்வலர்கள் மற்றும் சேகரிப்பாளர்களின் தயவில் உள்ளன, அவர்கள் தாங்களாகவே தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களின் பணியை எடுத்துக் கொண்டவர்களாக இருக்கிறார்கள். கீழ் மேற்கு வங்காளத்தில் அமைந்துள்ள, உலகின் மிகப்பெரிய சதுப்புநிலக் காடான சுந்தர்பான்ஸ் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இதைப்போன்ற ஏராளமான தளங்கள் உள்ளன. பிராந்தியத்தின் சிக்கலான மற்றும் ஒழுங்கற்ற நதிகளின் தொடர்ச்சியான நகர்வுகளால் இவற்றில் ஏராளமான தளங்கள் அழிந்துவிட்டாலும், அவற்றில் பல மாநில தொல்பொருள் துறை மற்றும் இந்தியத் தொல்பொருள் ஆய்வு மையத்தின் கிழக்கு வட்டத்தினராலும் அகழ்வாராய்ச்சி செய்யப்பட்டுள்ளன.

ஆனால் சுந்தர்பான்ஸின் முக்கியப் பகுதிகளில், மீனவர்களும் உள்ளூர் மக்களும் தான் அதிக எண்ணிக்கையிலான கலைப்பொருட்களைக் கண்டெடுக்கிறார்கள். இந்தத் தற்செயலான கண்டுபிடிப்புகள் பின்னர்த் தொல்பொருள் விற்பனையாளர்களின் கைகளில் சென்று சேர்கின்றன அல்லது அதிர்ஷ்டமுள்ளவை உள்ளூர் தொல்பொருள் ஆர்வலர்களை அல்லது அருங்காட்சியகத்தை அடைவதற்கான வழியைச் சேர்கின்றன. வழக்கமான பொது ஏலங்களின் பற்றாக்குறை, அருங்காட்சியகங்களில் போதுமான தணிக்கையின்மை மற்றும் இந்தப் பொருட்களின் சந்தை மதிப்பை அறியக் கண்டெடுப்பவர்களுக்குச் சட்டப்பூர்வமான எளிய மாற்று இல்லாமை ஆகிய இவையனைத்தும் கடத்தலுக்கு முக்கிய பங்களிக்கின்றன.

பாரம்பரிய பொருட்கள்/ சின்னங்கள் பற்றிய கல்வி

உரிமம் பெறாத அல்லது தேர்வாய்வு செய்யப்படாத வியாபாரிகளிடமிருந்து தொல்பொருட்களைப் பெறுவது சட்டவிரோதமானது. ஆனால் இந்தியா போன்ற நாட்டில், பெரும்பாலான தொல்பொருட்கள் விவசாயிகள் அல்லது கட்டுமானத் தொழிலாளர்களால் கண்டெடுக்கப்பட்டு, இறுதியில் அவை ஒரு ரகசிய வலையமைப்பின் ஓர் அங்கமாக இருக்கும் இடைத்தரகர்களிடம் ஓப்படைக்கபடுகின்றன. அவர்கள், கண்டெடுத்தவர்க்குச் சொற்பமான தொகையைச் செலுத்திவிட்டு அதை அதிகத் தொகைக்கு ஏலம் கேட்பவர்க்கு விற்றுவிடுகிறார்கள். சட்டங்களின் கண்டிப்பு எதிர்வினையாகிறது.

ஆனால் சட்டங்களை அல்லது விதிமுறைகளை விட முக்கியமானது ஒர் இடத்தைப் பற்றிய அடிப்படை வரலாற்றுத் தெளிவை உள்ளூர் மக்களுக்கு ஏற்படுத்த வேண்டியது, அவசியமாகப் பள்ளிகளில். ஏனெனில் இறுதியாகத் தாங்கள் என்ன, எதற்காகப் பாதுகாக்கிறோம் என்று தெரியாத ஏதோவொன்றை மக்கள் ஏன் பாதுகாக்கப்போகிறார்கள்?

மேலும் தொல்பொருட்களைக் கண்டெடுப்பவர்களுக்கு அவற்றின் பொருளாதார மற்றும் வரலாற்று மதிப்பைப் பற்றியும், அவை அரசாங்க அதிகாரிகளால் சிறப்பாக ஈடுசெய்யப்படலாம் என்பதைப் பற்றியும் தெளிவுபடுத்தலாம். விளைவாக, வறுமை பாரம்பரிய தொல்பொருட்கள் கொள்ளையடிக்கப்படுவதற்கான அடிப்படை பிரச்சனையாக உள்ளது. தொல்பொருள் மற்றும் பாரம்பரிய பாதுகாப்பைப் பற்றிக் கல்வியில் சேர்ப்பதோடு, பஞ்சாயத்து மற்றும் மாவட்ட வாரிய அளவிலான உள்ளூர் அரசியல்வாதிகளை இதில் ஈடுபடுத்துவது, கண்காணிப்பைப் பலப்படுத்தவும் மற்றும் வரலாற்றுத் தளங்களுக்குத் தடையின்றிச் செல்லக்கூடிய உள்ளூர் கடத்தல்காரர்களைக் கட்டுப்படுத்தவும் உதவக்கூடும். மாநிலத்துறைகள் மற்றும் அருங்காட்சியகங்களைப் பொறுத்தவரையில் அவர்களின் சேகரிப்புகள் மற்றும் கண்டுபிடிப்புகளைத் தணிக்கை மற்றும் பதிவு செய்வதே முதன்மையாகக் கவனம் செலுத்தவேண்டிய விஷயமாக இருக்கிறது.

இந்திய மற்றும் இதர ஆசியத் தொல்பொருட்களுக்கான வளர்ந்து வரும் சந்தையின் நிகழ்வு, தேவையுள்ள பணக்கார நாடுகளுக்கும் மூலாதாரமான ஏழை நாடுகளுக்கும் இடையிலான இருவேறுபட்ட உறவின் காரணமாக ஏற்படுகிறது. ஆனால் ஏழை நாடுகள் என்று அழைக்கப்படுபவர்களிடமிருந்து வழங்கலை உடனடியாக எடுக்க வேண்டிய எளிமையான முன்முயற்சிகளால் மட்டுப்படுத்தலாம். இல்லையெனில் விரைவில் இந்தியாவின் வளமான தொன்மையான பராம்பரியங்களை அதன் சொந்த மக்களே அணுகுவதை நிறுத்தக்கூடிய சூழ்நிலை ஏற்படலாம்.

  • கல்வி
  • History
Sakthi Sekar

மொழிபெயர்ப்பு

ரா. சக்தி சேகர்

To be updated.

Courier Logo

THE UNESCO COURIER

Of all the journals published by the United Nations and its specialised institutions, The UNESCO Courier has always occupied first place for the number of its readers and the range of its audience, said the American journalist Sandy Koffler, the Courier's founder and first editor-in-chief, in 1988. This article is a translated version of the original article "India: Heritage theft remains a challenge" by Samayita Banerjee.