புத்தாக்கத்திற்கு (Innovation) பன்முகத்தன்மையும் துணிச்சலும் தேவை

  • Ugenther
  • கிறிஸ்டியான் மர்கியாரோ
    தமிழில்: யுகேந்தர்
innovations

சிறிய கூட்டமாக இருந்த காலத்தொட்டே, ஒரு குறிப்பிட்ட வழியில் சிந்திக்கவே நாம் கல்வியும் பயிற்சியும் பெற்றுள்ளோம். நம் தொழிலை/பணியைத் தேர்ந்தெடுக்கும் போது, ஒரு குறிப்பிட்ட சிந்தனை மற்றும் செய்கை வழியிலேயே, ஒரு உள மாதிரியுடனே (mental model) நாம் தீர்மானிக்கிறோம் (ஒருவேளை அறியாமலேயே). நம் பெற்றோர் அல்லது சக நண்பர்கள்; நம் குடும்பத் தொழிலின் வெற்றி அல்லது தோல்வி; விளையாடும் ஆட்டங்கள், பேசும் மொழி அல்லது இசை வகுப்புகள் என இவை அனைத்தும் நம்மில் செல்வாக்குச் செலுத்துகிறது. நமது செய்கைகள் அனைத்துமே, நாம் என்ன நினைக்கிறோமோ அதுவே நாம் என்ற தவிர்க்க முடியாத முடிவுக்கு இட்டுச் செல்கிறது.

புத்தாக்கம் என்பதை, ஒரு நோக்கத்துடன், வித்தியாசமாகச் செய்யக்கூடிய திறன் என வரையறுக்க விரும்புகிறேன். ஒரு இலக்கை வரையறுப்பது ஓரளவு எளிதானதே என ஏற்றுக்கொள்வேன். ஆனால் வித்தியாசமாகச் சிந்திப்பது, மாற்றம், விஷயங்களை வித்தியாசமான வழியில் செய்வது போன்றவை, பல ஆண்டுகளாகக் கற்றுக்கொண்ட பழக்கங்களுக்கு எதிராகப் போராடுவதாகும்.

நம்மில் மாற்றம் மற்றும் தன்மை மாற்றம் (transformation) விரும்புவோருக்கு, நம் செளகரியமான வலையத்திலிருந்து (comfort zone) வெளியே வர உதவும் எந்த ஒரு பயிற்சியும் மிகவும் கவர்ச்சிகரமானதாக இருக்கிறது. நேரியல் சிந்தனையை (linear thinking) ஒரு பக்கமாக வைத்து விடும் சவாலை நாம் விரும்புகிறோம், அதே முடிவு அல்லது எதிர்பாராத முடிவுக்கு வழிவகுக்கும் மாற்றுப் பாதைகளைக் கண்டறியும் பொருட்டு இதைச் செய்கிறோம்.

ஆனால் அதைப் புத்தாக்கம் எனக் கருத முடியாது, குறைந்தபட்சம் அதன் தூய்மையான நிலையின் அடிப்படையில். புத்தாக்கம் என்பது நாம் நினைவில் கொள்ளக்கூடிய புதிய சொற்களின் எண்ணிக்கையைப் பொருத்துக் கிடையாது, அல்லது நாம் மீண்டும் மீண்டும் புத்தாக்கர்கள் (innovators) என எத்தனை முறை சொல்வதிலும் கிடையாது.

ஒரு வாக்கியத்தில் 'பெருந்தரவு’ (‘Big Data’) அல்லது ‘செயற்கை நுண்ணறிவு’ (‘Artificial Intelligence’) போன்றவற்றைப் பயன்படுத்துவது, தொழில்நுட்பமே எதிர்காலம் என்று இன்னொருவருக்கு விளக்குவது, தொழிலாளர் உலகின் மாற்றம் குறித்த ஒரு கலந்துரையாடலுக்குத் தயாராவது, போன்றவற்றைச் செய்வதால் தாங்கள் புத்தாக்கர்கள் என்று சொல்வது, புரிந்து கொள்ளாத ஒரு யதார்த்தத்தை உணராமல் இருக்கச் செய்யும் காரியமாகும்.

கடந்த காலத்தில் யாரும் தங்கிவிட விரும்புவதில்லை அல்லது அங்குச் செளகரியமாக இருப்பதாக உணர விரும்புவதில்லை. புத்தாக்கத்தை அடைய நாம் எடுக்கும் எந்த முயற்சியானாலும், வித்தியாசமாகச் சிந்திக்க முடியாவிட்டால் நாம் ஒருபோதும் வித்தியாசமான முடிவுகளை அடைய முடியாது. பெரும்பாலும், நாம் அதே முடிவையே அடைவோம், ஒருவேளை வழியில் சில சிறிய வேறுபாடுகளுடன்.

இதை நான் பின்வருமாறு விளக்குகிறேன்: நான் இந்தக் கட்டுரையைப் பத்து முறை எழுதலாம், ஒவ்வொரு வரியும் அதே பொருளுடன் வேறு மாதிரியும் எழுதலாம், இரவில் எழுதலாம் அல்லது பகலில் எழுதலாம். நான் இதை வேறு விதமாகச் சொல்வதாக இருக்கலாம். ஆனால் இறுதியில், முடிவு ஒரே மாதிரியாகவே இருக்கும். என் சொற்கள் உங்கள் மீது ஏற்படுத்தும் விளைவில் அதிக வேறுபாடு இருக்காது. இதன் மூலம் நாம் கற்றுக்கொள்ள முடியாது என்று சொல்லவில்லை, ஆனால் நாம் என்னவோ அதுவே நாம் என்பதை மறுக்காமல் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதை ஏற்றுக்கொள்வதன் மூலம் மட்டுமே, நாம் ஏற்படுத்தக்கூடிய விளைவு கட்டுப்படுத்தப்பட்டது எனவும் மற்றும் நாம் எப்படி நினைக்கிறோம் என்பதைப் பொறுத்தே அந்த விளைவு என்பதைப் புரிந்து கொள்ள ஆரம்பிக்க முடியும். அந்த மாற்றம், உண்மையான ஆழமான மாற்றம், ஏற்கனவே இல்லாத ஒன்றை நாம் சேர்க்கும்போதே நிகழும்.

அறுபதுகளின் பிற்பகுதியில், 3M நிறுவனத்தில் வேதியியலாளராகப் பணியாற்றிய ஆர்ட் ஃப்ரை (Art Fry), ஞாயிற்றுக்கிழமைகளில் தேவாலய பாடகர் குழுவில் பாடுவார். பாடல் புத்தகத்தின் பக்கங்களுக்கு எளிதாகச் செல்ல, அதில் அவர் சிறிய காகிதத் துண்டுகளை (பக்க குறிப்பான்களாக - புக்மார்க்) செருகுவார். புத்தகத்தைத் திறக்கும்போது அவை தரையில் விழுந்துவிடுவது வழக்கம். ஒரு நாள் அவர் தனது சக பணியாளரான ஸ்பென்சர் சில்வர் கண்டுபிடித்த பசையை நினைவு கூர்ந்தார். அந்தப் பசை எதையும் சரியாக ஒட்டுவதில்லை என நிறுவனத்தால் நிராகரிக்கப்பட்டது. பிரச்சனை என்னவென்றால், பசை காகிதத்தைச் சரியாகப் பிடித்துக் கொள்ளாமல் எளிதில் தடையின்றி வந்தது, காகிதத்தில் பசையின் எந்தத் தடயங்களையும் விடவில்லை மற்றும் அதில் சேதமுமில்லை. ஃப்ரை, தனது காகித பக்க குறிப்பான்களில் அதைப் பயன்படுத்துவதற்கும், அவற்றை சுய ஒட்டுப்பசை (self-adhesive) ஆக்குவதற்கும் ஒரு பரிசோதனையைத் தொடங்கினார். இதுவே போஸ்ட்-இட்'இன் (Post-It) ஆரம்பம். 3M'இன் தற்போதைய விற்பனையில் இருக்கும் கிட்டத்தட்ட 4,000 போஸ்ட்-இட் போன்ற வழித்தோன்றல் தயாரிப்புகளுக்கு இதுவே காரணமாகும்.

திறமையான, தகுதி வாய்ந்த நபருக்குச் சிறந்த காரியங்களைச் செய்ய நல்ல வாய்ப்பு உள்ளது. இரண்டு தகுதி வாய்ந்த திறமையான நபர்களுடன் ஒப்பிடும் போது முன்னது ஒன்றுமில்லை. ஒரு அணியுடன் ஒப்பிடும் போது, இரண்டு நபர்கள் ஒன்றுமில்லை. மாறுபட்ட பின்னணி கொண்டவர்கள் ஒன்றிணைப்பதில் அற்புதமான விஷயம் என்னவென்றால், உலகம் விரிவடைவது அப்போதுதான். வித்தியாசமாகச் சிந்திக்கும் ஒருவரைக் கேட்கும்போதும் பார்க்கும்போதும், பிரபஞ்சத்தின் எல்லைகள் மேலும் தொலைவில் இருப்பதை நீங்கள் கண்டுகொள்வீர்கள். வித்தியாசமாகச் சிந்திக்கும் ஒரு முழு அணியையும் கவனித்தால், எல்லைகள் (boundaries) சார்பின் (bias) கண்டுபிடிப்புகள், அதுவே நாம் எப்படி இருக்கிறோம் மற்றும் எப்படிச் சிந்திக்கிறோம் என்று வழிநடத்துகிறது, என்பதை நீங்கள் கண்டுகொள்வீர்கள்.

சாத்தியங்கள் வரையறுக்கப்பட்டவை, நமக்குத் தெரிந்தவை அல்லது புரிந்துகொண்டவை மட்டுமே இங்கு இருப்பவை எல்லாம், என்று நம்ப வேண்டும் என எந்தக் காரணமும் இல்லை. பிரபஞ்சத்தின் தோற்றம் குறித்து ஒரு பொறியியலாளரையும் ஒரு வர்ணம் தீட்டுபவரையும் (painter) பேச அழைக்கலாம். வண்ணம் தீட்ட பொறியாளரைப் நாடுங்கள், அல்லது ஒரு பொருளின் வலிமையைக் கணக்கிட வர்ணம் தீட்டுபவரை நாடுங்கள். அவர்களில் யாராவது வெற்றிகரமாகக் கொடுத்த மாற்றுப் பணியைச் செய்வார்களா எனத் தெரியாது, ஆனால் அதுவே கடைசியாகக் கவனிக்க வேண்டிய ஒன்றாகும்.

புத்தாக்கம் நோக்கமாக அல்ல, ஆனால் வழிமுறையாக இருக்க வேண்டும். எந்தவொரு அம்சத்திலிருந்தேனும் தகவல்தொடர்பு துறையில் பணி செய்பவர்கள் மற்றும் பங்களிப்பவர்கள், தரவு வல்லுநர்கள் (data experts), டெவலப்பர்கள், உளவியலாளர்கள், சில இளைஞர்கள், அனுபவம் வாய்ந்தவர்கள், ஆரம்ப நிலையில் உள்ளவர்கள் மற்றும் வல்லுநர்கள், உற்சாகமானவர்கள் மற்றும் சந்தேகிக்கும் திறன் கொண்டவர்கள் எனப் பலவிதமான பின்னணியிலிருந்து வந்தவர்களுடன் அனைவரும் மேசையைச் சுற்றி அமர்ந்து விவாதிக்க, பேச வேண்டும். ஒரு வாடிக்கையாளர் நம்மை அழைக்கும்போது என்ன செய்வது என்று நமக்குத் தெரியும்; நமக்குத் தெரியாதது என்னவென்றால், நாம் இன்னும் எவ்வளவு கற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான்.

பல்வேறு பின்னணியிலிருந்து வந்தவர்கள் நம்முடன் இல்லையெனில், நம் மனதில் இருக்கும் சிந்தனை (idea), தெளிவற்றதாகவும் இருக்கலாம், நாம் சோதிக்கும் வரை சாத்தியமாகுமா எனத் தெரியாது. புத்தாக்கம் ஒரு வலி நிவாரணி, இது சலிப்பு, சோர்வு அல்லது அதிகப் பொறுப்பு ஆகியவற்றிலிருந்து விடுவிக்கும்.

ஆனால் புத்தாக்கங்களை உருவாக்க நாம் தைரியமாக இருக்க வேண்டும். நாம் சங்கடமாக உணரலாம் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும், நமது நம்பிக்கைகளைக் கேள்வி எழுப்புவதைப் பொறுத்துக் கொள்ள வேண்டும், நமது மோசமான அச்சங்களை எதிர்கொள்ள நம்மையே கட்டாயப்படுத்த வேண்டும். அதிக உழைப்பைக் கோரும், கடினமான, நீண்ட செயல்முறை கொண்டவை. ஆனால் இறுதியில், வரம்புகள் (limits) இல்லை என்பதைக் கண்டடைவது மிகவும் நல்ல உணர்வைக் கொடுக்கும், நாம் உண்மையில் சுதந்திரமாக இருக்கிறோம் மற்றும் அந்தப் போராட்டத்தின் ஒவ்வொரு நிமிடமும் மதிப்புக்குரியது எனப் புரிந்து கொள்வோம்.

பல்வேறு பின்னணியிலிருந்து வந்த நபர்களைப் பணியில் அமர்த்துங்கள், அவர்களுக்கு ஒரு இலக்கை கொடுக்கவும், புத்தாக்கம் அங்கு இருப்பது உறுதி.

  • ஸ்டார்ட் அப்
  • கல்வி
Ugenther

மொழிபெயர்ப்பு

யுகேந்தர்

சென்னையில் வசிக்கும் மென்பொருள் பொறியாளர். மொழிபெயர்ப்பில் ஆர்வம் கொண்டவர். பல கட்டுரைகளை மொழிபெயர்த்துள்ளார்.

Uno Logo

UNO-MAGAZINE

UNO is an LLYC IDEAS publication created for clients, industry professionals, journalists and opinion leaders. This article is a translated version of the original article "Innovation requires diversity and courage" by Cristian Marchiaro.