ஆர். கே லஷ்மண் : ‘காமன் மேனின் (Common man) அமைதியும், இருப்பும்’

  • Mohan Prabhaharan
  • ஷபரி சவுத்ரி
    தமிழில்: மோகன் பிரபாகரன்
RK Laxman Cartoon

எந்த வித மறுப்புமின்றி இந்தியாவின் மிகச்சிறந்த கார்ட்டூனிஸ்ட் யார் என்று கேட்டால், அனைவரும் ஆர்.கே லஷ்மண் என்றுதான் சொல்வார்கள். நேர் எதிர் கருத்துகளோடு (irony) விளையாடுவதும், எளிய கோட்டோவியங்கள் வழியே ஆழமான கருத்துகளை விதைப்பதுமே அவரது தனித்தன்மை. 60 ஆண்டுகளுக்கும் மேலாக அவரது அரசியல் கேலிச் சித்திரங்கள் மக்களின் மனதில் எப்படி நீங்கா இடம் பிடித்திருந்தது என்பதைத் தேடியே இந்தக் கட்டுரை.

1930களில் ராசிபுரம் கிருஷ்ணசாமி ஐயர் லஷ்மணனை பம்பாயின் புகழ்பெற்ற ஜே.ஜே கலைக்கல்லூரி நிராகரித்தபோது, இந்த இளைஞனுக்கு எதிர்காலத்தில் தன்னுடைய கல்லூரியிலேயே சிலை வைப்போம் என்று அவர்களின் நிர்வாகத்துக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இங்கு படிக்கக்கூடிய அளவிற்கு திறமையில்லை என்று சொல்லி வெளியேற்றப்பட்ட ஆர்.கே லஷ்மண் தான் பின்னாளில் இந்திய அரசியல் கேலிச்சித்திர ஓவியர்களில் மிகச்சிறந்தவர் என்று புகழ்பெற்றார்.

கல்லூரி நிர்வாகம் தன்னை நிராகரித்தபோதும் துவண்டு போகாமல், தன்னுடைய சொந்த முயற்சியால் தனது திறமையை செழுமைப்படுத்தத் தொடங்கினார். அதுதான் அவரை இந்தியா முழுமைக்கும் ‘You Said It’ என்கிற வார்த்தையோடு கொண்டு சேர்த்தது. கேலியும், கிண்டலையும் தாண்டி அவரது அரசியல் கேலிச்சித்திரங்கள் ஏன் அனைத்து தரப்பு மக்களாலும் கொண்டாடப்பட்டன? அதற்கான பதில் அவரது ஓவியச் சட்டகங்களுக்குள்ளும், சமரசமின்மைக்குள்ளும் ஒளிந்திருக்கிறது.

ஒரு நேர்த்தியான கோடு

சுதந்திர இந்தியாவின் ஆரம்ப காலகட்டம் பல்வேறு அரசியல் கார்ட்டூனிஸ்ட்களை உருவாக்கியது. அதில் ஆர்.கே லஷ்மண் போன்றவர்கள் புதிய ஜனநாயகத்தின் காவலர்களைப் போல செயல்பட்டார்கள். அதில், முன்னணி நாளிதழ்களில் பணியாற்றிய பி.கே.எஸ் குட்டி, அபு ஆபிரஹாம், ஓ.வி விஜயன், சுதிர் டார் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். ஆர்.கே லஷ்மணனைப் போலவே இவர்களும் மேற்கத்திய கார்ட்டூனிஸ்ட்டுகளின் தாக்கத்தைப் பெற்றிருந்தார்கள்.

பெங்களூருவில் உள்ள இந்திய கார்ட்டூனிஸ்ட் கல்லூரியின் நிர்வாகி வி.ஜி. நரேந்திரா கூறுகையில், ’லஷ்மணைப் போலவே புகழ்பெற்ற கார்ட்டூனிஸ்ட்டுகளான ஷங்கர் பிள்ளை, அஹமது, பால் தாக்கரே, பி.வி ராமமூர்த்தி ஆகியோர் மேற்கின் மிக முக்கியமானவரும், கார்ட்டூன் உலகின் முன்னோடியுமான சர் டேவிட் லோவின் (Sir David Low) தாக்கத்தைக் கொண்டிருந்தார்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

RK Laxman - Common Man

நியூசிலாந்தில் பிறந்த கார்ட்டூன் மற்றும் கேலிச்சித்திர கலைஞரான டேவிட் லோ, இங்கிலாந்தில் பல ஆண்டுகள் பணியாற்றினார். புகழ்பெற்ற கார்ட்டூனிஸ்டான விக்டர் வேய்ஸ்(Victor Weisz) போன்றோரின் உலகளாவிய தாக்கங்களை கொண்டிருந்த ஓவியர் குட்டியை விடவும், லோவின் தாக்கம் லஷ்மண் அவர்களிடத்தில் அதிகம் இருந்தது என இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையின் மூத்த அரசியல் கார்ட்டூனிஸ்ட் இ.பி உன்னி குறிப்பிட்டுள்ளார். லஷ்மணின் சித்திரங்கள் அனைத்தும், அழகியலோடு அளந்து வரையப்பட்ட தொனியை ஒத்திருக்கும். அதே நேரம் அது எந்தவித விதிகளையும் ஒத்து இருக்காது. அது பார்ப்பதற்கு லோவின் பாணியை கொண்டிருக்கும் என்கிறார் உன்னி. அதுவே, லஷ்மணின் தனிச்சிறப்பாகவும் அமைந்திருந்தது.

லஷ்மணின் சக காலத்தில் வாழ்ந்த ஓவியரான டாரின்(Sudhir Dar) கேலிச்சித்திரங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட பார்வையையும் கொடுத்தது. லஷ்மண் அப்படியே லோவை பின்பற்றாமல் அவரின் பாணியை எடுத்து அதை மேலும் மெருகேற்றினார் என்றும் உன்னி குறிப்பிடுகிறார். ஒரு கேலிச்சித்திரம் நிகழும் காலத்தைக் குறிக்க லோ எப்போதும் தடிமனான கோடுகளைப் பயன்படுத்துவார். ஆனால், லஷ்மண், அதை டெக்ஸ்சர்களின் (Texture) மூலம் வெளிப்படுத்தும் பாணியைப் பயன்படுத்தினார். தடிமனான வெளிக்கோடுகள், ஒரு ஸ்ட்ரோக் மூலம் வரையப்பட்ட ஓவியங்கள் ஆகியவே லஷ்மணின் ஓவியங்களின் பிரதான இடத்தைப் பிடித்திருந்தன.

தனது சுயசரிதையான காலத்தின் சுரங்கம் புத்தகத்தில்(The Tunnel of Time), ’தான் எப்போதுமே தனது அறையின் ஜன்னலில் இருந்து வெளியே பார்த்தே, தனது ஓவியங்களை வரைந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். அன்றாடம் நாம் பயன்படுத்தும் பொருட்களை நான் வரைந்து பழகியதே ஒரு பொருள் குறித்த முழுமையான சித்திரத்தை வரைவதற்கான திறமையை தனக்கு வழங்கியது’ என்றும் அதில் எழுதியுள்ளார்.

சட்டகத்தின் உள்ளிருந்து பொருள் தருதல்

பொருத்தமற்ற கூறுகளை சரியான விகிதத்தில் ஒரு ஓவியத்தில் பயன்படுத்துவதே கார்ட்டூன் வரைவதில் முக்கியமான விதி. அதை சரியான முறையில் கையாண்டார் லஷ்மண். எடுத்துக்காட்டாக பட்ஜெட் குறித்த ஒரு ஓவியத்தில், குடிமக்கள் வறுமையில் உழல்வதைச் சித்தரிக்க, கிழிந்த கந்தல் துணி ஒன்றில், பிரகாசமான சூரிய உதயத்தை வரைந்து அதில் பட்ஜெட் என்று குறிப்பிட்டிருப்பார். இந்தியாவின் நிதர்சனமான உண்மையை ஒரு சாதாரண கோட்டோவியத்தில் விளக்கிச் சொல்லி இருப்பார்.

ஓவியர் விஜயனின் பாணியில் இல்லாமல், லஷ்மணின் ஓவியங்கள் அன்றாட வாழ்வின் யதார்த்தத்தை நோக்கியே சாய்ந்திருக்கும். அதேநேரம், ஸ்டேட்ஸ்மேன் மற்றும் இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையின் ஓவியரான ராஜேந்திர பூரியின் ஓவியங்களைப் போல கோபத்தையும் வெளிப்படுத்தாமல், அழுத்தமாக இருக்கும். அதைத்தான் உன்னி, எளிய கோடுகளின் மூலம் ஆழமான கருத்துத் தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பார் லஷ்மண் என்று குறிப்பிடுகிறார். அது சம்பந்தப்பட்டவர்களுக்கு கொடுக்கைப் போல குத்தும் வல்லமையும் கொண்டிருந்தது.

RK Laxman

ஓவியங்களில் உள்ளடக்கமும், எழுத்தும்

தனது கேலிச்சித்திரங்களில் ஓவியங்கள் மட்டுமில்லாது, தேவையான இடங்களில் எழுத்துகளையும் பயன்படுத்தி இருப்பார் லஷ்மண். அவை பயன்படுத்தப்பட்ட இடங்களும், அவற்றின் உள்ளடக்கமும் கேலிச்சித்திரத்தின் பொருளை சிதைக்காத வண்ணம் பொருந்தி இருக்கும். சில நேரங்களில் அவை, கேலிச்சித்திரத்தின் எதாவது ஒரு பாத்திரத்தின் வசனமாகவோ அல்லது அந்த சித்திரத்தின் தலைப்பாகவோ மாறியிருக்கும்.

குறியியல்(semiologist) அறிஞர் ரோலண்ட் பார்த்ஸ்(Roland Barthes) எழுதிய ’படங்களின் சொல்லாட்சி’ (The Rhetoric of the Image) என்கிற புத்தகத்தில், ஒரு ஓவியத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் எழுத்துகள் anchorage and relay என இரண்டு வகை தன்மையைக் கொண்டிருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். படிப்பவர்களுக்கு எது தேவை என்பதை உணர்த்தும் வகையில் குறிப்பிடப்பட்டிருக்கும் எழுத்துகள் anchorage என்றும், கார்ட்டூன் பாத்திரங்கள் பேசும் வசனங்கள் relay என்றும் வகைப்படும். இவை இரண்டும் சேர்ந்து எப்போதும் ஒத்தக் கருத்தை வெளிப்படுத்தும் வகையில் இருக்க வேண்டும் அதுவே சிறந்த படைப்பு என்று பார்த்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

லஷ்மணின் கேலிச்சித்திரம் ஒன்றில், எழுத்துகளின் மூலம் இந்த இந்திய சமூகத்தின் அவலங்கள் குறிப்பிடப்பட்டிருக்கும். ஒரு கல்லறையில் பல ஆண்டுகளுக்கு முன்னதாகவே புதைக்கப்பட்டதாக ஒரு ஓவியம் அதை குறித்திருக்கும். அந்த ஓவியத்தின் ஒரு ஓரத்தில், ’அவை மீண்டும் மீண்டும் வெளியே வரும்; காரணம், அவை அரசியல் செல்வாக்குப் பெற்றிருப்பதே’ என்று எழுதப்பட்டிருக்கும். இந்திய சமூகத்தின் அவலத்தை இதைவிட, வேறு எந்த கேலிச்சித்திரமோ, கட்டுரையோ தெளிவாக விளக்கிவிட முடியாது.

இதை வெறும் எழுத்தை வைத்து மட்டும் விவரிக்க முடியாது. தேவையான அளவு எழுத்தும், அதே நேரம் கோட்டு ஓவியங்களும் இணைந்தே அந்த பொருளை வெளிக்கொண்டு வரும். அதில்தான் அந்த கேலியும், கருத்தும் இணைந்திருக்கிறது. ஆனால், சக ஓவியர்களான ஆபிரஹாம் மற்றும் விஜயன் எழுத்துகளைப் பயன்படுத்துவதை முடிந்த அளவுக்குத் தவிர்த்திருக்கிறார்கள்.

காமன் மேன் : சின்னமாக மாறிய பிரதிபலிப்பு

டாக்டர் சுஷ்மிதா சாட்டர்ஜியின் ’Cartooning Democracy: The’ Images of R.K. Laxman’ என்னும் புத்தகத்தில், லஷ்மணின் ஓவியங்கள் எப்போதும் போதுமான அளவுக்கு இந்தியத்துவத்தை அடையாளப்படுத்தும் வகையிலேயே இருந்துள்ளது. லஷ்மணின் காமன் மேன் சித்திரத்தில், கோடு போட்ட சட்டை, எளிமையான வேட்டி, சொட்டை விழுந்த தலையில் ஓரிரு முடிகள், எப்பொழுதுமே வாயைத் திறக்காத மவுனம், கண்ணாடி, உயர்ந்திருக்கும் புருவம் என அதை இந்தியர்களின் மனசாட்சியாகவே படைத்திருப்பார். அதை யாருமே மறுக்க முடியாது. தன்னைச் சுற்றி நடக்க்கூடிய எதையுமே உள்வாங்கத் தயாராக இருக்கும் வகையில், அமைதியாகவும் தற்செயலாகவும் இருக்கும்படி அந்த சித்திரத்தை அவர் வரைந்திருப்பார். அதுதான், சுமார் 60 ஆண்டுகள் இந்தியர்களின் மனசாட்சியாக நாளிதழ்களில் உலாவியது.

தன்னை எப்போதும் செயல்களுக்கு நடுவே இருக்கும் மனிதனாக கிரகித்துக்கொண்டார். ஆனால், எப்போதும் தனக்காக சட்டகத்துக்குள் இருந்தே அதை கவனித்து பதிவு செய்திருக்கிறார்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

  • Media
  • History
Mohan Prabhaharan

மொழிபெயர்ப்பு

மோகன் பிரபாகரன்

To be updated.

Sahapedia Logo

SAHAPEDIA

Sahapedia is an open encyclopedic resource on the arts, cultures and histories of India. This article is a translated version of the original article "RK Laxman: The ‘silent, incidental presence’ of the Common Man" by Shabari Choudhury.