கொண்டாடப்படாதவர்: ஜேம்ஸ் எல்லிஸ் லுவால்
ஜெஸ்ஸி ஓவன்ஸ் உடன், ஆப்பிரிக்க - அமெரிக்க தடகள வீரர் (விஞ்ஞானியும்கூட) இன்னொருவரும் 1936 பெர்லின் ஒலிம்பிக்கில் பங்கேற்றார்.
2021 டோக்கியோ ஒலிம்பிக் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துக்கொண்டிருக்கும் இந்நேரத்தில், கொண்டாட மறந்த ஆப்பிரிக்க - அமெரிக்க விஞ்ஞானி ஒருவரைப் பற்றித் தெரிந்துகொள்வோம். ஆனால், அதற்கு ஜெர்மனியில் நடந்த 1936 பெர்லின் ஒலிம்பிக் தொடர் வரை முன் செல்லவேண்டும். எல்லையற்று விரிந்துகொண்டிருந்த நாசி ஆட்சியைத் தவிர்த்து அதிகம் பேசப்பட்டது, அந்த 11-வது ஒலிம்பிக் தொடரில் தனி ஆளாக அசத்திய ஜெஸ்ஸி ஓவன்ஸ் (Jesse Owens) ஆரியர்களே உயர்ந்த இனம் என்ற ஹிட்லரின் எண்ணத்தை அவர் கண்கள் முன்பாகவே உடைத்து நான்கு தங்கப் பதக்கங்கள் வென்று அசத்தினார் ஓவன்ஸ். (2016-ம் ஆண்டு வெளியான 'ரேஸ்' (Race) திரைப்படத்தை உங்களுக்குப் பரிந்துரைப்பேன். ஓவன்ஸின் சாதனைகளைப் பார்த்து நாம் வியக்கும் வகையில் எழுதப்பட்டிருக்கும் அந்தத் திரைப்படம்).
ஆனால், வாசகர்களுக்குத் தெரியாத இன்னொரு ஆப்பிரிக்க அமெரிக்க தடகள வீரர் 1936 ஒலிம்பிக்கில் மிகச் சிறப்பாக செயல்பட்டிருந்தார்: ஜேம்ஸ் எல்லிஸ் லுவால் (James Ellis LuValle). 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் அவர் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார். நான்கு ஆண்டுகள் கழித்து, வேதியலில் (இரண்டாவது பாடமாக கணிதம்) முனைவர் பட்டம் பெற்றார். வேதியல் துறையின் முன்னோடி லைனஸ் பாலிங் வழிகாட்டுதலில், கலிஃபோர்னியா தொழில்நுட்ப நிறுவனத்தில் அந்தப் பட்டம் பெற்றார்.
சான் ஆன்டானியோவில் நவம்பர் 1912-ல் பிறந்தார் லுவால். அவர் தந்தை ஜேம்ஸ் A.லுவால் ஒரு மதகுரு. அவர் அம்மா இசபெல் எல்லிஸ், இசை ஆசிரியராக இருந்தவர். ஜேம்ஸுக்கு மாய்மே E.லுவால் என்றொரு இளைய சகோதரி இருந்தார். சில காலம் வாஷிங்டன் டி.சி-யில் வசித்த அந்தக் குடும்பம், பிறகு தெற்கு கலிஃபோர்னியாவில் குடியேறியது.
லாஸ் ஏஞ்சலஸ் பாலிடெக்னிக் உயிர்நிலைப் பள்ளியில் பட்டம் வென்று வெளியேறிய லுவால், லாஸ் ஏஞ்சலஸில் உள்ள கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் (UCLA) தன் கல்லூரிப் படிப்பைத் தொடங்கினார். பெர்லின் ஒலிம்பிக்கில் பங்கேற்ற அதே 1936-ம் ஆண்டு வேதியலில் பி.ஏ (B.A.) பட்டம் வென்றார். 1988-ம் ஆண்டு கொடுத்த ஒரு நேர்கானலில், ஜெஸ்ஸி ஓவன்ஸ் மீதிருந்த அதீத எதிர்பார்ப்பை ஆசையாக நினைவுகூர்ந்தார் லுவால். மிகவும் ஆர்வமான சில டீனேஜ் பெண்கள் “Wo ist Jesse?” (ஜெஸ்ஸி எங்கே?) என்று கத்திக்கொண்டே இருந்தனர் என்று கூறினார் லுவால். அதனால், ஜெஸ்ஸி ஓவன்ஸுக்கு பெர்லினில் செக்யூரிட்டி தேவைப்பட்டது என்றும் அவர் கூறினார்.
வேதியல் துறையில் இளங்கலை பட்டப்படிப்பை அவர் முடிக்கும் தறுவாயில், ஒரு முதுகலை படிப்பை அறிமுகப்படுத்தியது கலிஃபோர்னியா பல்கலைக்கழகம் (UCLA). ஒலிம்பிக் முடிந்து திரும்பியபிறகு, பட்டதாரி உதவியாளருக்கான வாய்ப்பு (graduate assistantship) கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்திலிருந்து வந்திருப்பதாக தன் அம்மாவிடமிருந்து தந்தி பெற்றார் லுவால். 1937-ம் ஆண்டு கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்திடமிருந்து எம்.ஏ பட்டம் பெற்றார் அவர். அதில், ரசாயன விளைவுகளைத் தொடங்குவதற்கும் அதைப் பற்றித் தெரிந்துகொள்வதற்கும் ஒளியைப் பயன்படுத்தும், ஒளி வேதியலில் (photochemistry) கவனம் செலுத்தினார். பிரசித்திபெற்ற அமெரிக்க வேதியல் சமுதாய இதழில் (Journal of the American Chemical Society) சக மதிப்பாய்வு (peer-reviewed) செய்யப்பட்டு வெளியான சில கட்டுரைகளை இணைந்து எழுதினார் லுவால்.
"ஹார்வார்ட், விஸ்கான்ஸின் போன்ற பல கல்லூரிகளுக்கு பி.எச்.டி (PhD) படிப்புக்காக விண்ணப்பித்திருந்தேன். விஸ்கான்ஸினில் இருந்து எந்த பதிலும் வரவில்லை. ஆனால், ஹார்வார்டில் பாதி உதவித்தொகை (scholarship) கிடைத்தது " என்று ஜார்ஜ் ஹோடக் என்பவருக்குக் கொடுத்த அந்த 1988 நேர்கானலில் கூறினார் லுவால். கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் லுவாலின் இயற்பியல் மற்றும் கணித பேராசிரியர்களாக இருந்தவர்கள் தலையிட்டு, கால்டெக் (Caltech) பேராசிரியர் லைனஸ் பாலிங்கிடம் பேசி, கால்டெக்கில் பட்டதாரி உதவியாளருக்கான வாய்ப்பைப் பெற்றுக்கொடுத்தனர்.
கால்டெக்கில் தன் கடைசி 2 வருடங்களில் பாலிங்கிற்காகப் பணியாற்றினார் லுவால். அப்போது, ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்கும், தெற்கத்திய வெள்ளையர்களுக்கும் நிதி உதவி அளித்துவந்த ஜூலியஸ் ரேசன்வால்ட் நிதியின்மூலம் இவருக்கு ஃபெல்லோஷிப் (fellowship) உதவி கிடைத்தது. ஃபெல்லோஷிப் இயக்குநரான ஜார்ஜ் M.ரெனால்ட்ஸ், லுவாலுக்கான நிதி உதவியைத் தொடர்வதற்காக ஒரு ஆதரவுக் கடிதம் தரச்சொல்லி பாலிங்கிடம் கேட்டுக்கொண்டார்.
"திரு ஜேம்ஸ் E.லுவால் பெற்றுவரும் ரோஸன்வால்ட் நிதி மானியத்தை நீட்டிப்பதற்கு ஆதரவுக் கடிதம் கொடுப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். எங்களுடனான தன் பட்டதாரிப் படிப்பின்போது, திரு லுவால் மிகச் சிறப்பாக செயல்பட்டிருக்கிறார். அவர் தன் படிப்பைத் தொடர்ந்தால், 1940 ஜூன் மாதத்துக்குள் தன் முதுகலை ஆய்வை முற்றிலும் திருப்திகரமான முறையில் முடித்து தன் முதுகலை பட்டத்தை வெல்வார் என்பதில் எந்த ஐயமும் இல்லை. ஃபிஸ்க் போன்ற பல்கலைக்கழகத்தில் (Fisk University) தனக்கு ஒரு வேலை ஒதுக்கப்படும் என்று அவர் நம்புகிறார். பல்வேறு தகுதிகளைக்கொண்ட அவர், நிச்சயம் அப்படியொரு வேலை பெறுவார் என்று நானும் நம்புகிறேன்" என்று ரெனால்ஸுக்கு டிசம்பர் 20, 1938 அன்று எழுதினார் பாலிங்.
முனைவர் பட்டம் பெற்றபிறகு, ஃபிஸ்க் பல்கலைக்கழகம் ஒதுக்கிய கற்பிப்பாளர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார் லுவால். டென்னஸி மாநிலத்திலுள்ள நாஷ்வில் பகுதியில் இருக்கும் அந்த பல்கலைக்கழகம், அமெரிக்காவின் வரலாற்று ரீதியிலான கறுப்பர்களுக்கான கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழங்களுள் (Historically Black Colleges and Universities - HBCU) ஒன்று! (அதிகம் கொண்டாடப்படாத இன்னொரு ஆப்பிரிக்க அமெரிக்க நாயகியான டாக்டர் எவிலின் பாய்ட் கிரான்வில் (Granville) அதே ஃபிஸ்க் பல்கலைக்கழகத்தில்தான் பணிபுரிந்தார்).
லுவால் ஒலிம்பிக்கில் பங்கேற்பதற்கு ஓராண்டு முன்பு, "அவர் பல்கலைக்கழத்தில் அதிகம் விரும்பப்பட்ட ஒரு ஆண்" என்று கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் அவருடன் படித்தவர்கள் விவரித்தனர்.
நியூயார்க்கின் ரோசெஸ்டரில் இருக்கும் ஈஸ்ட்மன் கொடாக் (Eastman Kodak) நிறுவனத்தில் மூத்த வேதியல் ஆராய்ச்சியாளராக பொறுப்பேற்பதற்காக, 1941-ம் ஆண்டு, கல்வித்துறையை விட்டு வெளியேறினார் லுவால்.
"வேலை செய்வதற்கு கொடாக் நிச்சயம் சிறந்த இடம். அவர்கள் தங்கள் பணியாளர்களுக்கு நிறைய உதவுகிறார்கள். ஆராய்ச்சிக்கூடத்தில் இருந்த ஆண்கள், பெண்கள் எல்லோரும் என்னிடம் கனிவாகப் பழகினார்கள், மிகவும் உதவிகரமாக இருந்தார்கள். நான் செய்துகொண்டிருக்கும் வேலை பிடித்திருக்கிறது. இந்த வேலை சுவாரஸ்யமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. என்னோடு வேலை செய்பவர்களை எனக்குப் பிடித்திருக்கிறது " என்று எழுதியிருந்தார் லுவால்.
கொடாக் ஆராய்ச்சி ஆய்வகங்களில் பணிக்குச் சேர்ந்த முதல் ஆப்பிரிக்க அமெரிக்கர் லுவால்தான். 1953-ம் ஆண்டுவரை அங்கு பணியாற்றிய அவர், பல்வேறு பொறுப்புகள் வகித்தார். புகைப்படத்தை உருவாக்கும் செயலிகள் (photographic developing agents), சாயங்களின் நிலைத்தன்மையை பரிசோதிப்பது போன்ற ஆராய்ச்சிகளில் கவனம் செலுத்தினார் அவர்.
தன் வாழ்நாளில், பல்வேறு தொழில்துறை நிறுவனங்களில் பல்வேறு பதவிகளை வகித்திருக்கிறார் லுவால். மாஷசூட்ஸின் பர்லிங்டனில் இருக்கும் டெக்னிகல் ஆபரேஷன்ஸ், Inc. (Technical Operations, Inc.) நிறுவனத்தில் மூத்த விஞ்ஞானியாகவும், 1953 முதல் 1959 வரை புகைப்பட வேதியல் துறையின் தலைவராகவும் பணியாற்றினார். நியூயார்க்கின் சயாசட்டில் இருக்கும் ஃபேர்சைல்ட் விண்வெளி மற்றும் பாதுகாப்பு அமைப்பின் (Fairchild Space and Defense Systems in Syosset, New York) ஆராய்ச்சி இயக்குநராக 1968 வரை பணியாற்றினார். கலிஃபோர்னியாவுக்குத் திரும்பிய லுவால், 1971 முதல் 1975 வரை பாலோ ஆல்டோ ஆராய்ச்சி மற்றும் பொறியியல் நிறுவனத்தில் ஆராய்ச்சி ஒருங்கிணைப்பாளராக இருந்தார். ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் இளங்களை வேதியில் ஆய்வகங்களின் இயக்குநராகவும் பணியாற்றினார்.
தன் வாழ்நாளில் முப்பதுக்கும் மேற்பட்ட, சக மதிப்பீடு செய்யப்பட்டு விஞ்ஞான இதழ்களில் வெளியான ஆய்வுக்கட்டுரைகளை எழுதியிருக்கிறார் லுவால். மேலும், 8 காப்புரிமைகளும் இவர் பெயரில் இருக்கிறது. 1987-ம் ஆண்டு, முன்னாள் மாணவர்களுக்கான சிறப்பு சேவை விருதை கலிஃபோர்னியா தொழில்நுட்ப நிறுவனத்திடமிருந்து பெற்றார் லுவால். கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்திடமிருந்து (UCLA) தொழில்முறை சாதனையாளர் விருது பெற்றார் அவர். அதன் மாணவர் மன்றத்துக்கு 1985-ம் ஆண்டு இவர் பெயர் வைக்கப்பட்டது.
தன் மனைவி ஜீனை 1946-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார் லுவால். அவரும் வேதியல் நிபுணரே. இந்தத் தம்பதிக்கு மூன்று குழந்தைகள். அவர்கள் அனைவரும் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் ஆகிய துறைகளைத் தேர்ந்தெடுத்தனர். அவர்களின் மூத்த மகன் ஜான் வெர்னான், வில்லியம்ஸ் கல்லூரியில் இயற்பியல் பட்டம் பெற்றார். இளைய மகன் மைக்கேல் ஜேம்ஸ், டேவிஸ் நகரில் இருக்கும் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்திடமிருந்து புள்ளியியலில் (statistics) முனைவர் பட்டம் பெற்றார். அவர்கள் மகள் ஃபில்லிஸ் ஆன், யூடா பல்கலைக்கழகத்தில் மூலக்கூறு உயிரியலில் (molecular biology) முனைவர் பட்டம் பெற்றார்.
1988-ல் ஹோடக் உடனான நேர்கானலில் தன் குழந்தைகள் பற்றி பாசமாக நினைவுகூர்கிறார் லுவால். தன் மகளைக் காட்டி, "இதோ இந்த இளம் பெண் இருக்கிறாளே, இவளிடம் இளம் வயதில் அறிவியல் என்ற வார்த்தையைச் சொன்னாலே முகத்தைச் சுளிப்பாள். என் குழந்தைகள் அனைவரைப் பார்த்தும் பெருமைப் படுகிறேன். என் மகளால் அதிகம் பெருமைப் படுகிறேன்" என்று கூறிய லுவால், 1993-ம் ஆண்டு காலமானார்.
விளையாட்டு, கல்வி இரண்டிலும் கவனம் செலுத்தியதைப் பற்றி அந்த நேர்கானலில் கேட்கப்பட்ட கேள்விக்கு, தான் எதற்கு முன்னுரிமை கொடுத்தார் என்பதைத் தெளிவாக்கினார் லுவால். "இளவேனிற்காலத்தில் (spring) ஓடுவதற்கு, இலையுதிர் காலத்தில் (fall) நிறைய படிக்கவேண்டியிருக்கும். அதுமட்டுமல்லாமல் கோடை காலத்திலும் சில பாடங்களை எடுத்துக்கொள்வேன். அதனால், இளையுதிர்காலத்தில் படிப்பதற்குக் குறைவாகவே இருக்கும். வெளியே சென்று போட்டிகளில் பங்கேற்கமுடியும்" என்று கூறினார் லுவால்.
"நினைவுகொள்ளுங்கள், இந்தக் காலகட்டத்தில் தடகளம் இரண்டாவது ஆப்ஷன்தான். முக்கியமாக நான் அறிவியலில் பட்டம் பெறுவதற்கு முயற்சி செய்துகொண்டிருந்தேன். வேதியல், இயற்பியல், கணிதம் மூன்றும்தான் என் முக்கியப்பாடமாக இருந்தது. அது என்னை பரபரப்பாக வைத்திருந்தது" என்றும் கூறினார் லுவால்.
சப்ரினா காலின்ஸ் ஒரு ஆர்கானோமெடாலிக் (organometallic) வேதியல் நிபுணர். அதுமட்டுமல்லாமல் வாஷிங்டன் டி.சி-யில் இருக்கும் அறிவியல் முன்னேற்றத்துக்கான அமெரிக்க கூட்டமைப்பின் (American Association for the Advancement of Science) முன்னாள் எழுத்தாளர் மற்றும் ஆசிரியர். மிச்சிகனின் சவுத்ஃபீல்ட் பகுதியில் இருக்கும் லாரன்ஸ் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின், மார்பர்கர் ஸ்டெம் செண்டரின் (Marburger STEM Center) முதல் நிர்வாக இயக்குநராக ஜூலை 2016-ல் பதவியேற்றார் அவர்.
மொழிபெயர்ப்பு
மு.பிரதீப் கிருஷ்ணா
பத்திரிகையாளர். வர்ணனையாளர். விளையாட்டைப் பேசுவதும் எழுதுவதுமே பொழுதுபோக்கு, தொழில், வாழ்க்கை!
UNDARK
Undark is a non-profit, editorially independent digital magazine exploring the intersection of science and society. This article is a translated version of the original article "Unsung: James Ellis LuValle" by Sibrina Nichelle Collins.