ஏன் நாம் கொட்டாவி விடுகிறோம்?. ஏன் இது தொற்றிக்கொள்ளக் கூடியதாக இருக்கிறது?

  • Gopi
  • மரினா கோரென்
    தமிழில்: வி கோபி மாவடிராஜா

ஏன் நாம் கொட்டாவி விடுகிறோம் என துல்லியமாக கூறுவது கொஞ்சம் கடினமான காரியம். ஆனால், நாம் விடும் கொட்டாவி நமது மூளையின் வெப்பநிலையை ஒழுங்குப்படுத்த உதவி செய்வதாக சமீபத்திய ஆராய்ச்சிகள் கூறுகின்றன. Yawning

ஆரம்பக் காலம்தொட்டே மனிதர்கள் கொட்டாவி விடுகிறார்கள். கருவில் இருக்கும் பச்சிளம் குழந்தைகள் கூட கொட்டாவி விடுகிறது. புகைப்படம்: Flickr user Björn Rixman பாம்புகளும் மீன்களும் கூட இதைச் செய்கின்றன. பூனைகளும் நாய்களும் தான். கருவில் இருக்கும் குழந்தைகள் கூட இதைச் செய்கின்றன. மேலுள்ள படத்தைப் பார்த்தப் பிறகு, ஒருவேளை நீங்களும் கொட்டாவி விட்டுக் கொண்டிருக்கலாம். விலங்குகளின் ராஜ்ஜியத்திலும் கொட்டாவி நீக்கமற நிறைந்திருக்கிறது. இது பரவலான அம்சமாக இருந்தாலும், ஏன் கொட்டாவி ஏற்படுகிறது அல்லது மனிதர்கள் மற்றும் அவர்களின் நெருங்கிய உறவினர்களான பாலூட்டிகளுக்கு ஏன் கொட்டாவி தொற்றிக்கொள்ளக் கூடியதாக இருக்கிறது என்பதை இதுவரை விஞ்ஞானிகளால் கூற முடியவில்லை.

இந்த நடத்தை முக்கியமான ஆராய்ச்சி தலைப்பாக இல்லை என்பதை கொட்டாவி நிபுணர்களே ஒத்துக்கொள்கிறார்கள். இருப்பினும், இந்தக் கேள்விகளுக்கான பதிலை அவர்கள் நெருங்கி விட்டார்கள் என்றே கூறலாம். நம் வாயை அகலமாக திறக்கும்போது, ஆக்சிஜன் நிரம்பிய காற்றை நாம் உள்ளிழுக்கிறோம். நமது ரத்த ஓட்டத்தில் நுழையும் ஆக்சிஜன், மேஜையில் நாம் தூங்கி விழும்போது எழும்ப உதவி செய்கிறது. ஏன் நாம் கொட்டாவி விடுகிறோம் என்பதற்கு எப்போதும் கொடுக்கப்படும் விளக்கம் இதுதான். என்ன, நம்பும்படியாக இருக்கிறதா? துரதிஷ்டவசமாக, இந்த விளக்கம் உண்மையில் ஒரு கட்டுக்கதை என்கிறார் ஜார்ஜியா வினெட் கல்லூரியின் உளவியல் பேராசிரியர் ஸ்டீவன் ப்ளேடெக். ரத்த ஓட்டத்தில் உள்ள ஆக்ஸிஜனையும், ரத்த அழுத்தத்தையும், இதய துடிப்பின் அளவையும் கொட்டாவி குறைப்பதாக கூறப்படுவதற்கு இதுவரை எந்த ஆதாரமும் இல்லை.

மனித உடலில் மிகவும் சிக்கலான அமைப்பான மூளையில்தான் கொட்டாவியின் உண்மையான செய்லபாடு இருப்பதாக அனுமானம் ஒன்றுள்ளது.

தாடையை நீட்டி, வாயை விரித்து, மூச்சை ஆழமாக உள்ளிழுத்து, மெதுவாக வெளியிடுவதே கொட்டாவி. இது தெர்மோரெகுலேட்டரி பொறிமுறையாக (thermoregulatory mechanism) செயலாற்றுகிறது. வேறு வார்த்தையில் கூற வேண்டுமென்றால், இது ரேடியேட்டர் (radiator) போன்று செயல்படுகிறது. மற்றவர்கள் கொட்டாவி விடும் வீடியோவை பார்க்கையில், அவர்கள் நெற்றியில் சூடான அல்லது குளிர்ந்த துணியை வைக்கும் போது கொட்டாவி விடுவதில் அது எந்தளவிற்கு செல்வாக்கு செலுத்துகிறது என்பதை 2007-ம் ஆண்டு நடத்திய ஆய்வில் கண்டறிந்தார் கலூப். பங்கேற்பாளர்கள் தங்கள் நெற்றியில் சூடான துணியை வைத்திருக்கும் போது, அந்த சமயத்தில் 41 முறை கொட்டாவி விடுகிறார்கள். குளிர்ச்சியான துணியை வைத்திருக்கும் போதோ, கொட்டாவி விடுவது 9 சதவிகிதமாக குறைந்து போகிறது.

உடலின் வளர்சிதை ஆற்றலில் 40 சதவிகிதத்தை மனித மூளை எடுத்துக்கொள்கிறது. இதன் காரணமாக மற்ற உறுப்புகளை விட இது அதிகமாக சூடாகிறது. நாம் கொட்டாவி விடும் போது, அதிகளவிலான காற்று நம் மேல் நாசி மற்றும் வாய் வழியாக செல்கிறது. டன் கணக்கிலான ரத்த குழாய்களால் மூடப்பட்டுள்ள சளி சவ்வுகள் (mucus membranes) மூளையின் முன்பகுதிக்கு மேல் நேரே உள்ளது. நாம் தாடைகளை நீட்டும்போது, மண்டையோட்டிற்குச் செல்லும் ரத்த வேகமும் அதிகரிப்பதாக கூறுகிறார் கலூப். அதே சமயத்தில் நாம் மூச்சை உள்ளிழுக்கும் போது, ரத்த ஓட்டத்தின் வெப்பநிலையை மாற்றும் காற்று, குளிர்ச்சியான ரத்தத்தை மூளைக்குள் செலுத்துகிறது.

Yawning

எலிகளிடம் நடத்திய ஆய்வில், கொட்டாவி வருவதற்கு முன்பு மூளையின் வெப்பநிலை அதிகரிப்பது தெரியவந்துள்ளது. எலிகள் வாயை விரித்து மூச்சை உள்ளிழுக்கும் போது, வெப்பநிலை குறைகிறது. “ரத்தத்தில் ஆக்சிஜனை அதிகரிக்கும் பொறிமுறைக்கு மாறாக, கொட்டாவி மூளையை குளிர்ச்சியாக்கும் பொறிமுறையாக செயல்படுகிறது” எனக் கூறுகிறார் ப்ளேடெக்.

ஏன் நமக்கு எப்போதும் தூங்கப் போகிற சமயத்திலோ அல்லது தூக்கத்திலிருந்து எழும்பிய உடனேயோ கொட்டாவி ஏற்படுகிறது என்பதை தெர்மோரெகுலேட்டரி பொறிமுறை விளக்கம் கொடுக்கும். “நாம் தூங்குவதற்கு முன்பு, நமது சர்க்கேடியன் இசைவின் (circadian rhythm) போது நம் மூளையும் உடல் வெப்பநிலையும் உச்ச நிலையில் உள்ளதாக” காலூப் கூறுகிறார். நாம் தூங்கும் போது இந்த வெப்பநிலை படிப்படியாக குறைகிறது. இதற்கு கொட்டாவியும் ஒரு காரணம். “ஆனால், நாம் தூங்கி எழுந்ததும், நம்முடைய மூளையும் உடல் வெப்பநிலையும் நாளின் மற்ற எந்த நேரத்தை விடவும் வேகமாக அதிகரிக்கிறது.” சராசரியாக ஒரு நாளைக்கு எட்டு முறை நாம் கொட்டாவி விடுகிறோம் என்கிறார் காலூப். காலை கொட்டாவிக்குப் பிறகு ஏன் நாம் புத்துணர்ச்சியாக உணர்கிறோம் என்ற காரணத்தை விஞ்ஞானிகள் இன்னும் சுட்டிக்காட்டவில்லை. மூளை குளிர்ச்சியாகத் தொடங்கியதும் அதிக ஆற்றலோடு செயல்படுகிறது. இதன் விளைவாக நாம் அதிக சுறுசுறுப்போடு இருக்கிறோம் எனக் கருதுகிறார் ப்ளேடெக்.

நமது மூளையை குளிர்ச்சியாக வைக்க வேண்டும் என்ற உயிரியல் தேவை ஆரம்பகால மனிதர்கள் மற்றும் பிற விலங்குகளின் சமூக வலைபின்னலுக்குள் மெதுவாக நுழைந்திருக்கலாம். “கொட்டாவி விடுவதை நான் பார்க்கும்போது, அது தானாக உள்ளுனர்வு நடத்தையை சமிக்ஞை செய்து மூளையை சூடாக்குகிறது. அப்படியென்றால் நான் அருகில்தான் இருக்கிறேன். உடனடியாக எனது நரம்பியல் செயல்முறைகளை ஒழுங்குப்படுத்த வேண்டிய தேவை இருக்கும்” எனக் கூறுகிறார் ப்ளேடெக். ஆழ்மனதின் இந்த நகலெடுப்பு நடத்தை தனிநபர்களின் எச்சரிக்கை உணர்வையும், குழுவாக இயங்கும் போது அவர்களின் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்பையும் மேம்படுத்துகிறது.

ஏனென்றால், சமூக விலங்குகளிடம் உள்ளார்ந்து இருக்கக்கூடிய பரிந்துணர்வின் தயாரிப்பாக கூட கொட்டாவி இருக்கலாம். மனிதர்களிடத்தில் மற்றவர்களின் உணர்ச்சிகளை புரிந்துகொள்ளவும் உணர்ந்து கொள்ளவும் திறன் இருக்கிறது. நமக்குள் ஏற்கனவே இருக்கும் உணர்ச்சிகளை நாம் கிளறி விடுவதே இதற்கு காரணம் என எமோரி பல்கலைக்கழகத்தில் உள்ள யெர்க்ஸ் தேசிய விலங்குகள் ஆய்வு மையத்தில் ஆய்வாளராக இருக்கும் மேத்யூ கேம்பல் கூறுகிறார். யாராவது ஒருவர் சிரிப்பதையோ அல்லது கோபப்படுவதையோ நாம் பார்க்கும் போது, நாமும் சந்தோஷமாக அல்லது சோகமாக இருப்பது போல் நடிக்கிறோம். கொட்டாவியும் இப்படித்தான் நம்மிடம் தொற்றிக் கொள்கிறது. மற்றவர்கள் கொட்டாவி விடுவதை நாம் பார்ப்பதால், நாமும் கொட்டாவி விடுகிறோம். “உங்களிடம் வேண்டுமென்றே பரிந்துணர்வு (empathize) காட்ட வேண்டும் என்ற முயற்சி அல்ல இது. நமது உடலும் மூளையும் எப்படி பணியாற்றுகிறது என்பதின் உபவிளைவே (byproduct) இது” என்கிறார் கேம்பல்.

60 முதல் 70 சதவிகித மக்களுக்கு எளிதாக கொட்டாவி தொற்றிக்கொள்ளும் வாய்ப்புள்ளது. அதாவது, கொட்டாவி விடும் புகைப்படங்களையோ அல்லது காணொளியையோ அல்லது அதைப் பற்றி படித்தாலோ பெரும்பாலானோர் கொட்டாவி விட ஆரம்பித்து விடுவார்கள் என ப்ளேடெக் கூறுகிறார். பரிந்துணர்வு புரிதல் அளவீடுகளில் அதிக மதிப்பெண் பெறும் தனிநபர்களுக்கே பெரும்பாலும் இந்த நிகழ்வு ஏற்படுவதாக அவர் கண்டறிந்துள்ளார். FMRI (functional magnetic resonance imaging) ஸ்கேனை பயன்படுத்தி, மற்றவர்களிடம் இருந்து கொட்டாவி தொற்றும்போது மூளையின் சில பகுதிகளை தூண்டுவதாக அவர் கண்டுபிடித்துள்ளார். நம்முடைய மற்றும் பிறருடைய உணர்ச்சிகளை பக்குவப்படுத்துவதில் பின்புற சிங்குலேட் (cingulate) மற்றும் ப்ரிகுனஸ் (precuneus) முக்கிய பங்காற்றுகிறது. ‘உங்கள் நிலையில் என்னை நிறுத்தி, உங்கள் சூழ்நிலையை புரிந்துகொள்வதே எனக்கு கொட்டாவி தொற்றிக்கொள்வதற்கான முன்கணிப்பாக இருக்கிறது” என அவர் கூறுகிறார்.

மனிதர்களின் நெருங்கிய உறவினர்களும், அதன் சமூக இயல்புகளால் வகைப்படுத்தப்பட்ட விலங்குகளுமான சிம்பன்சிகள் மற்றும் பொனொபோக்களிடமும் கொட்டாவி தொற்றிக்கொள்ளும் பழக்கம் காணப்படுகிறது. இப்போது கேள்வி ஒன்று தொக்கி நிற்கிறது: சிம்பன்சிகளுக்கும் பொனொபோக்களுக்கும் (bonobos) பரிந்துணர்வை உணர்ந்து கொள்ளும் திறன் இருப்பதற்கான ஆதாரமாக அவைகளின் கொட்டாவி தொற்றிக்கொள்ளும் திறனை எடுத்துக் கொள்ளலாமா?

கொட்டாவி தொற்றிக்கொள்ளக் கூடியது மட்டுமல்லாமல், அதிகமாக தூண்டுதல் ஏற்படுத்தக் கூடியதாகவும் இருக்கிறது. ஆங்கிலப் பேச்சாளர்களுக்கு “கொட்டாவி” எனும் வார்த்தை, செயலுக்கான அங்கீகாரம், அர்தத்தை உருவாக்க நாம் கற்றுக்கொண்ட அடையாளம். நாம் அந்த வார்த்தையை அல்லது செயலை கேட்கும்போதோ அல்லது வாசிக்கும் போதோ அல்லது நினைக்கும் போதோ, அந்த அடையாளம் மூளையில் “தூண்டுதலாக” மாறுகிறது. “இது எல்லா சமயங்களிலும் நடைபெறாது. ஆனால் சில சமயங்களில் இது மேலெழும்புகையில், உங்கள் மூளையில் போதுமான தூண்டுதல் ஏற்பட்டு நீங்கள் கொட்டாவி விடுகிறீர்கள்” என்கிறார் கேம்பல்.

  • அறிவியல்
Gopi

மொழிபெயர்ப்பு

வி கோபி மாவடிராஜா

முழுநேர மொழிபெயர்ப்பாளர் மற்றும் சுதந்திர ஊடகவியலாளர். கதைகளிலும் விளையாட்டு இதழியலிலும் ஆர்வம் கொண்டவர்.

Smithsonian Logo

SMITHSONIAN MAGAZINE

Smithsonian magazine places a Smithsonian lens on the world, looking at the topics and subject matters researched, studied and exhibited by the Smithsonian Institution—science, history, art, popular culture and innovation—and chronicling them every day for our diverse readership. This article is a translated version of the original article "Why Do We Yawn and Why Is It Contagious?" by Marina Koren.